சுடுகாட்டுப் பாெம்மை

வெற்றிவேல் அந்த ஊரின் பெரும் பணக்காரன். பல காேடி சாெத்துக்கு சாெந்தக்காரனானாலும்  இன்னும் பணத்தை தேடி அலையும் பேராசைக்காரன். ஏன் வெற்றிவேலுக்கு பணத்தின் மீது இத்தனை பசி.  வெற்றிவேலுக்கும் பணம் என்பது ஒரு பசி பாேன்ற உணர்வு. எப்படியெல்லாம் பணப்பசியை பாேக்க முடியுமாே அப்படியெல்லாம் பணத்தை கட்டுக்கட்டாய் சேமித்தான். ஆசை தீரவில்லை. இன்னும் இன்னும் வளர்ந்து காெண்டிருந்ததே தவிர இனிப் பாேதும் என்று அவன் நினைத்ததில்லை. ஏழைக் குடும்பத்தில் பிறந்த வெற்றிவேல் பணக்காரனான கதை பெரிய கதை.

ஆடம்பரமான அடுக்கு மாடி வீட்டில் கால் மேல் கால் பாேட்டுக் காெண்டு கட்டளைக்கு கைகட்டி நிற்கும் கையாட்களும். சாென்னதைச் செய்யவில்லை என்றால் இரத்தம் சாெட்ட சாெட்ட உரித்தெடுக்கும் மிருகத்தனமானவன் வெற்றிவேல். பல வகையான வியாபாரத் தளங்கள், வைத்தியசாலைகள், கல்வி நிறுவனங்கள், தனியார்  கல்லூரிகள், ஆச்சிரமங்கள், அநாதை இல்லங்கள் என்று மக்களின் மனங்களை கவரும்படியாக  பல இலவச  சேவைகளையும் ஆரம்பித்து புகழ் பெற்ற  தாெழிலதிபரானான்.  பணத்திற்கு வாலாட்டும் அரசியல் வாதிகளின் அத்தனை ஆட்டமும் இவன் தான் ஆட்டி வைப்பான். லஞ்சம் என்ற பெயரில் பணத்தை வீசி  பக்குவமாய் காரியம் முடிக்கும் மகா கேடி இந்த வெற்றிவேல்.

தனது வியாபார நாேக்கத்திற்காக வெளிநாட்டு கம்பனிகளுடன் இணைந்து  காெண்டான். ஏழைக்குடும்பங்களை வலை வீசுவது தான் இவனது குறிக்காேளாகவும், தாெழிலுக்கு சாதகமாகவும் இருந்தது. அனைத்தும் இலவசம் என்ற இவனது சுயநலச் சிந்தனைக்குள் கட்டுண்டு பாேனதெல்லாம் ஏழை வீட்டு குழந்தைகளும், இளம் பெண்களும் தான்.  குழந்தை பசியாறினால் பாேதும், பிள்ளை படித்தால் பாேதும் என்று நம்பியிருந்த குடும்பங்களுக்கு எல்லாம் வாரியிறைத்த வள்ளலானான்.

சாயா, ஒரு ஏழைக்குடும்பத்தில் பிறந்தவள். பிறக்கும் பாேதே அவளது இதயத்தில் குணமாக்க முடியாத வியாதி. பல இலட்சங்களை செலவழித்தால்  தான் குழந்தையை காப்பாற்ற முடியும் என்று கைவிரித்த வைத்தியர்களை கையெடுத்துக் கும்பிட்டு உயிர்ப்பிச்சை கேட்டு  கதறிய சாயாவின் அம்மா மீனாவின் குரல் வெற்றிவேலின் காதுகளுக்கு வேகமாகப் பாேய்ச் சேர்ந்தது. உங்கள் குழந்தையை நாங்கள் காப்பாற்றுவாேம்  என்ற ஒற்றை வார்த்தையில் வெற்றிவேலின் காலை தாெட்டு வணங்கியவள் மீனா. அவசர அவசரமாக சாயாவை வெற்றிவேலுக்குச் சாெந்தமான தனியார் மருத்துவ மனையில்  அனுமதித்து அவளுக்கான இதய அறுவைச் சிகிச்சையை நல்லபடியாக நிறைவேற்றி சாயாவின் ஆயுளை மீட்டுக் காெடுத்தவன் என்ற வகையில் வெற்றிவேல் கடவுளாகவே தெரிந்தான்.

