செவப்பி - அத்தியாயம் 9

செவப்பி - அத்தியாயம் 9
=======================

பார்வதிய‌ம்மா தான் துவண்டு போய் இருந்தாங்க..

அந்த நாளைக்குப் பின் வீட்டிலே ஒரு மகிழ்ச்சியே இல்லை. ரகுவும் பதிலேதும் சொல்லாமல் கிளம்பிச் சென்று விட்டான். செவப்பியும் பதில் சொல்ல‌ இப்போது இல்லை, என யோசித்தவளுக்கு ரகுவின் பால்ய சினேகிதன் மகேஷ் ஞாபகத்துக்கு வ‌ந்தான்.

'எப்படி மறந்தேன்?'

'அவனப் பார்த்தாப் போச்சு..'

'அவன விசாரிச்சா கண்டிப்பா என் கேள்விக்கான விடை கிடைக்கும்'

மகேஷ்.. ரகு கூட படித்தவன்.. பத்தாவது பாஸாக முடியாததால் விவசாயத்தில் இறக்கிவிட்டது அவனது குடும்பம்.

விவசாயமும் நன்றாகவே போய்க் கொண்டிருந்தது. பார்க்கற‌ இடமெல்லாம் விசாரிப்பான்.

நல்ல பையன்.

அப்பப்போ பண்ணையாரோ, இல்லை வேறு யாரோ ஏதாவது வேலை சொன்னாலும் மறுக்காமல் செய்வான்.

அவன‌ப் பார்த்து நம்ம சந்தேகத்த நிவர்த்தி செஞ்சுக்க‌ வேண்டியது தான் என முடிவெடுத்தவள்.. ரூபாவிடம், "கடைக்குப் போயிட்டு வரேன்டி", என சொல்லி விட்டு கிளம்பினாள்.

சிறிது தூரம் நடந்து சென்ற பிறகு, எதிரிலே எதிர்பட்டார் பெரியவர்..

அவரைப் பார்த்து, "வணக்கங்க", என மரியாதை செய்ய, அவரும் "வணக்கம்மா", என்றார்.

ஊரில் அவருக்கென்று ஒரு மரியாதை உள்ளது.

"ஐயா.. என்னாச்சுங்க..? இப்படி ஓட்டமும் நடையுமா எங்க கெளம்பிட்டீங்க?"

"உனக்கு விஷயம் தெரியும்னு நெனைக்கிறேன். செவப்பி, எம்மருமவன நல்லா பயமுறித்தி வச்சிருக்கா.. அவன் ரொம்ப நொந்து போயிருக்கான்.. அதனால எங்க குடும்பமே குழம்பிப் போய் கெடக்கு.."

"அதான் ஒரு மந்திரவாதிய‌ கூட்டிட்டு வந்து, இதுக்கு எதாவது நிவர்த்தி பண்ணலாம்னு நெனைச்சு கெளம்பி போயிட்டு இருக்கேன்.. அப்பறம்.. உங்க வீட்ல எல்லாரும் சௌக்கியம் தானே...!", என கேட்ட படியே நடையைக் கட்டினார்.

பின்னாடியே வந்து கொண்டிருந்தாள் ருக்மணி, பூசாரியின் மனைவி.

அவளைக் கண்டதும் பார்வதிய‌ம்மாவிற்கு கண்ணீர் முட்டிக்கொண்டு வந்தது.

கண்ணீரைக் கண்ட ருக்மணியும் அப்படியே தழுவிக் கொண்டாள். சிறிது நேரம் அமைதியாக கண்ணீர் வடித்தவள், "வரேம்மா!", என்று சொல்லி விட்டுக் கிளம்பினாள்.

'பாவம்.. ருக்மணியும் பூசாரியும்.. எவ்ளோ சந்தோஷமா இருந்தாங்க.. அவங்க சந்தோசத்துல இப்படி மண்ண அள்ளிப் போட்டுருச்சே விதி.. பரிசா கெடச்ச பொண்ணு மேல, இவ்ளோ பாசம் கொட்டி வளர்த்தது தப்பா..? இப்படி இவங்க‌ள அழவச்சிட்டாரே கடவுள்..' என யோசித்துக் கொண்டே நடந்தவள் வயல்வெளியை அடைந்து விட்டாள்.

அப்படியே நோட்டம் விட்டவளுக்கு, மகேஷ் வெகுதூரத்தில் நிற்பது கண்ணில் பட்டது.

செய்கையாலேயே அழைத்தாள் அவனை... மகேஷும் பார்த்துவிட்டான்..

(விசாரிப்புகள் தொடரும்)

எழுதியவர் : அ.வேளாங்கண்ணி (2-Oct-19, 6:00 pm)
சேர்த்தது : அ வேளாங்கண்ணி
பார்வை : 104

மேலே