சகாப்தம்

ஒரு மானங் கெட்ட பயகிட்டே ஒரு மானங் கெட்ட விஷயம் இருக்குதுன்னா அந்த மானங்கெட்டதுக்கு பேர் பணம்.
அத வச்சுக்கிட்டு அவனும் நிம்மதியா இல்லாமே அடுத்தவன் நிம்மதியையும் கெடுக்கறதுக்கு பேர்தான் அரசியல்.

                            *********
என்ன தெரியும் இந்த பாப்பாத்திக்கு என்று கேட்டால் ஒன்றும் தெரியாதுதான்.

அரசன் புணர்ந்தால் ஆண்டி புணர்ந்தால் திருடன் புணர்ந்தால் உண்மையில் எல்லாம் வேறு வேறு மாதிரி இருக்கும்.


இப்படி சொல்ல பாப்பாத்திக்கு ஒன்றென்ன நூறு ஆதாரம் காட்ட தெரியும். அவள் தொழில் அப்படி.

ஒரு நாள் ராப்போதில் காலும் கையும் புருஷனுக்கு இழுத்து கொண்டு  விளங்காமல் போனது.

ஐயனாருக்கு சாவல் கொடை கொடுத்தும் விபூதி அடித்ததும் போக கெவருமெண்டு ஆசுபத்திரியில் கொண்டு அவனை படுக்கப்போட்டு வைத்தாள்.

பத்து நாட்கள் கழித்து ராக்காலத்தில் ஆசுபத்திரி ரொட்டியும் சோற்றின் நாற்றமும் பிடிக்காமல் பாப்பாத்தி கையை பிடித்து கதறினான். அவள் திக்கென்று ஆனாள்.

ஆனது ஆகட்டுமென்று வெசால கிழமை ராத்திரியில் பின் குடுமியை முடிந்து கொண்டு சன்னாசியோடு நாய்த்தனம் செய்த பின்புதான் ரெண்டு பாட்டில் ஹார்லிக்ஸ் வாங்க முடிந்தது.

பாப்பாத்திக்கு பணம் அப்படித்தான் சம்பாதிக்க முடியும். அவளுக்கு வேறு தொழில் செய்ய 'ரெக்கமண்டு' சொல்பவர்களை நானே பேனாவை மூடி வைத்து விட்டு வந்து.........

ஏனெனில் நாட்டு நிலைமை அப்படி. அவளிடம் இருக்கிறது. காட்டினால் காசு. என்னிடம் இல்லை. வேண்டுமென்றால் வாயை வைத்து பிழைக்கலாம்.

வயிற்று பிழைப்புக்கு ஒரு வேலையை கேட்டால் வாங்கிய டிகிரிக்கும், வயசுக்கும், ஜாதிக்கும் ஒரேயொரு வடு முடிச்சு போட்டு வைத்து அரசியல் பண்ணும் நாட்டில் .......... பிழைத்தல் என்பது ஒன்றும் அவ்வளவு பெரிய குற்றமில்லை என்று சொல்ல வேண்டும்.

நான் அப்படி போகவில்லை. எழுத வந்து விட்டேன்.

பாப்பாத்தி ஒரு ஆறு வருடமேனும் தன் உடல் இந்த தொழிலை தாங்கும் என்று ஒரு கணக்கு வைத்திருந்தாள்.

புருஷன் கமுக்கமாக இருந்து விட்டான். சமூகம்  ஆசைதீர அவளை ஆசை ஆசையாய்  மேய்ந்து கொண்டிருந்தது.

அந்த சமூகத்தில் ரௌடிகள் மீசையை முறுக்கி கொண்டு திரிந்தபோது  நன்கு படித்தவர்கள் மயிரை சிரைத்து கொண்டு பேனாவும் கால்குலேட்டருமாய் வாழ்ந்தனர்.

பாப்பாத்தி இது என்னத்தை கண்டாள்?

