சிட்டுக்குருவித் தெம்மாங்கு
சிட்டாப் பறப்பேனே
சீட்டி அடிப்பேனே
எட்டாத உயரத்துல
எட்டி வந்து பாப்பேனே!
பட்டான மேனி கொண்ட
சிட்டுக்குருவி நாந்தானே!
பாத்து நாளாச்சு
அக்கம்பக்கம் தூரமாச்சு
மனுசப்பய மாறியாச்சு
பழசெல்லாம் மறந்தாச்சு
ஊர்க்குருவி நா இப்போ
நாதியத்துப் போயாச்சு
ஓட்டுவீட்டு மூலையில
உத்தரத்து ஓரத்துல
கட்டிவச்ச கூட்டுக்குள்ள
முட்ட அடகாத்திருப்பேன்
கண்ணான என் கண்ணுக
கண்ணுமுழிக்கயில
பெத்த மனம் பித்தம்மா
அத்தனையும் சொத்தம்மா
கழனி நெல்லுவெத
கேழ்வரகு கம்பு சோளம்
பூச்சி புழுவெல்லாம்
புடிச்சுதான் இரை கொடுப்பேன்
மனுசப் பயபுள்ளைக எனக்கு
அசலான உறவாகி அவன்
குடும்பதோட குடித்தனமா
நானிருப்பேன் வீட்டுகுள்ள
கல்யாணந்திருவிழா தைப்பொங்க
வந்தாக்கா வெள்ளயடிப்பாக
வெள்ளமனசுக் காரவுக
என் கூட்ட களக்கலயே
***
மகராச மனசு மக்க
மண்ணோட போயாச்சோ
குருவி நாங்கூடு கட்ட
தோதொண்ணு மில்லயப்பா
செல்போன் கதிரென்ன
கருவறுத்தாச்சு!
ஒரு காடு விட்டு வக்கல
நஞ்சயெல்லாம் காட்டுக் கருவ
பூச்சிக் கொல்லி போட்ட வெத
எம்ம கூண்டோட அழிச்சாச்சு
என்னோட வாரிசெல்லாம்
கருவோட செதயுதப்பா!
பருவமழ பொய்யாச்சு
தண்ணி வத்திப் போயாச்சு
காத்துக்கும் மூச்சுக்கும்
வெலவச்சு நாளாச்சு
இன்னக்கி எங்க இனம்
நாளக்கி மனுச இனம்
வெதச்ச வெனயெல்லாம்
வெளஞ்சு நிக்கயில
பொழச்சுப் போன்னு சொல்ல
ஒனக்கு யாரிருப்பா?