நீ இல்லாத இன்றெதற்கு

நீ இல்லை இன்றில்லை

கருப்பைச் சொல் தந்த கவிதையே!
காற்று களவாடி வந்த கமல நறுமணமே!
ஆற்றங்கரை தனில் தென்றல்வளர் தேன் மலரே!
கூற்றின் வருகைக்கு மாற்று உன் ஊடலடி!

கண்ணுக்குள் நிலவாக முப்பொழுதும் உன் முகமே!
மண்ணுக்குள் வேராக படருதடி என் மனமே!
தாகம் தணிக்க படர வில்லையடி- என்
மறுபாகமே நீ தானடி!

கருமேகம் கூடுதடி மயில் தோகை விரித்தாட
உருவாகும் கற்பனையில் செவ்வாகை பூத்தாட
கருநாகம் போல பாவை உன் கூந்தலிலே கண்டேன்
உதிராத செம்பூக்கள் பறிகொடுத்த வாசமெல்லாம்!

கோர்த்து வைத்த மல்லிச் சரம் தானடியுன் பேச்சு!
பார்த்து விட்ட மறு நொடி தொலைந்ததடி என் மூச்சு!
நேற்றும் நாளையும் இன்றில்லை என்பாரே;
இன்றுமில்லை என்பேன் நீ இல்லாத இன்றெதற்கு?

ஆலய மணியெல்லாம் அழைப்பது பூஜைக்காம்!
பூலயம் ஆனதோ புன்னகை உன் வதனத்தில்!

மனமாளவும் நலம் பேணவும் நீ ஒருத்தி இருக்கிறாய்!
சோலையே சீதை அவளில்லை ராமன் நான் தனிவனத்தில்!https://youtu.be/LxM-X_2JZFI

எழுதியவர் : பாபு கனிமகன் (8-Oct-19, 12:06 pm)
பார்வை : 696

மேலே