தயைசுரந்து மன்னுயிர்பால் அருள்புரியின் வானமே உன்முன் வரும் - இதம், தருமதீபிகை 504

நேரிசை வெண்பா

தன்னை மறந்து தயைசுரந்து மன்னுயிர்பால்
அன்னை எனவே அருள்புரியின் - பின்னையோர்
தானம் தவமேன் தருமமேன் ஞானமேன்
வானமே உன்முன் வரும். 504

- இதம், தருமதீபிகை,
- கவிராஜ பண்டிதர் ஜெகவீர பாண்டியனார்

பொருளுரை:

தன்னலத்தை மறந்து தண்ணளி சுரந்து மன்னுயிர்களிடம் அன்னையென இரங்கி அருள் புரிந்துவரின் அதுவே தானம், தவம், தருமம், ஞானமாய் மருவும்; பரமபதமே உன் முன் உரிமையாய் வரும் என்கிறார் கவிராஜ பண்டிதர். அன்புதவி இன்ப நிலையமாகிறது.

தனக்கு நலத்தை முதலில் நாடிக்கொண்டு பின்பு அயலார்க்கு உதவி செய்வது, தன்னலத்தை மறந்து பிறர்க்கிதம் புரிவது என உபகார நிலைகள் இருவகையில் உள. முன்னதினும் பின்னது பெரு மகிமையுடையது. அரிய செயல்களையுடையவர் பெரியவர்கள் ஆகின்றனர்.

செயல் சுருங்கி இயல் குறைந்த பொழுது மனிதன் இழிந்து போகின்றான். உதவி நலம் இல்லாதவர் ஒன்றுக்கும் உதவாத களர் நிலம்போல் கழித்துத் தள்ளப் படுகின்றார் கழிநீர்க் குட்டம்போல் இழிவாயுள்ளமையால் அவர் வாழ்வு வையச் சுமையாய் வையப் படுகின்றது.

உள்ளம் கனிந்த உதவியாளரை உலகம் என்றும் உவந்து தொழுகின்றது. கற்பகத் கரு, சிந்தாமணி, அந்தம் என்னும் அற்புதப் பெயர்களால் போற்றப் பெற்று அவர் புகழ் ஓங்கி மிளிர்கின்றார். அளி புரிய ஒளி புரிகிறது.

இதநலமுடையவர் எவ்வுயிர்க்கும் இனியராய் வருதலால் அவர் திவ்விய நிலையில் சிறந்து திகழ்கின்றார். உயர்ந்த மனிதப் பிறவிக்குத் தகுந்த அடையாளம் உதவி செய்வதேயாம்.

மனிதன் என்றும் தனக்கு இதத்தையே விரும்பியுள்ளமையால் அவன் யாண்டும் அதனைச் செய்து வர வேண்டியவனாய் அமைந்திருக்கிறான். செய்யவுரியதைச் செய்யாமல் மறந்து விட்டு வெய்யதை விழைந்து செய்வது விபரீதமாயுள்ளது.

இனியதை விழைகின்றான், இன்னாததை விளைக்கின்றான். பழகிய பழக்கங்களில் சுவைக்கேடுகள் படிந்திருத்தலால் செயல்களிலும் இயல்களிலும் அவகேடுகள் விளைந்து வருகின்றன.

நல்லதில் சுவை தோன்றாதிருப்பது பொல்லாத நிலையைப் புலப்படுத்தி நிற்கிறது. அருந்தலிலும், பொருந்தலிலுமே மக்கள் சுவை கண்டு களிக்கின்றனர்.

தேக போகங்களானவற்றினும் மேலான நிலையில் சுவை காண்பவர் மிகவும் அரியராயுள்ளனர். புத்தி தத்துவத்தில் காண்கின்ற அந்த உத்தம இன்பத்தைக் கலைஞர்களுள்ளும் சிலர்தான் அனுபவிக்கின்றனர். ’இந்திர போகத்தினும் இனியது கம்பன் கவி இன்பம்’ என்றதனை நுகர்ந்து மகிழ்ந்துள்ள சுவையாளன் இங்ஙனம் வியந்து புகழ்ந்திருக்கிறான் கலை நிலையில் கனிந்தெழுகின்ற இந்த அறிவின் சுவையினும் சீவ தயையில் விளைந்து வருகிற இன்பம் மிகவும் சிறந்தது.

பிற உயிர்களுக்கு உதவி புரிவதில் ஓர் உயர்ந்த இன்பம் உதயமாகிறது. ’ஈத்து உவக்கும் இன்பம்’ என வள்ளுவர் அதனை வாழ்த்தியிருக்கிறார், ஈகையால் விளையும் அவ்வுவகையை எவர் அனுபவிக்கின்றனரோ அவர் பெரிய மனிதராய் அரிய தெய்வீக நிலையைப் பெற்றவராகின்றார். அந்தச் சுவையில் அதிகம் தோய்ந்தவர் உடல், பொருள், ஆவி எதையும் எளிதே ஈந்து விடுகின்றனர்.

15 உள்ளி உள்ளயெல் லாமுவந்(து) ஈயுமவ்
வள்ளி யோரின்வ ழங்கின மேகமே. 4 ஆற்றுப் படலம், பால காண்டம், இராமாயணம்

வள்ளல்கள் உயிர்களுக்கு வழங்குவது போல் மேகம் பயிர்களுக்கு வழங்கின என்னும் இது ஈண்டு உளங்கூர்ந்து உணரவுரியது. உணர்ச்சியின்றி இயற்கையாகப் பெய்தலால் உணர்ச்சியோடு உதவுகின்ற வள்ளியோர் மேகத்திற்கு உவமையாய் நின்றனர். அவர்க்கு உளவாகின்ற உள்ளலும் உவகையும் இதற்கு இலவாயின. உள்ளி என்றது எதனை?

உதவியில் இன்பம் காண்பவர் உயர்ந்த மேன்மக்களாய் ஒளி மிகுந்துள்ளனர். உண்மையான உயிரின் சுவை யாண்டும் உயர் நிலையில் மிளிர்கின்றது.

All wordly joys go less
To the one joy of doing kindnesses. - George Herbert

’அன்பு கனிந்து செய்கிற ஓர் உதவி இன்பத்திற்கு உலக இன்பங்கள் எல்லாம் நிகராகாது' என ஜார்ஜ் ஹெர்பர்ட், என்னும் மேல்நாட்டு அறிஞர் இங்ஙனம் கூறியிருக்கிருர் உபகார நீர்மைகளை எந்த நாடுகளும் உவந்து புகழுகின்றன.

தானம், தவம், தருமம், ஞானம், துறக்கம் என்னும் அரிய நிலைகள் உபகாரிக்கு எளிமையாய் உரிமையாகின்றன.

வானமே உன் முன் வரும்; பிறர்க்கு இதம் புரியும் உதவியாளனை நோக்கிச் சுவர்க்கம் ஓடி வரும் என்றது புண்ணிய வுலகத்தின் தன்மையையும் உண்மையையும் எண்ணி யுணர வந்தது.

எவர்க்கும் இதம் புரிக; யாண்டும் நலமே கருதி நல்லது பேசுக; எல்லா இன்பங்களும் உனக்கு உளவாகும் என்கிறார் கவிராஜ பண்டிதர்.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (28-Oct-19, 9:10 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 70

சிறந்த கட்டுரைகள்

மேலே