சீஸரின் மனைவி

பெரும் சப்தங்களோடு அலறிக்கொண்டே மெதுவாய் கடக்கும் வாகனங்கள். புழுதியா புகையா என்பதன்றி வெண் பசுமையில் சாலை மறிக்கும் படலங்களை தாண்டி ஒருவரையொருவர் மதிக்க தவறியபடி புறக்கணித்து கடந்து விரைந்து செல்லும் பயமூட்டும் சாலையில் பார்கவி நடந்து போகிறாள்.

அவள் கூடவே நானும்.

கான்பூர்.

நகருக்கு வெளியில் இருக்கும் ஒரு புகழ் பெற்ற மருத்துவ கல்லூரியில் நான் இரண்டாம் நிலை க்ளார்க்.

இன்னும் முண்டி அடித்தால் அல்லது சுப்ரீண்டெண்ட் பசவகுமார் செத்து போனால் அல்லது குருட்டு அதிர்ஷ்டம் அடித்தால் ஒரு ப்ரமோசன் கிடைக்கும்.

இப்போதைக்கு அந்த பாக்கியம் இல்லை.

பார்கவியை காதலிக்கிறேன்.

அவள் சென்னையை சேர்ந்த  நடுத்தர வர்க்கத்து பிராமண பெண்.

பிராமணர்கள் தங்கள் பெண்களை க்ரீன் கார்ட் அமெரிக்க பிராமணர்களுக்கு மட்டும் கன்னிகாதானம் செய்வார்கள். இல்லையென்றால் உப்பு விற்பவரோடும் கருவாடு விற்பவரோடும் மகள் ஓடிப் போவதை பார்த்து கொண்டிருப்பார்கள்.

பார்கவி அப்பா அம்மாவோடு கான்பூர் வந்து இருபது வருடங்கள் கடந்து விட்டன.

பிரைவேட் கம்பெனியில் சிஸ்டம் அட்மினிஸ்ட்ரேட்டர். சொந்தமாய் ஃபிளாட்.
ஸ்கூட்டி. எக்ஸ்ட்ரா லார்ஜ் விஸ்பெர்.

அவள் அப்பா அமெரிக்க மாப்பிள்ளைக்கு நாக்கை தொங்கப்போட்டு கொண்டு ஹிந்து மேட்ரிமோனியில் மேய்ந்து கொண்டிருந்தார். மிச்ச நேரத்தில் காஸ்மோபொலிடன் மாப்பிள்ளைகள் பற்றி ஆராய்ந்து கொண்டிருந்தார்.

நாங்கள் சூப்பர் மார்க்கெட்டில் ஒருமுறை பார்க்க நேர்ந்து... கொஞ்சம் பேச...பிடித்து போக...ஆறு மாதங்கள் ஆயிற்று.

ஜே கே மந்திர் மற்றும் இஸ்கான் மந்திர் செல்வது பிடித்த ஒன்று அவளுக்கு.

அடிக்கடி போவோம். அங்கு புல்தரையில் அமர்ந்து பேசிக்கொண்டு இருப்போம்.

நீங்க எப்போதான் என் அப்பாக்கிட்டே வந்து நேரா பேசப்போறேள்?

கொஞ்ச நாள் போட்டும் பாரு.

நேக்கு இதே ரொம்ப வருசமானா மாதிரி தோண்றது. நீங்க இப்படி லேட் பண்ணிண்டே போனேள்னா அப்பறம் யாராச்சும் அம்ரிக்காக்காரந்தான்.

இல்லை பாரு...கொஞ்சம் வெயிட் பண்ணேன். நான் இப்போ பியூர் வெஜ் க்கு மாற ட்ரை பண்றேன்.

நான் உங்களை அப்படி இருக்க சொன்னேனா? ஏன் இப்படி பேத்தரேள்.
ஆத்துக்கு ஒரு நடை வந்து முகத்தை காட்டிட்டு போலாமில்லையோ?

நான் பார்கவி கையை பற்றி கொண்டேன்.

அதில் மெல்லிய நடுக்கம் திளைத்து கொண்டிருந்தது.

உங்களுக்கு என் அவஸ்தை புரியலை. என் அப்பா மெட்றாஸ்ல சீமாச்சு னு ஒரு வரன் கூட பேசிண்டு இருக்கர். அவா ரொம்ப பெரிய குடும்பம். சிருங்கேரி வருஷாவருஷம் போயிண்டு இருக்கா.
நேக்கு இது நல்லதா படறது பேசட்டுமா னு அம்மாகிட்ட கேட்டுட்டு இருந்தார்.

பார்கவி என்ன இப்படி பதட்டப்படறே.