நீங்களும் நானும்தான் எதை சொல்ல முடியும்? அவளுக்கென்று சொல்ல ஒன்றும் இல்லாது போயினும் நமக்கே என்ன சொன்ன முடியும்?

கந்தன் பாப்பாத்தியிடம் சொன்னான். "பாப்றை, அவிங்கவிங்க விடற குசு
அவிங்கவிங்களுக்கு மணக்கத்தானே செய்யும்". சமூகம் அப்படித்தான் புன்னகையுடன் ரோஷமின்றி பாப்பாத்தி தொடைக்குள் மணத்து கிடந்தது.

                           *************

ஒருவனை குளித்து துவட்டி, நாலு முழ வேட்டி உடுக்க வைத்து, பொட்டிட்டு, வெட்டி பிளந்து தருமாறு அனுப்பி வைத்தனர்.

அவ்வை முதல் பாரதி வரை மட்டுமே படித்து விட்டு நீதி நேர்மை ஒழுக்கம் சத்யம் ஆகிய லாஹிரி வஸ்துக்கள் பூசிக்கொண்டு வெட்டு வெட்டென்று வெட்டி முடித்து பஞ்சடைத்து நரை கொழுக்க மேடேறி வந்து பார்த்த போதுதான் தெரிந்தது.

அன்று வரையிலும் அவன் நின்ற இடத்திலேயே நின்று கொண்டிருந்தது. சாவு அவன் தோளை தட்டி அழைத்து "சீதாராமா போலாமாடா" என்று கவ்வி கூட்டிக்கொண்டு போன போது அவனைப்போல் லட்சம் பேர்  அந்த பயணத்தில் இருந்தார்கள்.

                             *************

விடுதலை கிடைத்தபின் பாப்பாத்தியின் தேவைகளை நாடு உணர்ந்து கொண்டது.

டெல்லியில் கட்டிடம் கட்டி டெல்லியில் உட்கார்ந்து பேசி டெல்லியில் சட்டங்கள் எழுதி டெல்லியில் பெரிய்ய்ய கோர்ட் வைத்து இருந்தது.இங்கிருந்து யார் யாரோ டெல்லிக்கு போக அங்கிருந்த யார் யாரோ சொன்னார்கள்.

நம் நாட்டுக்கு பெயர் இந்தியா. அது சுதந்திரம் வாங்கி விட்டது. இனி அது தன் மக்களுக்கு சுதந்திரத்தை , வாழ்க்கையை கொடுக்கும் பார்த்து கொண்டே இருங்கள் என்று அனுப்பி வைத்தார்கள்.

அது அஜ்மீர் பன்ஹாருவுக்கும் புரியவில்லை. முத்தியால்பேட்டை அம்மாசிக்கும் புரியவில்லை.

இவ்வளவு ஏன்? ஐயருக்கும், செட்டியாருக்கும், தேவருக்கும், கவுண்டருக்கும், லெப்பைக்கும், கத்தோலிக்கும்...ஒரு பயலுக்கும் கடைசி வரையில் என்னவென்றே புரியவில்லை.

நம்மை கையை பிடித்து இழுக்காமல் சண்டித்தனம் செய்யாமல் அட்டை கத்தியால் கழுத்தை அறுக்கும் கலை அவர்களுக்கு நன்கு தெரிந்து இருந்தது. அவர்கள் விட்ட கதைகளில் நம் பாட்டன் பூட்டன் எல்லோரும் வந்து போனார்கள்.

ஆப்பிரிக்கா மக்களின் விரையை புத்தகத்தால் நசுக்கினார்கள் என்றார்கள். நமக்கு கதைகள்.

எழுபது வருடம் கழித்து நமக்கு ஏதோ கொஞ்சம் தெரிய வந்தபோது வீட்டில் டீவி, ஏசி, மொபைல் இருந்தது.

ஆனால், விவசாயிகள் டெல்லியில் அப்போதும் கோவணத்தை உருவிபோட்டு நின்றது ஏன் என்பது தெரியவில்லை. டிவியில் காட்டும்போது புரியவில்லை.

