ஏமாற்றக் கவிதை

மழை அடிக்கப் போகிறது
நான் கவிதை எழுதப் போகிறேன்
என் நினைவில் நீயும் வந்தே
என்னை அழுக வைத்து விடாதே!

தவளைச் சத்தம் போடுகிறது
நான் காது கொடுத்துக் கேட்கிறேன்
குவளைச் சத்தம் ஏந்தி வந்தே
என் உள்ளம் கெடுத்துச் செல்லாதே!

குளிர்ந்த காற்று வீசுகிறது
நான் கனவு காணப் போகிறேன்
அந்தக் கனவில் நீயும் வந்தே
என் நினைவு கொன்று போடாதே!

தண்ணீர் வீட்டில் விழுகிறது
நான் பாத்திரம் வைக்கப் போகிறேன்
விழுந்த இதயம் என்னைக் கண்டு
நீ ஏளனம் செய்து போகாதே!

ஜன்னல் அடித்துக் கொள்கிறது
நான் சாத்தி விட்டு வருகிறேன்
என்னை சாத்தும் மிளகாய் வார்த்தை
நீ மீண்டும் வீசி விடாதே!

மின்சாரம் காணாமல் போகிறது
நான் விளக்கை ஏற்றி வைக்கிறேன்
என்னைத் தூற்றும் உந்தன் செய்கை
நீ ஆரம்பம் செய்து விடாதே!

வலியோடு வாழ்க்கைச் செல்கிறது
நான் விழியோரம் நீரோடு இருக்கிறேன்
என் கண்ணைத் துடைப்பதாய் நினைத்து
என்னை முழுதாய் துடைத்து விடாதே!

மாற்றங்கள் எனக்குள்ளே என்றோ
உன் ஏமாற்றம் விதைத்தது விடம்
என் உலகத்தில் எனக்கான இடம்
தேடுகிறேன் தேடுவேன் எங்கோ அத்தடம்!

அ.வேளாங்கண்ணி

எழுதியவர் : அ.வேளாங்கண்ணி (12-Oct-19, 8:05 pm)
சேர்த்தது : அ வேளாங்கண்ணி
பார்வை : 806

மேலே