நான் ஒரு பொண்ணு. மிடில் கிளாஸ். வச்சு அழகு பார்த்துண்டு இருப்பாளா?

எனக்கு புரியுது. உண்மையா உனக்கு என் நிலமை தெரியுமே. இன்னும் நான் வாடகை ஃபிளாட். லோன் போட்டாச்சு. ரெண்டு மாசத்தில் கிளியர் ஆகும்.

அப்பறம் ஒரு வீடு வாங்கிண்டு என்னை கூட்டிண்டு போய் குடித்தனம் பண்ணுவேளாக்கும்.

அதுதானே நியாயம்?

அதுக்குள்ள யாராச்சும் வந்துட்டா. என் பெரியப்பாவாத்தில் எல்லோரும் எங்கப்பா மாதிரி ஸாதுக்கள் இல்லை. இதை நன்னா தெரிஞ்சுக்கோங்கோ.

அப்படியொன்றும் ஆகாது பாரு.கொஞ்சம் அமைதியா இரேன்.

இன்னும் சிகரெட் பிடிக்கறேளா?

இல்லை. இப்போ நிக்கோகம். கொஞ்சம் ஃப்ரஷா இருக்கு. தெரியுமா...?

என்னமோ...எல்லாத்தையும் விட்டுடுங்கோ.

சரி. ராணியார் உத்தரவு.

இதுக்கொண்ணும் குறைச்சல் இல்ல. ஒரு தடவை உங்க ஃப்ளாட்டுக்கு என்னை நீங்க கூட்டிட்டு போனது உண்டா?

ஆபிஸ் வேலையே சரியா இருக்கே. நான் என்ன பண்ணட்டும் சொல்லு. வீக் எண்ட் வா னு உன்னை கூப்பிட்டா...

ஐயோ...அம்மா திட்டுவள். ஒரு நாளாய்ச்சும் ஆத்தில் இருந்து ஆத்து வேலைய பாரேன் னு... நீங்களும் ஒரு நாள் லீவு கிடைச்சா போதும் சேவாஷ்ரம், சமூகசேவை னு போய்டுவேள்.

பார்கவியை பார்த்து கொண்டிருந்தேன்.

சிவந்த நிறம். மிக்க ஆரோக்கியமான உடல். அதிர்ந்து பேசுவது கூட இடி என்பாள்.

உனக்கு என்ன வேணும் கேளேன் என்று நான் கேட்டபோது அப்படி கேக்க தெரிலேயே நேக்கு என்றாள்.

நகை, உடை, வாகனம்...ஒன்று கூடவா?

பார்கவி என் தோள் நெருங்கி அமர்ந்து கொண்டாள். இப்போ இந்த லோகத்தில் உங்களுக்கு என்னமாச்சும் வேண்டியிருக்கிறதா? ரொம்ப முக்கியமா எதுவாச்சும் மனசில் படறதா?

இல்ல பாரு.

என் மனஸு எப்பவும் இப்படித்தான் இருக்கும். நேக்கு ஒண்ணும் வேணாம்.

மழை பெய்ய ஆரம்பித்தது.

போகலாமா என்றேன்.

இல்லை. உக்காருங்கோ

என்ன விஷயம் பார்கவி?

நீங்க ஆம்பிளை. நான் பொம்மனாட்டி.
பயம் கொத்தி திங்கறது எனக்கு. என்னால் சீமாச்சு, ராஜகோபால் னு போக முடியாது. உங்களுக்கு வெளங்கறதா நான் பேசறது...

நல்லா புரியது பாரு. இன்னும் ஒரே மாசம் நம்ம கல்யாணம் ஆயிடும். அடுத்த வாரம் உங்க வீட்டுக்கு வரேன்.

அதுவரைக்கும்?

கொஞ்சம் சமாளிச்சு பாரேன்.

நாலு வருஷம் ஆயாச்சு. ஒரே கோத்திர மாப்பிள்ளை வர்றதுனாலே தப்பிச்சேன். உங்களாண்டே வந்து ஆறு மாசமாயாச்சு.
இனி பொறுக்க முடியாதுண்ணா.

சரி என்ன பண்ணலாம்.

பார்கவி கண்களை துடைத்து கொண்டாள்.

நான் இப்போ எங்காத்துக்கு போறேன்.

சரி

அம்மா அப்பாக்கிட்டே விஷயத்தை சொல்றேன்.

சொன்னா...

அவா தையா தக்கானு குதிப்பா குதிக்கட்டும். ரெண்டு புடவை பாவாடை நாலு சுடிதார் எடுத்துண்டு உங்காத்துக்கு வரேன். பழைய சாதம் இருந்தா மோர் மிளகாய் போறும் நேக்கு. இனிமேலும் என்னை தண்டிக்காதீங்கோ.

