ஈடாகுமோ

கருத்த மேகத்தை வானில்
கட்டியணைத்த சூரியனால்—அவள்
கால் விரல் போட்ட
கோலம் வானவில்லானது அழகு

காலைக் கருக்களில்
கடமை தவறாமல்
குரலெழுப்பி இசைக்கும்
குயிலின் கானம் அழகு

ஆழ்கடலும் அதனோடு சேரும்
ஆலங்கட்டி மழையும்
ஆலோலம் பாடி விளயாடும்
அற்புதக் காட்சி அழகு

பகலவனின் பார்வைக்கு
பயந்து போன அருவி
துள்ளிக் குதித்து விழுந்து
வெள்ளிச் சரமாவது அழகு

வனத்தில் முகமலர்ந்து
வாசத்தைத் தூதுவிட்டு
வசந்தத்தை வரவேற்கும்
வண்ணப்பூக்கள் அழகு

உணவுக்கு அழும் குழந்தைக்கு
ஒருநாள் வயிறு நிறைந்தால்
முல்லை மலர் போல
பூக்கும் சிரிப்புக்கு ஈடாகுமோ!

எழுதியவர் : கோ. கணபதி. (29-Sep-19, 6:43 am)
சேர்த்தது : கோ.கணபதி
பார்வை : 101

மேலே