இந்த பிறவியில் சேரமுடியாவிட்டாலென்ன
இந்த பிறவியில்
சேரமுடியாவிட்டாலென்ன
என்பதும்
அடுத்த பிறவியில்
சேர்ந்து வாழ்வோம்
என்பதுவும் ஏமாற்றுவேலைதான்..
காதல் உடல் கடந்து நடப்பதா?
உடலென்ற உரு இருப்பதால்தான்
மனமென்ற ஒன்று இயங்குகிறது
அதுபோலவே
காதலும் காமமும் ஒன்றே
உடல்
மன
சம அதிர்வுகளாலான
மின்சேர்க்கையில்
நடைபெறுவதுதான் காதல்
காதலை
மனதால் தொட்டு
உடல்வழியே
உணர்பவர்கள் மிகமிகக் குறைவு
ஸ்பரிசமும்
புணர்தலும்
காதலின் மிக நெருங்கிய மொழிகள்
அவற்றை பற்றி பேசாதேயெனும்
தத்துவங்கள் யாவுமே
பொய் பேசும்
வாழ்வின் வழிகளையெல்லாம்
முறித்து
குளிர்காய்கிற
எந்தச் சடங்கு சம்பிரதாயங்களும்
மனிதத்தையும்
மனித உணர்வான
மென்மைக் காதலையும் சிதைக்கும்
பொருந்த நெருங்கும்
முழுமைக்குள் சந்தேகங்கள்
திணித்து சிரமம் ஏற்படுத்தும்
அதனால்தான்..
அடிமைச்சமூக அமைப்பில்
வரலாற்று
வழிநெடுக வாழ்ந்து பழகிவிட்ட நமக்கு
வாழ்க்கை மட்டுமின்றி
காதலும் பெரும் போராட்டமாகிவிட்டது
அடுத்தவர்களிமிருக்கிற நம்மை
மீட்பதும்
நமக்குள் இருக்கும்
அடுத்தவர்களை வெளியேற்றுவதுமான
பெரும் போராட்டமிது
இத்தகைய நெருடல்
நிறைந்த வாழ்க்கையில்
காதலை சந்தித்ததாக
யாரேனும் கூறினால்
நம்பத்தகுந்ததாகவே இல்லை
காதலிகளையோ
காதலன்களையோ
சந்தித்திருக்கலாம்
ஆனால்
காதலை மட்டும்
சந்தித்திருக்கவே முடியாது
சூழ்ந்தார் தடைகளை
கட்டப்பட்ட கயிறுகளை
வீழ்த்தி
எழாத
எவருக்குள்ளும்
காதல் எழாது
எழமுடியாது
உணரவும் முடியாது
காதலைப் போல ஒன்று நேரலாம்
ஆனால் அது காதலாகாது
Insta Id - @tashantatanisha