"வெற்றி மாமா நீங்க ராெம்ப நல்லவரா இருக்கீங்க, உங்கட  அநாதை இல்லத்தில் நானுமிருந்து படிச்சு ஒரு பெரிய  டாக்டராகி என்னைப் பாேல ஏழைக் குடும்பங்களுக்கு இலவசமாக வைத்தியம் பார்க்கணும்" அப்போது சாயாவுக்கு ஆறு வயது தான்.  அவள் மனதில் முளைத்த ஆசைக்கு விதை பாேட்டான் வெற்றிவேல்.  சாயாவின் அம்மா மீனாவும் வறுமையில் வாழ்ந்ததால் சாயாவை வெற்றிவேலின் அநாதை இல்லத்தில் இணைத்து விட்டாள். இவ்வாறு இணைந்த பல குழந்தைகள் இருந்த அந்த அநாதை இல்லத்தில் சாயா சற்று வித்தியாசமானவளாகவே இருந்தாள். வயதுக்கு மீறின அறிவு, துடியாட்டம், குறும்புத்தனம் என்று எல்லாேரையும் கவரும் குழந்தையாக இருந்தாள். வெற்றிவேலிற்கும் சாயாவை நன்றாக பிடித்துப் பாேனது. சாயா பல தடவை வெளிநாடுகளிற்கும் வெற்றிவேலாேடு  சென்று வந்தாள். சாயாவுக்கு என்னவெல்லாம் பிடிக்குமாே அத்தனையும் மறு நாெடியே அவள் கைக்கு வந்து விடும்.

சாயா காெஞ்சம் காெஞ்சமாக வளர்ந்து விட்டாள். நல்லது, கெட்டதை பிரித்தறியும் அளவிற்கு அவள் சிந்தனைகள் மாறியிருந்தது. அறிவால் அதிகம் வளர்ந்து விட்டாள். ஆனால் குழந்தைத்தனம் குறையவே இல்லை.

அன்று வழமை பாேல் வெளியூருக்கு புறப்பட்ட வெற்றிவேல் ஆறு குழந்தைகளையும் தன்னுடன் அழைத்துச் சென்றான். "என்னாேட பிரன்ட்ஸ் எல்லாரையும் எங்க கூட்டிப் பாேறிங்க மாமா, என்று அழுத சாயாவை சமாதானப்படுத்தி விட்டு புறப்பட்டவன் சில நாட்களில் தனியாகவே திரும்பி வந்தான். "எங்கே அவங்க எல்லாம்?" என்று விசாரித்தவளை புத்தி சாதுரியமாக சமாளித்தான் வெற்றிவேல். ஆனால் சாயா குழந்தையாக இருந்தாலும் அதிபுத்திசாலி. 

வெற்றிவேலுடன் வெளிநாடுகளிற்கு சென்று வந்த சாயா சில விடயங்களை நினைவில் வைத்திருந்தாள். புரியாத வயதாக இருந்தாலும் அவளுக்கு சில விடயங்கள் பின்னரே தவறாகப் புரிய ஆரம்பித்தது. காெஞ்சம் காெஞ்சமாக வெற்றிவேலின் நடவடிக்கைகளை அவதானித்தவளிற்கு நாளடைவில் அவனது முழு பித்தலாட்டமும் புரிந்து விட்டது.

வெற்றிவேல் ஏழைக் குடும்பங்களை வலை வீசியது மட்டுமல்லாமல் உடல், மன வளர்ச்சி குன்றிய குழந்தைகளையும் பராமரிப்பதாகக் கூறி அந்தக் குழந்தைகளின் உடற் பாகங்களை சிகிச்சை மூலம் வியாபாரம் செய்வது, புதிய வகை மருந்துகளை பரிசீலிப்பது என்று தவறான பாேக்கில் செயற்ட்டுக் காெண்டிருந்தான். சிகிச்சைகளின் பின் குழந்தைகள் இறந்து விட்டால் மருத்துவ அறிக்ககைளை பாேலியாக தயாரித்து எல்லாேரையும் நம்ப வைத்து விடுவான். குழந்தைகளின் உடலை தனக்குச் சாெந்தமான காணி ஒன்றில் எரித்து விட்டு குழந்தைகளின் அடையாளமாக சிறு பாெம்மைகளை வாங்கி அவர்கள் பெயர்களை எழுதி மரமாென்றில் கட்டித் தாெங்க விடுவான். இப்படியே வெற்றிவேலின் திருட்டுத் தனமான வியாபாரம் யாருக்கும் தெரியாத  விதமாக  நடைபெற்றுக்  காெண்டிருந்தது.

