ராபர்ட் க்ளைவ்

ஆந்திரா கடப்பா சென்று ஒரு சின்ன பயணத்தில் காலசப்பாடு சென்று குந்தன் என்று கேட்டால் நான்கு தெருக்கள் திரும்பி கோவில் ஒன்று நீட்டி அமர்ந்த ஒரு வீதியில் நடுவில் அவன் வீடு இருக்கும் என்பார்கள்.

குந்தன் தன்னை ராபர்ட் க்ளைவ் என்று அழைத்து கொள்வான்.
அந்த பெயர் அவனுக்கு பிடித்த காரணம் அவனுக்கு மட்டுமே தெரிந்த ஒன்று.

கேரளா கொல்லம் சென்று குன்னத்தூர் போனால் பொருவழி கிராமத்தில் நாடு சுதந்திரம் பெரும் முன்பே சில பஞ்சமி நிலங்களை குந்தனின் பாட்டனார் தன் காலத்தில் விவரமாய் அமுக்கி வைத்து கொண்டு அதற்கான தீர்வைகள் கட்டி ஆண்டு அனுபவித்து தாத்தாவும் அப்பாவும் போய் சேர்ந்து பின் ஒருநாளில் குந்தனுக்கு தெரிந்தது கேரளாவில் தனக்கு நிலம் இருக்கும் விஷயம்.

குந்தன் தன் பள்ளி காலம் முதல் தன் தாயுடன் தாய் வழி அப்பா இருக்கும் ஆந்திராவில் வசித்து வந்தான்.

சொத்து விபரம் அனைத்தும் அங்கே சுற்றி கொண்டிருந்த ஒரு மிளகாய் வத்தல் வியாபாரி துப்பறிந்து சொல்லி ரியல் எஸ்டேட் ஏஜெண்ட் பங்காரு நாயர் அடித்து பிடித்து பஸ் ஏறி மூச்சு முட்ட குந்தனிடம் சொல்லும்போது அதன் மதிப்பு பத்து கொடியை தாண்டி மின்னியது.

குந்தன். இனி அவன் க்ளைவ். ராபர்ட் க்ளைவ்.

நாயரின் கையை பிடித்து கொண்டான். கண்களில் ஒற்றி கொண்டான். என்னே ஒரு அன்பு உங்களுக்கு.

"பின்னெ ஸார் ஒரு ஈசி போட்டாங்கிள் மதி. லீகல் ஹெய்ர் எல்லாம் புரோக்கர் வச்சு கெஸட்டில் ஞான் ஆக்கித்தரும். வல்லிய விலை கிட்டுஞ் சமயத்தில் ஞான் விளிக்கும். அப்போ சார் வந்தா மதி."

க்ளைவ் மடியில் நாயர் பத்து கோடியோடு புரண்டு க்ளைவை ஒரு குபேரனாக்கி வைத்து மனதில் பூஜித்தார்.

ஆறேழு மாதங்கள் கழித்து க்ளைவ் கொல்லம் சென்றான். நாயர் நின்று பல்லெல்லாம் வாயாய் வரவேற்றார்.

கூடவே இருந்த ஒரு ஆஜானுபாகுவான நபரிடம் க்ளைவை காட்டி எர்ணாகுள மலையாளத்தில் சம்சாரிக்க அவரும் விஷயம் அறிந்தவராய் தலையாட்டினார்.

அவர் குரியன் ஜோசப். கொச்சின். நிவ்யா கன்ஸ்ட்ரேக்ஷன்.

மாலையில் நாயருடன் சந்திக்கலாம் என்று குரியன் கூறியதும் வணங்கி விடைபெற்றான்.

க்ளைவ் ரயில் நிலையம் விட்டு வெளியேறி முன்பே புக் செய்திருந்த லாட்ஜுக்கு சென்றான்.

சரியாய் இரண்டு மணி நேரத்தில் அவன் அறைக்கு கிடதி ஆசிரமத்து நிர்வாகி வந்தார்.

நமஸ்காரம்...காற்றுக்கெல்லாம் காற்று ஈசன் என்று அமர்ந்தார். அந்த பீட அதிபதி தன் பக்தகோடிகளால் நிமுத்து
பெரும்வரை இந்த மாதிரி வரிகள் புகழ் பெற்று இருந்தன.

க்ளைவ் அமைதியாக இருந்தான்.