சட்டசபைகள்... இருக்கு. தெரியும். மாநில மாநிலத்துக்கு இருக்கு. தெரியும்.

திராவிடத்தின் பொறுக்கு ஆரியம். ஜாதியக்கோமான் பார்ப்பான். அவனை சிம்படித்தால் தெரியும் சேதி என்று வந்த பெரியார் குறைந்தபட்சம் தன்
ஜாதிக்காரரையாவது நாத்திகத்துக்கு மாற்றி அவர்களின் நெற்றிக்கு பொட்டில் இருந்து மோட்சம் கொடுப்பார் என்று பார்த்தாலும் அப்படியும் நடக்கவில்லை.

பெரியார் கமுக்கமாக ரெண்டாம் கல்யாணம் பண்ணப்போக உடன் இருந்த தம்பிவாள் கிடைத்தது சாக்கு என்று  அன்றொடு திண்ணையை  காலி செய்துவிட்டு சின்ன தம்பிவாளுடன்
புது கம்பெனி ஓபன் செய்ய அது குஞ்சும் குளுவானுமாய் பல்கி பெருகி...

அங்கிருந்து விலகி வந்தவர் தன் பாப்புலார்டி, சத்து, வித்து, ஜாதிக்கேற்ப நின்னுகுடிச்சான் கடையில் இருந்து பிராண்டட் கம்பெனி வரை துவங்கி  அது போண்டியாகும் போது கூட்டணி சேர்ந்து இல்லையேல் தனியே தமிழர் விடுதலை...

(வொப்பனோலி இன்னா நினச்சே, தமிளன்னா இளப்பமா கீய்தா...)


விடுங்கள். பாப்பாத்தி இதை தெரிந்து கொண்டு என்ன செய்ய போகிறாள்?

அவள் ரெண்டு தடவை ஜெயலலிதாவுக்கு ஒட்டு போட்டாள். பின் அந்த நாளிலும் தொழில் வரும்படி போகிறது என்று ஓட்டு போடுவதை விட்டு விட்டாள்.

பாவம் கோழிக்குஞ்சுகளுக்கு என்ன தெரியும்? எதைத்தான் எப்படித்தான் நம்பும்? இருக்கும் வரை இருந்து விட்டு கூப்பிட்டால் தலையை கொடுக்க வேண்டியதுதானே?

ஒன்றல்ல ஆயிரம் பாப்பாத்திகள் கிடைத்தனர். பாருங்களேன், விதி, பூர்வ கர்மா, பெரும் சாபம் என்று தலையில் போர்த்தி கொள்ள எத்தனை வார்த்தைகளை நாம் கற்று தெரிந்து வைத்திருக்கிறோம். ஆளுக்கொன்று அதில் பிரித்து கொடுத்தால் ஆயிற்று.

பாப்பாத்திகள் குட்டி போடாமல் கூடி களிக்கும் கலைகள் அறிந்து காசு  பணம் பெருக்கினார்கள்.

இதுவெல்லாம் அரசியல் என்று சொல்ல நாம் யார்? பாப்பாத்தியே அப்படி சொல்ல மாட்டாள். தேர்தல் நேரத்தில் ஆதார் கார்டு காட்டி ஏறத்தாழ எல்லா கட்சிகளிடமும் வரும்படி பார்த்து விட்டாள்.

மெலிந்த கம்முனிஸ்ட் கட்சி கூட ஏதோ இருந்த கொஞ்ச நஞ்சத்தில் கிள்ளி கொடுத்துவிட்டு "பிஜேபி கிட்டே  துட்டு வாங்கினாலும், நம்மளை மறந்துராதே பாப்ரு" என்று சொல்லி விட்டு போனது.

                         *************

பாப்பாத்தியை ஒருநாள் நான்கு ஜீன்ஸ் போட்ட குட்டிகள் பேட்டி எடுத்தனர்.

அக்கா ஒரு ப்ராஜெக்ட். ஹெல்ப் வேணும். போட்டோ வீடியோ போட்டா முகத்தை நல்லா மசிச்சு போடறோம் என்றார்கள்.