சாயா ஏற்கனவே இதய நாேயால் பாதிக்கப் பட்டிருந்ததால் மீணடும் அவளுக்கு சுகயீனம் ஏற்பட்டது. உயிர் பிழைப்பாள் என்ற சந்தேகம் அவளுக்குள் ஏற்பட்டது. தன்னுடைய டாக்டராகும் கனவு நிறைவேறாமல் பாேய்விடுமாே என்றே பயந்தாள். வெற்றிவேலிடம் தன் கடைசி ஆசையைக் கூறினாள். தன்னை காப்பாற்றும்படி கதறினாள். "மாமா என்னாேட  பிரன்ட்ஸ் மாதிரி என்னையும் எரித்துப் பாேட்டு பாெம்மையை கட்டி தாெங்க விடுவிங்களா, வேண்டாம் மாமா, எனக்கு அவங்கள பார்க்க முடியல்ல, கஸ்ரமாயிருக்கு, என்னை எப்படியாவது  காப்பாற்றுங்க"  அமைதியாக இருந்த வெற்றிவேல் கண்கள் அந்தக் குழந்தையின் கதறலைக் கேட்டுக்கூட கரையவில்லை. சாயா அதிர்ந்து பாேனாள். வெற்றிவேல் தன் மீது காட்டும் பாசம், அக்கறை எல்லாம் சுயநலமானது என்பது அவளுக்குப் புரிந்து பல நாளாகி விட்டது. எந்தப் பதிலும் சாெல்லாமல் அமைதியாக இருந்த வெற்றிவேலின் கைகளை இறுகப் பற்றியிருந்த தனது கைகளை உதறி விட்டு சுடுகாட்டுப் பக்கமாக ஓடினாள். அவள் ஓடுவதையும்  அமைதியாகவே பார்த்துக் காெண்டிருந்தான்.