"சொற்ப இடம் குடுத்தீங்கனா ஒரு மடம் கட்டி அப்படியே ஆன்மீக சேவை, அந்நியர் கிட்டே இருந்து இந்து மதத்தை காக்கும் வேலை னு இறங்கிடலாம். விலை கூட பொருட்டில்லை. நல்ல இடம்.குளுமை. காற்று. வெளிநாட்டு பக்தருக்கு ரொம்ப பிடிக்கும். கூப்டீங்க வந்துட்டோம்...பேசிடலாமே" என்றார்.

கிழக்கு புறத்தில் நீங்கள் வேலி கட்டி கொள்ளுங்கள். மற்றவை குறித்து பின் முடிவு செய்யலாம் என்றான் க்ளைவ்.

பெரும் கும்பிடை உதிர்த்து கிளம்பினார் நிர்வாகி.

சற்றே ஓய்வு கொண்ட மதியத்தில் அவன் அறைக்கு அந்த சமூக சேவகர் வந்திருக்கும் செய்தி வந்தது.
அவரையும் கிளைவ் முன்பே தொடர்பு கொண்டு இருந்தான்.

உள்ளே அழைத்து அமர செய்தான்.

"பாத்தீங்கன்னா எல்லாம் ஏழைப்புள்ளைங்க. யாரோ பெத்து எங்கேயோ தூக்கி போட்டு பொழச்ச மிச்சம் இந்த புள்ளிங்க". ஒரு அஞ்சு சென்ட் குடுத்தீக னா குடிசை போட்டு உங்க பேர் சொல்லி காப்பாத்திக்கிடுவோம். பாத்தீங்கன்னா நான் தமில்நாடுதான். மகான் பிறந்த ஊர்" என்றார்.

தமிழ்நாட்டில் மஹான்களுக்கு பஞ்சம் இல்லையே...யார்? என்ன ஊர்? என்றான் க்ளைவ்.

பேர் சொல்ல முடியுமா...பெரியார்...என்றார்.

பெரியார்?.. மஹானா? க்ளைவ் சற்று குழம்பி அவர் முகத்தை பார்த்தான்.

பள்ளிக்கோடத்தில் அவரை படிச்சத்துங்க என்றார்.

ஸ்கூல் புத்தகத்தில் யார் பற்றிய வரலாறும் அப்படித்தான் இருக்கும்.

பெரியார் மண்ணு. ஈரோட்டுக்காரன் நான்.
பேரு "ஸ்டாலின் வேரா" என்றார். அந்த வேரா குவேரா வா என்று கேட்க க்ளைவுக்கு விருப்பம் இல்லை.

க்ளைவ் பேச்சை இன்னும் வளர்க்க விருப்பம் இன்றி நிலத்தில் ஒரு ஐந்து சென்ட்டில் மேற்கு புறத்தில் தற்காலிக குடியிருப்பை போட்டு கொள்ள அனுமதித்தான்.

வாசல் வரை வந்து வழி அனுப்பி வைக்கும்போதுதான் வேரா போர்டு கார் வைத்திருந்தது தெரிந்தது.

மாலையில் நாயர் வந்தார். குரியனிடம் தென் வடலாக ஒரு விளம்பர பலகை வைத்து கொள்ள அனுமதித்தான் க்ளைவ்.

நாயர் மீண்டும் பல்லெல்லாம் வாயாய் மலர்ந்து நாளைக்கு சார் சைட்டுக்கு வரணும் என்றார்.

அதுக்கென்ன நாயர் நாளை நிச்சயம்.

மறுநாள்.

அந்த பரந்த நிலத்தில் அவசர அவசரமாக யார் யாரோ இறங்கி கம்பும் கல்லும் நிலத்தில் திணித்து பணியாற்றி கொண்டு இருந்தனர்.

நாயர் பெரும் கவலையோடு க்ளைவ் முகத்தை பார்த்தார்.

"க்ருஷி பூமி சார். கனமான வெள்ளம் கிட்டும். இப்படி பண்ணிட்டியலே. குரியன் முழு லேண்டும் கிட்டினால் மட்டும் பில்டிங் கட்டும்" என்றார்.

நாயர்...சட்டபூர்வமான எல்லா வில்லங்கமும் தீர்ந்து என் பெயரில் நிலம்
மாற்ற எத்தனை நாள் ஆகும்?

"அது ஆகும் சாரே...மூணு மாசம் கூட. பார்த்துகிடுங்க இந்த எலெக்ஷன் அடுத்த மாசம் முடிஞ்ச பெறவு ஒரு மாசத்தில் கெஸட்டில் உங்க பேர் வந்து பின்னாடி ஒரு நோ அப்ஜெக்ஷன் வாங்க ஒரு மாசம்".

