வருகிறது தீபாவளி
ஒருவாரம் முன்பே மனம்
குதுகூலமிடும் ஏதேதோ
எண்ணம் வந்து போகும் கனவாய்...
அப்பா என்ன எடுத்து வருவார்
புதுத்துணி என பட்டிமன்றம்
அரங்கேறும் எனக்கும் என் தங்கைக்கும்
இரவெல்லாம் கண்விழித்திருப்போம்
அந்த விடியலுக்காக
அம்மா சுட்டு தரும்
பலகாரங்களுக்கு நாக்கில் எச்சில் ஊரும்
அந்த வெடி வாங்கணும்
இந்த வெடி வாங்கணும்
என்று மனக்கணக்குகள்
கணக்கின்றி அப்பா வருவதற்குள்
என்றும் கவலை கொண்டதில்லை
அப்பா அம்மாவிற்கு என்ன
புது துணி எடுத்தார்கள் என
அரக்கு தேய்த்து எண்ணெய் வைத்து
குளித்து அந்த புதுத்துணி
எப்போது கையில் கிடைக்கும் என
ஏங்கிய நாட்கள் எத்தனை எத்தனை
கையில் கிடைத்ததும் போட்டுகொண்டு
தெருவை அளந்த நாட்கள்
எத்தனை எத்தனை
இப்போதும் வருகிறது தீபாவளி
அரக்கு எண்ணெய் வைக்க
புதுத்துணி எடுத்து தர
புன்னகையோடு பலகாரம் பரிமாற
அம்மா அப்பாதான் இல்லை என்னோடு
வெடி வெடிக்கிறது மனது
சப்தமின்றி .....