சிதறிக் கிடக்கும் மரணம்
சிதறிக்கிடக்கும் மரணம் தானே வாழ்க்கை
குவித்து நிறுத்தப் பட்ட வாழ்க்கை தான் மரணம்!
இரவு காணும் கனவு -பகல்!
பகல் மறைக்கும் பாவம்- இரவு!
சப்தங்கள் கூடி நடத்தும் தொழுகை - மௌனம்!
மௌனம் உறங்கும் போது உளறும் புலம்பல்கள் - சப்தம்!
பேரண்டத்தின் பார்வைக்கு வெளிச்சம் -வெண்விழி,
இருட்டு -கருவிழி!
பூப்படையாத புன்னகை தான் கண்ணீர்!
புடம் போட்ட கண்ணீர் தான் புன்னகை!
கருவறை தந்த எழுதாத கடிதம் பிறப்பு!
வாழ்க்கை முழுதும் எழுதி
கல்லறைப் பெட்டிக்குள் இடுகிறோம்!
முகவரி இல்லாமல்!