கவியழகு கற்பனை
அசையாது அமர்ந்தபடி நானிருந்தேன் ,
அரசமரம் தலையசைத்து
அன்னமே என்னாயிற்று என்றது ?
அமைதியில் ஒன்றுமில்லை என்றேன் !
குயில்கள் குரலெழுப்பி
குமரிக்கு என்னாயிற்று என்றது ?
குறு அசைவில் ஒன்றுமில்லை என்றேன் !
மேகம் அசைந்தாடி
மங்கைக்கு என்னாயிற்று என்றது ?
மௌனத்தோடு ஒன்றுமில்லை என்றேன் !
வானம் விரித்தெழுந்து
வண்ணமே என்னாயிற்று என்றது ?
வாய் சிணுங்கலோடு ஒன்றுமில்லை என்றேன் !
தென்றல் பூப்போல் உரசி
தங்கமே என்னாயிற்று என்றறிந்தேன் என்றது ?
தலைநிமிர்ந்து நான் காண ,
தலைவர் என் துணைவரவர்,
தென்றலின் துணையோடு
தேரில் பறந்து வர ,
தவித்த மனம்
துள்ளி குதிக்க ,
துளிர்த்தது முகம் வியப்போடு ,
தாமரை புன்னகைக்கண்டு
மரம் அசைய ,
குயில்கள் கூவ ,
மேகம் நடனமாட ,
வாழ்த்துக்கள் மழையென பொழிய ,
மணவாளனோடு மலர்ந்தெழுந்து ,
மயங்கி மருளி நின்றாள் மலரவள் !