அப்பறம் பாத்தீங்கன்னா டாக்ஸ் கட்டி ரெவின்யூ ஆபிஸ்ல நேம் ட்ரான்ஸ்பெர் ஆயிடும் பாத்துகிடுங்க.

நாயர்...அது வரை மட்டுமே அவர்கள் இருப்பார்கள். அவர்கள் நீங்கள் இங்கே வரும்போது உங்கள் பேச்சு துணைக்கு மட்டும் இருப்பவர்கள். புரிந்ததா?

நாயர் கொல்லென்று சிரித்தார்.

ஓ...சாரே...மதி...மதி...இது பூராம் புரிய மூளை வேணும் சாரே... படிச்சவுங்க படிச்சவுங்கதான்...

நாயர் கெக்களித்தார்.

கிளைவ் புன்னகைத்தான்.

கிளைவ் விடைபெற்று ஊருக்கு கிளம்பினான்.

**************

நான்கு நாய்கள் அவனுக்கு கிடைத்து இருந்தன. நான்கு வர்ண நாய்களும் ஒன்றை ஒன்று முறைத்து கொண்டன.
ஒன்றை ஒன்று கடிக்க ஆரம்பித்தபோது க்ளைவ் புத்தி சொன்னான்.

நாய்கள் ஒற்றுமையாக இருந்து அங்கே சுற்றி சுற்றி வரவேண்டும். ஒன்றுடன் ஒன்று அன்பாய் இருக்க வேண்டும் என்று பணித்தான். சோற்றை காட்டினால் நாய்கள் அன்பானவை. வீரியமான பணத்தை காட்டினான் கிளைவ்.

அந்த நாய்கள் மொபைலில் க்ளைவ் பெயர் சொல்லி ஒலித்தபோது வால் உயர்த்தி ஆட்டின. பூமியில் கால் வளைத்து நெஞ்சு உரச ஆனந்தமாய் ஊளையிட்டு நன்றி பாராட்டின.

இந்திய நாய்களின் குருட்டு விசுவாசம் உலகம் போற்றும் ஒன்று என்பது க்ளைவ் நன்கு அறிந்த ஒன்றுதான்.

நாய்கள் பகைமை மறந்து நிலத்தில் புரண்டு விளையாடி பிட்டி முகர்ந்து மூத்திரமடித்துக்கொண்டு அங்கேயே சுழன்று கொண்டிருந்தன.

நிலம் பிற அந்நியர் உட்புக முடியாமல் மூன்றாம் நபரின் அரசியல் தலையீடு இல்லாமல் வர்ண நாய்கள் காப்பாற்றி கொண்டு வந்தன. உள்ளூர் எரிச்சல் பிடித்தவர்கள் யாரிடம் எதை எப்படி கேட்பது என்பது புரியாமல் விலகி சென்றனர்.

மடம் என்றார்கள். கோவில் என்றார்கள். ஆசிரமம் என்றார்கள். மல்டி ஸ்டோர் பில்டிங் என்றார்கள்.
நாய்கள் ரத்தம் வரும் வரை தங்களுக்குள் குதறி கொண்டாலும் பிறர் வந்தால் விரட்டின.

தேர்தல் அறிவிப்பு வந்தபோது க்ளைவ் மும்பை பயணம் மேற்கொண்டான்.


***************

அது மெர்லின் என்ற பெயரில் இயங்கும் துபை தலைமை இடமாக கொண்ட ஒரு பன்னாட்டு நிறுவனம்.
அந்த கட்டுமான நிறுவனம் உலக அளவில் பெயர் பெற்றது.

மற்ற நாடுகளில் எப்படியோ.. இந்தியாவில் கலர் கலர் காகிதங்களில் கையெழுத்து வாங்கி கொண்டு குறைந்த விலையில் அழகான வீடுகள் கட்டி கொடுக்கும். வெறும் ஹாலோ ப்ளாஸ்க்கால் ஒட்ட வைக்கப்பட்ட வெறும் சித்திரம் என்று தெரிந்தாலும் இந்திய நாய்கள் அதை காட்டிக்கொள்ளாது.

கலர் காகிதங்களை வைத்து நிமிண்டி விடுவார்கள்.

வாருங்கள் குந்தன். அந்த கம்பெனியின் இந்திய சீஃப் எக்ஸிக்யூடிவ் ஆபிசர் அன்போடு வரவேற்றார்.


க்ளைவ் என்றும் அழைக்கலாம் நீங்கள். அது என் விருப்பமான தலைவரின் பெயரும் கூட.

