குளிரூட்டப்பட்ட கொட்டகை

அது ஒரு
பொன்மாலைப்
பொழுது கொட்டகை

தினமும் மாலை
மட்டும் இயங்கும்
மந்திர சன்னதி

யார்
வேண்டுமானாலும்
வரலாம்
எல்லா சாதியும்
எல்லா மதமும்
எல்லா இதயங்களும்
அனுமதிக்கப்படும்

அந்த கொட்டகை
பக்கத்தில்
வசிப்பவர்கள்
பேரதிர்ஷ்டசாலிகள்

அவர்களுக்கு
மட்டும்
விலைச்சலுகை உண்டு

மாலை வந்ததும்
மனிதத் தலைகள்
படர்ந்துவிடும்

அந்த
கொட்டகையில்
நுழைவதற்கு
"முன் பதிவு"
அவசியம்

இப்போது
"ஆன்லைன் முன்பதிவும்"
நடைமுறையில் உள்ளது
ஆனால்
விலைகளைப் பற்றி
யாரும் பெரிதாய்
அலட்டிக் கொள்வதில்லை

அந்த கொட்டகை
செல்லும் யாவரும்
குழம்பிய முகத்தோடு
செல்வர்
தெளிந்த முகத்தோடு
திரும்புவர்

அது
500 சதுரடிகள்
கொண்ட
குளிரூட்டப்பட்ட
கூரை கொட்டகை

'குண்டு பல்பு'
ஒன்று மட்டும்
மையத்தில்
எரிந்துகொண்டிருக்கும்

கொட்டகை முழுதும்
மெல்லிய பின்னணி இசை
ஒலித்துகொண்டிருக்கும்

முக்கியமான நிபந்தனை
"ஒருவருக்கு
பத்து நிமிடம்"
மட்டுமே

உள்ளே நுழைந்ததும்
கதவு அடைக்கப்படும்
கொட்டகை மய்யத்தில்
மரக்கட்டில் இருக்கும்
அதன்மீது
ஜமுக்காலம்
விரிக்கப்பட்டிருக்கும்

ஒருபக்கத்தில்
ஒருகுவளை தண்ணீரும்
ஒருகூடை 'திஷ்யூ பேப்பரும்'
இருக்கும்
இதுதான் அந்த
கொட்டகையின் உடமைகள்

இப்போது
கட்டிலில் உட்கார்ந்து
கண்ணை மூடி
கவலைகளை பட்டியலிட்டு
..........
சத்தமாக அழுகலாம்
தேம்பித் தேம்பித்
அழுகலாம்
கண்ணீர் தீரத்தீர
அழுகலாம்

உடைந்துபோன காதல்
அநாதை இல்ல அம்மா
மனைவியின் கோபச்சண்டை
கணவனின் கற்பழிப்பு
முதிர்கண்ணியின் கலியாண கனவு
இன்ஜினியரிங் வேலையின்மை

என ஆளுக்கொரு
காரணம் இருக்கிறது
அழுது துயர் நீக்கி
தன்னை மீட்டுருவாக்கம்
செய்துகொள்ள

ஆனால் அதற்கு
பொருத்தமான இடம்தான்
இதுவரை இல்லை
அதனால்தான் இந்த
'குளிரூட்டப்பட்ட கொட்டகை'

அழுவதற்கான
இடமற்றவர்கள்

அழுவதற்கான
நேரமற்றவர்கள்

அழுவதற்கான
சூழ்நிலையற்றவர்கள்

அழுவதற்கான
பொறுமையற்றவர்கள்

என எல்லோரையும்
இக்கொட்டகை
'அன்புடன் வரவேற்கிறது'

-பாரதி நேசன்

எழுதியவர் : பாரதிநேசன் (25-Oct-19, 4:04 pm)
சேர்த்தது : பாரதிநேசன்
பார்வை : 43

மேலே