அதான் பாரு...நான் சொல்லறது என்னென்னா...

சரியா எட்டு மணிக்கு சிவாஜி அவென்யூ க்கு பிஃப்த் ஃப்ளோர் 18 வது ஃப்ளாட்டில் நான் என் ஆத்துக்காரரோட இருப்பேன்.

சட்டென்று என் வலது கையை வாங்கி எச்சில் அற்ற முத்தம் கொடுத்தாள்.

முதல் முத்தம்.

ஜே. கே மந்திர் கோபுரம் பார்த்து கன்னத்தில் போட்டுக்கொண்டு கிளம்பினாள்.

பார்கவி....

ஒண்ணும் பேசவேண்டாம். ஆத்தை நீங்க பெருக்க வாணாம். இனிமேற்பட்டு நான் வந்துதான் பெருக்க போறேன்.

இறங்கி சென்றாள்.

சில நூறடிகள் அப்பால் நின்று எட்டு மணி  ஞாபகமிருக்கட்டும் என்று கத்தினாள்.

கூட்டத்தில் மறைந்தாள்.

பார்கவியை இனி யாரும் தடுக்க முடியாது. எனக்கு உண்மையில் இதயம் என்று ஒன்று இருக்கிறதா என கேட்டு கொண்டேன். பாவம் அவள்.

எட்டு மணிக்கு இன்னும் நான்கு மணி நேரம் இருந்தது.

என் ஃபிளாட்டுக்கு வந்தபோது பார்கவி சொன்னது போலவே கொஞ்சம் தூசி இருந்தது. கலைந்த படுக்கை,உடை.
கழுவாத பாத்திரங்கள். அடுக்காத புஸ்தகங்கள்.

டிவியை ஆன் செய்து விட்டு ஒவ்வொரு விஷயமாக சுத்தம் செய்ய ஆரம்பித்தேன்.

எல்லாம் முடித்தபோது மணி ஏழு. பசித்தது. பார்கவி வரட்டும் என்று மனம் சொன்னதும் பொழுது போக மொபைல் போன் முடுக்கி இணையத்தில் கவிதைகள் வாசிக்க ஆரம்பித்தேன்.

அந்த தளத்தில் இலவசமாய் கதை கவிதை கட்டுரைகள் படிக்கலாம்.

சமீப காலத்தில் நான்கு குழந்தைகள் பெற்று முப்பது வயது தாண்டிய கிராமத்து தாய்கிழவிகள் கூட தங்கள் விரக தாபங்களை கவிதைகள் என்ற பெயரில் அள்ளி குவித்து கொண்டு இருந்தனர். சிரித்து கொண்டே படிக்கலாம். பொழுது போக படித்தேன்.

போன் ஒலித்தது.

ஹலோ...

சார்.. நான் அம்ரீஷ்..

நீங்க அந்த மெடிக்கல் காலேஜில்...

ஆம். என்ன விஷயம்.?

சார் ஒரு சேட்ஜி க்கு அவசரமா கிட்னி வேணும்...பல இடத்தில் விசாரித்தபோது உங்கள் எண் கிடைத்தது. நீங்க சமூக சேவகர் னு சொன்னாங்க.

எல்லாம் சரி தம்பி. ஆனா நான் டாக்டர் இல்லை.

சாரி சார்...நான் வேறு பக்கம் முயற்சி செய்யறேன். சேட்ஜி கட்டு கட்டா பணம் வச்சிட்டு கிட்னிக்கு அலைஞ்சுட்டு இருக்காரு. இன்னொரு பார்ட்டிக்கு லங்ஸ் கூட வேணும். நீங்க சோஷியல் ஒர்க்கர்.
உங்க நம்பர் எனக்கு அலெக்ஸ்சாண்டர் மூலம் கிடைச்சது...

ஓ...அலெக்ஸ்சாண்டர்..?

எஸ் சார்...

அவர்தான் என்னை காண்டாக்ட் பண்ண சொன்னாரா...

எஸ் சார்...

அப்போ சரி...அவருக்கு வேண்டி செய்யறேன். நீங்க ஒரு பைசா எனக்கு தர வேண்டாம். அவரோட ஆர்ப்பனேஜ்க்கு கொடுத்திடுங்க.

அப்போ...சார்...உங்களை பாக்க எப்போ வரட்டும். பார்ட்டி இருக்காங்களா?

இருக்காங்க. இன்னிக்கு ராத்திரி சரியா ஒன்பது மணிக்கு வந்துருங்க.

*******************************

எழுதியவர் : ஸ்பரிசன் (23-Sep-19, 9:23 pm)
சேர்த்தது : ஸ்பரிசன்
பார்வை : 275

மேலே