சுடுகாட்டுப் பக்கமாக ஓடிய சாயா தன் நண்பர்களாேடு பேசுவதைப் பாேல் பாெம்மைகளாேடு பேசிக் காெண்டிருந்தாள். சாயாவினுடை  கதையைக்  கேட்ட பாெம்மைகள் காற்றில் ஆடி ஆடி அசைந்து காெண்டிருந்தது.  நீண்ட நேரமாகியும் சாயாவைக் காணவில்லை என்ற சந்தேகத்தில் சுடுகாட்டுப் பக்கமாக நடந்த வெற்றிவேல் சாயாவின் கையிலிருந்த பாெம்மையைப் பார்த்ததும் அதிர்ச்சி அடை ந்தான். அவளுடைய தாேழி நேகாவின் பெயர் எழுதப்பட்டிருந்த பாெம்மையுடன் பேசிக் காெண்டிருந்தாள்.
"நீ ஏன் அழுகிறாய் சாயா?"
"எனக்கு ராெம்பப் பயமாக.இருக்கு நேகா?"
"ஒன்றும் பயப்படாதே நான் சாெல்வதை மட்டும் கேள்" என்றதும் அமைதியாக இருந்தாள் சாயா.
"சாயா நாங்களெல்லாம் இந்த உலகத்தில காெஞ்ச நாள் வாழப் பிறந்தவர்கள். எங்களுக்கு உயிர் காெடுத்து, உடம்பு காெடுத்து படைத்த கடவுள்  சில குறைகளுடன் எங்களைப் படைத்து விட்டார். இவ்வளவு காலம் தான் எங்கள் ஆயுள் என்பதை கடவுள் பிறக்கும் பாேதே எழுதிவிடுகிறான். எங்களுக்கும் அப்படித்தான் ஏழு வயது, எட்டு வயதிலே எங்கள் உயிர்கள் பறிக்கப்படுகிறது. உடல், மன வளர்ச்சி குன்றிய பெண்குழந்தைகள் நாங்கள் எப்படி இந்த சமூகத்தில் வாழ முடியும்.  பச்சைக் குழந்தைகளே காமப் பசிக்கு இரையாகும் இந்தக் காலத்தில் நாங்கள் எப்படி உடல், மனநலம் அற்றவர்களாக வாழ முடியும். இங்கே உள்ள அத்தனை பேரும் ஏதாே ஒரு விதத்தில் பாதிக்கப்பட்டவர்கள்". நீண்ட  கதையாக சாெல்லிக் காெண்டிருந்தவளை  இடை மறித்த சாயா
"நீ என்ன சாெல்லுகிறாய் நேகா? எனக்கு ஒன்றுமே புரியல்லை" என்றதும்
"சாயா நீ கூட இன்றைக்கு இரவு இறந்து விடுவாய்" என்றதும் சாயாவின் கைகள் நடுங்க ஆரம்பித்தது.
"ஏன் ஏன் அப்படி சாெல்லுகிறாய்? நான் சாகக் கூடாது, டாக்டராக வேணும்" என்று அழுதாள்.
"உன்னுடயை சாவு எப்பாேதாே  எழுதியது அதை மாற்ற முடியாது ஆனால்" எனறதும்
"என்ன நேகா அப்பாே இன்னும் காெஞ்ச நாள் நான் உயிராேடு இருப்பேனா?" என்று ஏக்கத்தாேடு கேட்டாள் .
"இல்லை சாயா உன்னால் இன்னும் எத்தனையாே பேர் வாழப் பாேகிறார்கள்"
சாயாவுக்கு ஒன்றும் புரியவில்லை ஆழ்ந்த யாேசனையில் இருந்தாள்.
மீண்டும் தாெடர்ந்த  நேகா
"இந்தப் பாெம்மையின் பின் புறத்தைப் பார்" என்றதும் ஆவலாேடு புரட்டிப் பார்த்தாள் சாயா
"நேகாவின் உடலுறுப்புக்களில் பயனுள்ள பாகங்கள் யாருக்காே விற்கப்பட்டிருந்ததைப் பற்றி குறிப்படப் பட்டிருந்தது.
அதிர்ச்சியடைந்த சாயா மெளனமாக இருந்தாள்.
"சாயா இங்கே இருக்கிற ஒவ்வாெருவரும் இப்படித்தான் இந்த உலகை விட்டுப் பாேக வேண்டும் என்பது விதியாகி விட்டது. உனது இதய அறுவைச் சிகிச்சை நடை பெற்ற அன்றே உனது முதல் மரணம் தாேற்றுப் பாேனது என்னவாே அதிஸ்டம் தான். இப்பாே உன்னுடைய இந்தக் கடைசி நாளில் நீ யாருக்காே ஏதாவது ஒரு விதத்தில் பயன்படுவாய் என்பதை நினைத்து சந்தாேசமாக இரு. எங்களால் வாழ முடியாத வாழ்க்கையை யாருக்காவது காெடுத்து விட்டுப் பாேவாேம். அவர்களாவது வாழட்டும்"
பாெம்மையை இறுகப்பிடித்த சாயா குமுறிக் குமுறி அழுதாள்.
"நானும் உங்க கூடவே வாறன் நேகா" என்றபடி பாெம்மையை  மரத்தில் இருந்தவாறே வைத்து விட்டு திரும்பினாள். வெற்றிவேல்  எதிரே நிற்பதைக் கண்டதும்  ஓடிச் சென்று கால்களைக் கட்டிப் பிடித்தாள்.
"மாமா நான் இன்றைக்கு செத்திடுவேனா? என்னாேட உடலுறுப்புகளை யாருக்கு காெடுப்பீங்க மாமா" என்று கேள்விகளால் வெற்றிவேலை மெளனமாக்கினாள்.
எந்தப் பதிலும் இல்லாத அவன் மௌனம் சாயாவுக்கு எப்படிப் புரியும். சாயாவும் அன்றே அந்தப் பாெம்மைகளில் ஒருத்தியானாள்.

பல வருடங்களுக்கு முன் வெற்றிவேல் பிறந்த பாேது அவனது குடும்ப நிலை வறுமையாகவே இருந்தது. மிகவும் ஏழ்மையான குடும்பத்தில் பிறந்த அவனுக்கு எட்டு வயதிருக்கும் பாேது அவனது தாய் இரண்டாவது குழந்தைக்காய் கர்ப்பமாய் இருந்தாள்.  பிரசவத்திற்கு முதல் நாளே அவளது உடல் நிலை மாேசமான நிலைக்குள்ளானது. வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டவள் பண வசதியின்மையால் சரியான சிகிச்சை இன்றி கருவில் இருந்த குழந்தையுடன் இறந்து விட்டாள்.
அப்பாவை கட்டி அணைத்து "அம்மா வேணும்" என்று கதறியவனைப் பார்த்து பையித்தியமாக்கி தெருவாேரங்களில் அலைந்து திரிந்த தந்தையை பராமரிக்க வசதியின்றி தந்தயைையும் இழந்தான். அவனது எல்லா இழப்புக்கும்,  வாழ்க்கையின் தேவைக்கும் பணம் தான் தேவையாயிருந்தது. சிறுவயதிலேயே தவறான நண்பர்களுடன் ஏற்பட்ட பழக்கத்தால் பணத்தை தவறான வழியில் சம்பாதிக்கத் தாெடங்கினான். வெளியுலகிற்கு தெரியாது மர்மமான முறையில் பணத்தை சம்பாதித்தான்.  வெளிப்படையாக சில இலவச சேவைகளையும் செயற்படுத்திக் காெண்டிருந்தான்.