பேட்டி ஆரம்பமாயிற்று.

உங்கள் மீது யாரும் அன்பு காட்டவில்லையா? முதல் கேள்வி.

ஆரூ? கஸ்டமரா? இப்படி பண்ணு. அப்படி பண்ணு னு சொல்வாங்க. சப்புடி னு சொல்வாங்க. இங்ஙன எதுக்கு அன்பு?

ஒரு ஜீன்ஸ் களுக்கென்று சிரித்து பின் உதடை கடித்து கொண்டது.

இல்லை. உங்கள் வீட்டில்...அன்பு...

வூட்டில் அம்பு காட்டினா இந்த தொழிலு நடக்காதெ போவுமா நாட்டில்? அன்பு னு சொல்றதே ராவடி.

மனிதர்கள் மீது பரஸ்பர மதிப்பை காட்டினால் கூட போதும். அன்பு என்பதெல்லாம் ரொம்ப யோசிக்க வைக்கும் ஒன்றாய் மாறி விட்டது.

மனிதனை மனிதன் வெறுமனே மதிக்க மட்டும் செய்தால் போதும். அது தவறும் பொழுதெல்லாம் மனிதாபிமானம் என்ற குட்டி வஸ்து தலை விரித்து ஆட ஆரம்பிக்கிறது. அது மோசடிக்கு முன் நிலை. ஜி. என். எழுதியது இது.

சபாஷ்... ஜி.என்.

பேட்டி தொடர்ந்தது.

இந்த தொழிலை நீங்கள் விரும்பி செய்கிறீர்களா?

இல்லை என்று சொன்ன அடுத்த நாளில் என் வயிற்றை கழுவ வேறு ஒரு வேலை கிடைக்கலாம். அது என் முழு குடும்பத்துக்கு பத்துமா? சோறு போடுமா?

இன்னிக்கு எத்தனை பேர் கல் உடைக்கிறாங்க? சமட்டி சொமக்கிறாங்க... ஏன் அப்படி நீங்கள் செய்ய கூடாது?

ஏங்கண்ணு, நீ இப்போகூட உன் அப்பா வாங்கி தந்த ஸ்கூட்டிலதானே வந்தே. வோணும்னா நீ அப்படி சம்பாரிச்சி எதுனாச்சும் வாங்கி பாரேன்.

அரசு என்ன செய்ய வேண்டும்?

உடனே இந்த தொழிலை சட்டம் போட்டு அங்கீகரிக்க வேண்டும்.

அப்படி செய்வது நம்  கலாச்சாரத்தை பண்பாட்டை குலைக்கும் என்று நினைக்கவில்லையா?

அப்படின்னா?

அப்படின்னா....ஜீன்ஸ் ஆரம்பிக்க பாப்பாத்தி இடை மறித்தாள்.

ஜெர்மனி ல இது லீகல். அமெரிக்காவில் பார்ஷியலி லீகல் னு ஒரு ஆளு சொல்லி கேள்விப்பட்டேன். அங்கினே போய் தொழில் முனைவோம்னு பணத்துக்கு நிக்கிறியே...அப்போ இனிக்குதா...

ஜீன்ஸ்கள் நெளிந்தன. பேட்டியை முடித்து கொள்ள விரும்பின.

நீங்க சமூகத்துக்கு என்ன சொல்வீங்க?

பாப்பாத்தி நிமிர்ந்து அமர்ந்தாள். முந்தானையை இழுத்து மூடி கொண்டாள். தன் கைகளை வணக்கமாக குவித்து கொண்டாள். தொண்டையை செருமி சரி செய்து கொண்டாள். பேசினாள்.

"பல்லை விளக்கிட்டு படுக்க வாங்கடா நாய்ங்களா".



*************************

எழுதியவர் : ஸ்பரிசன் (2-Oct-19, 3:20 pm)
சேர்த்தது : ஸ்பரிசன்
Tanglish : sagaptham
பார்வை : 166

மேலே