இஸ்மாயில் சிரித்தார்.

ஆனாலும் உங்கள் கேரள நிலத்தில் எத்தனை உயிர்கள் இப்போது சுகமாய் வாழ்கிறது தெரியுமா உங்களுக்கு?
எத்தனை சலுகைகள் கொடுத்து அவர்களை அங்கே அமர்த்திவிட்டு எங்கள் நிர்வாகத்தோடும் இடம்
விற்பனைக்கு என்று விளம்பர முகவர்களை தொடர்பும் கொண்டு இருக்கிறீர்கள்.
அப்படித்தானே நண்பர். எங்கள் சோர்ஸ் அபாரமாய் துப்பறிபவர்கள். சொல்லுங்கள், அதன் உண்மை நிலவரம் மற்றும் உங்கள் திட்டம் என்ன என்பதை..

க்ளைவ் ஒரு ஃபைல் எடுத்து நீட்டினான்.

அதை வாசித்து விட்டு இஸ்மாயில் நிமிர்ந்தார்.

இவர்கள்?

ஒருவர் காசர்கோட் இன்னொருவர் பத்தனம்திட்டா. ஒருவர் காங்கிரஸ். இன்னொருவர் கம்யூனிஸ்ட். இந்த இருவருக்கும் நீங்கள் உங்கள் கம்பெனி மூலம் இந்த தேர்தலுக்கு முடிந்த தேர்தல் நிதியை நீங்கள் தர வேண்டும்.

இஸ்மாயில் புரிந்துகொண்டார்.

பின் இஸ்மாயில், குல்லாவும் காம் ரெட்டும் இணைந்து பணியாற்றுவார்கள். மூன்று மாதத்தில் அந்த இடம் சுத்தம் ஆகி விடும். உங்கள் பணியை நீங்கள் எளிதில் துவக்க முடியும்.

வாவ்...காம்ரேட்...கிளைவ் கை பற்றி குலுக்கினார்.

ஒரு செலவும் இல்லாது எத்தனை வேட்டை நாய்களை அங்கே வைத்து உள்ளீர்கள்.
அங்கும் யாரும் நுழைய முடியாது. இங்கும் கேள்வி கேட்க முடியாது.

மன்னிக்கவும் இஸ்மாயில்...நாய்கள் என்று சொல்வதை கடுமையாக எச்சரிக்கிறேன்.

மூன்று வினாடிகள் கழித்து குப்'பென்று சிரித்து தங்களுக்குள் அணைத்து கொண்டனர்.

நாயரிடம் அப்போது போன் வந்தது.

"சாரே...தொண்ணுறு சதமானம் முடிஞ்சது. பாத்துகிடுங்க... இந்த அன்னாட காய்ச்சி பயலுவ வர்றது போறது தெரியாமல் வெளாடிட்டு இருக்கும் சாரே...நான் இருக்கேன் உங்களுக்கு மலை மாதிரி.
பாத்துகிடுங்க அடுத்த மாசம் நீங்க கோடீஸ்வரர். அம்மே...பகவதி" என்றார்.

எல்லாம் பகவதி அருள் நாயர். சீக்கிரமே நாம் சந்திக்கலாம். நீங்கள்தான் அந்த இடத்து முதலாளி. பார்த்து கொள்ளுங்கள்.

க்ளைவ் மெர்லின் நிறுவனத்தோடு வியாபாரம் முடித்து கிளம்பினான்.

**************

வீட்டுக்கு க்ளைவ் வந்ததும் மகளோடு விளையாடி கொண்டிருந்தான்.

"ஏம்பா, ராபர்ட் க்ளைவ் கடைசீல பைத்தியம் பிடுச்சு கழுத்து அறுத்து செத்து போனானா... இன்னிக்கு பவித்ரா நான் படிக்கும்போது சொன்னா..என் புஸ்தகத்தில் அப்படி போடவே இல்ல. இது உண்மையாப்பா"?

தெரில கண்ணு. இந்தியால இப்போ லட்சம் கிளைவ் இருக்காங்க. அவங்களை நாம் லேசா நினைக்க கூடாது. ஸ்கூல் புஸ்தகத்தை நல்லா படி. ஆனால் ஒருபோதும் நம்பாதே என்றான்.

எழுந்து கொண்டான்.

அது அவன் வழிபாட்டு நேரம்.


==============================================

எழுதியவர் : ஸ்பரிசன் (19-Sep-19, 11:38 am)
சேர்த்தது : ஸ்பரிசன்
பார்வை : 139

மேலே