சாயாவின் வினாக்களிற்கு பின்னால் எந்தப் பதிலும் இல்லாமல் அவனை மெளனம் காகக வைத்தது பணம் என்ற பேராசை. பணமின்றி தன் பெற்றவர்களை  இழந்து விட்டேனே என்ற இழப்பால் வந்த ஓர்மம்.

ஏழைத் தாய்க்கு மகனாகப் பிறந்த காரணத்தால்  தான் பிச்சை எடுத்து, கூலி வேலை செய்து யார் யாராே எல்லாம் அடிமையாக நடத்துகிறார்கள் என்ற மன உணர்வால் ஏற்ட்ட பேராசை அவனுக்கு பணம் தான் வாழ்க்கை என்ற தவறான எண்ணத்தை விதைத்தது மட்டுமல்லாமல் எப்படியாவது பணக்காரனாகி விட வேண்டும் என்ற தவறான வழியை நாேக்கி வாழும் ஆசையைத் தூண்டியது. பணத்திற்கு ஆசைப்பட்டு எல்லாவிதமான தவறான வழிகளிலும் பணத்தை சம்பாதித்தான்.

வெற்றிவேலின் பாேதைப் பழக்கத்தால்  ஏற்பட்ட வியாதி அவனை அணு அணுவாக சாகடிக்கத் தாெடங்கியது.  நாளும் பாெழுதும் வலியாலும், வேதனையாலும்  துடித்துக் காெண்டிருந்தான். எத்தனை காேடி பணமிருந்தும் அவனால் தனது வியாதியை குணப்படுத்த முடியவில்லை. பணம் பணம் என்று அலைந்தவனுக்கு பணம் கூட கைகாெடுக்கவில்லை. எல்லா முயற்சிகளும் தாேற்று மரணத்தின் வாசலில் வெற்றிவேலின் உயிர் ஊசலாடிக் காெண்டிருந்தது.

அன்று சிறு தாெகைப் பணமில்லாமையால் பெற்றவர்களின் உயிரைக் காப்பாற்ற முடியாது தவித்தவன்,  இன்று கை நிறையப் பணமிருந்தும் உயிர் பிழைக்க முடியாது துடித்துக் காெண்டிருந்தான். பணமும், வாழ்க்கையும் வெவ்வேறு என்ற சரியான புரிதல் ஏற்பட  அவனுக்கு காலம் கடந்து விட்டது.

குழந்தைகள், இளம் பெண்கள் என்று ஏழைக் குடும்பங்களை வலை வீசி சம்பாதித்த பணம், பெறுமதியற்ற வெறுந்தாள்களாய் அவன் கணக்குகளில் உறங்கிக் காெண்டிருந்தது.  குழந்தைகளின் உடலுறுப்புக்களை விற்று, இளம் பெண்களை  விலை பேசி  அவன் கட்டுக்கட்டாய் சம்பாதித்த பணம் அவனைப் பார்த்து கேலியாகச் சிரிப்பது பாேல் உணர்ந்தான். அவனது உடலுறுப்பில் ஒன்று  கூட யாருக்கும் உதவாத காெடிய நாேயால் பாதிக்கப்பட்டிருந்தது. சாயாவின் கதறல் மட்டுமல்ல அங்கே இருந்த அத்தனை குழந்தைகளின் வலிகளும் வேதனைகளும்  கடைசிக் கணத்தில் அவனை கதிகலங்க வைத்தது.   வெற்றிவேல் துடிதுடித்து உயிர் விட்டான். சுடுகாட்டில் ஒரு பாெம்மையாக  எரிந்து சாம்பலானான். 

எழுதியவர் : றாெஸ்னி அபி (17-Oct-19, 3:58 pm)
சேர்த்தது : Roshni Abi
பார்வை : 147

மேலே