மழை | முஹம்மது ஸர்பான்
பட்டாம் பூச்சிகள் போல
சிறகுகள் கிடையாது
ஆனால், நீ பறக்கிறாய்
மூங்கில் காடுகள் போல
இதழ்கள் கிடையாது
ஆனால், நீ பாடுகிறாய்
முயல்கள் போல துள்ள
கால்கள் கிடையாது
ஆனால், நீ பாய்கிறாய்
பிளேபாய் பூக்கள் போல
மீசைகள் கிடையாது
ஆனால், நீ ரசிக்கிறாய்
தளிர்களின் மார்புகளில்
துளித்துளி தமிழால்
ஹைக்கூ எழுதுகிறாய்
பாம்புக்குட்டிகள் போல
குட்டிக் குட்டி படகாய்
நீ ஓவியம் வரைகிறாய்
மொட்டை மாடி மேலே
குளிர் கூட குளிர் காய
ஒரு கோப்பை பூமியில்
தூவானம் தூவத் தூவ
பூ மீதா முள் மீதா கூறு
எதற்கிந்த தற்கொலை
ஏதேதோ கதைகள் பேச
எங்கெங்கோ போனாய்
குடை என்ற கத்தியால்
குத்து வாங்கி செத்தாய்
வானவில் எட்டிப்பாக்க
நிலம் கூட நிழல் சாய
மயில் தோகை விரிக்க
நிறம் கூட கரு சுமக்க
கல் மீதா நதி மீதா கூறு
எதற்கிந்த தற்கொலை
யார் யாரோ பிராத்திக்க
என்றாவது நீ வருவாய்
நிலா என்ற ராதையால்
பல மாதம் கைதாவாய்
இனி பல லட்சம் வினா
நீ யாரென்று கூறுவாய்
இந்நாள் எந்நாள் என்று
ஒரு நாள் கூறும் மழை