சாலைகள்
==========
நிலத்தின் நரம்புகளாய்
வளைந்தும் நெளிந்தும்
நீள்கின்ற சாலைகள்
நடக்கும் நம்மை
வழிநடத்துகின்றன.
**
குழந்தைப் பருவத்தில்
பாடசாலையாய் நம்முள்
ஆரம்பமாகும் சாலை,
வாலிபத்தில்
சர்வகலாசாலையென
முதிர்ந்து விடுகின்றது .
*
கண்களின் சாலைகளில்
காதலின் கைபிடித்து
நடைபயிலத் தொடங்கி
கனவுகளின் சாலையில் உலவி
கல்யாண சோலையில்
கரம்பிடிக்கும் வாழ்க்கை
சுமைகளின் சாலைகளை நமக்கு
அறிமுகம் செய்கின்றது
*
வாலிப பருவத்தில்
மதுசாலையாய் மகிழ்விக்கத் தொடங்கி
வியாதி சாலையில் நடக்கவிட்டு
மருந்துசாலையில் நிற்கவிடும்
சாலைகள் இறுதியில்
வைத்தியசாலையாய்
முற்றுப்புள்ளியும் வைத்துவிடுகின்றது
*
வயோதிபத்தில் முடிவு என்ற
வாசகத்தை எழுதிவிடும்
சாலைகள் நம்மை
மயானம் வரை இழுத்துப்போட்டுவிட்டுக்
குன்றும் குழியுமாக இருந்தாலும்
அடுத்தத் தலைமுறை நடக்கத்
தன்னை தயாராக்கிக் கொள்கிறது
என்றாலும்
நடக்க முடியாத காலம் வந்தபின்னும்
நாமும் நடக்காமல்
நடக்க முனைபவர்களுக்கு
இடம்தராமலும் சாலைகளில் நடுவே
வளர்ந்த முட்செடியாக இருக்கிறோம்
நாம் மட்டுமே
**
மெய்யன் நடராஜ்