மீண்டுமொரு விடுதலை

சேர வள நாட்டின் கூல வளம் செழிக்கும்
கொங்கு நாட்டின் சிங்கம் காண்.

ஞாயிறு மறையா ஞாலம் ஆண்டோர்
ஒருசிறு நிலாவால் தகித்தது காண்.

வரம் பெற்ற பெற்றோர் நாச்சிமுத்து கருப்பாயி;
அவர் பெற்ற திருமகன் குமரன் எனும் தலைமகன்.

பறங்கியரின் ஆளுமையால் பரிதவித்த பாரதனாய்,
அடங்க மறுத்தோரில் அதி சுந்தரன் ஒருவன்தான்.

அண்ணலின் அகிம்சை தீ நெஞ்சிலேற்றி,
தென்னக பகத்சிங்காய் விஞ்சி நின்றான்.

இடியொத்த அடியொன்று பரிசாக,
தடியொத்தை விதியென்று விழுந்தானதே.

கொடியொன்றை ஏந்தி எழுந்தானவன்;
முடியணி என்றே தலை தாங்கினான்.

மூவண்ணம் மூச்சென உணர்ந்தானவன்;
மூவுலகும் மெச்சும்படி உயர்ந்தானவன்.

மண் தொட்டு வீழ்ந்து மரித்தானில்லை;
அன்னை மடி தொட்டு மரணத்தை வென்றானாவான்.

உயிர்தந்து உடல் வெந்து பெற்ற சுதந்திரம்
மயிரென மந்திகூட்டம் தூற்றி எறியுமோ?

மெய்யான தியாக தீபங்கள் ஏற்றிய வெளிச்சம்
பொய்யான இருள் கனவுகளால் பொசுங்கிடுமோ?

அகிம்சை,அன்பு, அருமை மத நல்லிணக்கம்
அதிரடி வேடதாரிகளால் அதகளப்படுமோ?

வீழ்ந்த குமரன் எழுந்தே வருக! மீண்டுமொரு
விடுதலைக்கு வித்தாக விரைக.

வெள்ளையரை விஞ்சும் உள்ளோரை ஒழிக்க,
நல்லாரோடு சேர்ந்து நானிலம் காக்க.

வீழ்ந்த குமரன் எழுந்தே வருக! மீண்டுமொரு
விடுதலைக்கு வித்தாக விரைக.

எழுதியவர் : D.Krishnamurthy (4-Oct-19, 10:44 pm)
சேர்த்தது : கிருஷ்ணமூர்த்தி
பார்வை : 74

மேலே