இப்படிக்கு சொர்கத்திலிருந்து அப்பா

என் தேவதைக்கு
சொர்கத்திலிருந்து ஒரு கடிதம் .

அன்பு மகளே
இறைவன் வரமாய்
கொடுத்த பொக்கிஷம் நீ ,

உன் தாயின் கருவறையில்
நீ கண் விழிக்கும் முன்பே
உன்னை
நேசிக்க ஆரம்பித்து விட்டேன்
உன் தாயின் கருவறையில்
புகுந்து உன்னை பார்த்து விட.
முடியாத என ஏங்கிய
நாட்களும் உண்டு ,

அந்த பத்து மாத காத்திருப்பு
இன்னும் என்னால்
மறக்க முடியவில்லை
போகும் இடமெல்லாம்
சொல்லி திரிந்தேன்
பூமிக்கு ஒரு தேவதை
வரப் போகிறாள் என்று

உன்னை முதன் முதலில்
கரங்களில் தூக்கி முத்தமிட்ட
அந்த தருனம் ,
இன்னும் எத்தனை பிறவிகள்
எடுத்தாளும்
சொல்லி விபரிக்க முடியாத
ஒரு உணர்வு .
அன்று உன்னோடு கூட
நானும்
புதிதாய் பிறந்தவன் போலவே
உணர்ந்தேன் .

எவ்வளவு அழகு நீ
என் கைகளில் ஒரு தேவதை
உறங்கிக் கொன்டிருக்கிறது
"ரெபேக்கா "
நீ தான் அந்த தேவதை .

மகளே
உன்னை என் தோளில்
சுமக்காத நாட்கள் தான்
அதிக சுமை எனக்கு

உன்னோடு கூடவே
நானும் நடக்க பழகிக் கொண்டேன்
பேச பழகிக் கொண்டேன்
சிரிக்க பழகிக் கொண்டேன்
விளையாட பழகிக் கொண்டேன்
அந்த நாட்கள்
நம் வீடு ஒரு நந்தவனம்
பட்டாம் பூச்சி போல
நீ அங்கும் இங்கும் பறந்து
கொண்டேயிருப்பாய் .

நம் வீடு மாளிகை
இல்லை என்றாலும்
என் இளவரசி நீ தான்.

முதன் முதலாக
உனக்கு இயற்கையை
அறிமுக படுத்தி விட்டேன்
என் தோள் மீது நீ ஏறி
நிலவை பிடிக்க ஆசைப்பட்டதும்
அந்தவொரு நிமிடம்
நானும் நிலவை பிடிக்கவே
ஆசைப்பட்டேன் உனக்காக
முடியாது என தெரிந்தும்

உன் புன்னகையில்
என் கவலைகள் மறந்தேன்
நீ தும்மினால் கூட
காய்ச்சலோ என பயந்தேன்
மழை வந்தாலும்
உணக்கு குடை பிடித்து
நான் நனையவே ஆசைப்பட்டேன்.

சில நேரம்
உன் அம்மாவை மறந்து
உன்னோடு செலவிட்ட
தருனங்கள் அதிகம் .

காலத்தோடு சேர்ந்து
உன்னையும் கை பிடித்து
இருபது வயது வரை
பத்திரமாய் உன்னை
அழைத்து வந்து விட்டேன்

இப்போது என் தேவதைக்கு
சிறகுகள் முலைக்க
ஆரம்பித்து விட்டது
என் மடியில் நீ உறங்கிய
காலங்கள் மாறி
உன் மடியில் நான் உறங்கும்
காலம் வந்தது

மகளாய் நீ எனக்கு
கிடைத்தது என் யோகம்
தகப்பனாய் உன் கனவுகளை
நனவாக்குவதே என் தாகம்

மகளே ,
என் வேண்டுகோள்

உன் அம்மாவுக்கு வயதாகும்
அவளும் குழந்தையாய் மாறும்
முதிர் காலம் வரும்
அன்று அவளுக்கு நீ
தாயக இரு.

மறந்து விடாதே
இந்த உலகம் பொல்லாதது
உனக்கான பாதைகளை
நீயே தேர்ந்தெடு ,
சுதந்திரமாய் பற
ஆனால் உயரப் பறந்து விடாதே,
உன் கனவுகளை நிஜமாக்க
விழித்திரு
எல்லோரையும் நேசிக்க பழகு
தோல்விகளை ஏற்றுக் கொள்
தனிமையில் வாழ கற்றுக்கொள்
இந்த உலகம் நிச்சயம் ஒரு நாள்
உன்னை தனிமை படுத்தும்
அன்று அப்பாவை நினைத்துக் கொள் .


அப்பாவின் ஆசை
எப்போதும் நீ சிரித்துக்
கொண்டேயிரு
உன் புன்னகையில்
வாழ்ந்து கொண்டிருப்பேன் .



இப்படிக்கு சொர்கத்திலிருந்து
"அப்பா"



Written by
Enoch Nechum

எழுதியவர் : Enoch Nechum (1-Oct-19, 6:00 am)
சேர்த்தது : Enoch Nechum
பார்வை : 118

மேலே