இறைவன் அருகொன்றி வாழ அறி - மதம், தருமதீபிகை 514
நேரிசை வெண்பா
ஒக்கலுறு பிள்ளையாய் உள்ளன்பன் ஒட்டிநின்றான்;
மிக்க வுயர்ஞானம் மேவினான்; - பக்கல்
வருகின்ற பாலனாய் வந்தான்; இறைவன்
அருகொன்றி வாழ அறி. 514
- மதம், தருமதீபிகை,
- கவிராஜ பண்டிதர் ஜெகவீர பாண்டியனார்
பொருளுரை:
கனிந்த அன்பு கடவுளின் கைக்குழந்தையாய் மிக்க இன்பம் பெறுகிறது: தெளிந்த ஞானம் வளர்ந்த பாலனாய்க் கிளர்ந்து வருகிறது; இருமை நிலையுமுணர்ந்து உரிமையில் உயர்க என்கிறார் கவிராஜ பண்டிதர். இப்பாடல், அறிவினும் அன்பு இனிது என்கின்றது.
உயிர்கள் கடவுளுடைய ஒளிகள். மனித உடம்புகளை மருவியன அறிவு மிகப் பெற்றுச் சீவ கோடிகளுள் மேன்மையாய் விளங்குகின்றன. படியேறிப் பக்குவம் அடைந்த பொழுது முடிவு நிலைகளை அவை உணர நேர்கின்றன. அங்ஙனம் உண்மைகளை நன்கு உணருங்கால் மெய்யுணர்வுடையனவாய் உய்தியுறுகின்றன. பரமனை நோக்கியன பரமாய் உயர்கின்றன. அவ்வுயர்வே உயர்ந்த பிறவிப் பயனாய் ஒளி மிகுந்து தெளிவமைந்துள்ளது.
அறிவு நலம் பெருகவே மனிதன் உறுதி நிலைகளை ஓர்ந்து கொள்கிறான். ஓராதொழியின் அந்த அறிவு வறிதாய் இழிகின்றது. தெய்வக் காட்சியை மருவிய பொழுதுதான் மனிதன் புனிதனாயுயர்கிறான். மருவாவழி அவனுடைய கலையறிவும், நிலையறிவும் புலையுறுகின்றன.
கற்றதனால் ஆய பயன்என்கொல்? வாலறிவன்
நற்றாள் தொழாஅர் எனின். 2 கடவுள் வாழ்த்து
சிறந்த கல்வியறிவுக்குப் பயன் உயர்ந்த .பொருளை உணர்ந்து வணங்குவதேயாம் என வள்ளுவர் இங்ஙனம் உணர்த்தியுள்ளார்.
எல்லாம் அறிய வல்லவனாதலால் கடவுளை வாலறிவன் என்றார். இயல்பாகவே யாவும் அறியும் மெய்யுணர்வு வாலறிவு என வந்தது. பயின்று முயன்று மனிதன் சிறிதே அறிகிறான். சிற்றறிவனான இவன் முற்றறிவனை உற்றறியின் அது உயிர்க்கு ஊதியமாய் உய்தி தருகிறது.
நூலறிவன், வாலறிவனை உரிமையோடு கருதி வருமளவே உயர் மகிமைகளை மருவி வருகிறான்; பெரிய நினைவு அரிய பெருமையாய் உருவேறி உயர்கிறது; இன்ப நிலையமான இனிய பொருளைத் தழுவினவன் இன்பமிகப் பெறுகின்றான்.
‘குழந்தையும் தெய்வமும் கொண்டணைந்த இடம்’ என்னும் பழமொழி கடவுள் நிலைமையை விழி தெரிய விளக்கியுளது.
எங்கும் நிறைந்துள்ள இறைவனை எந்த உள்ளம் உரிமையோடு கருதுகிறதோ அங்கே அவன் ஒளியாய் உலாவுகின்றான்.
அறுசீர் விருத்தம்
(விளம் மா தேமா அரையடிக்கு)
(விளம் வருமிடத்தில் மாங்காய்ச் சீர் வரலாம்)
காயமே கோயி லாகக்
..கடிமன மடிமை யாக
வாய்மையே தூய்மை யாக
..மனமணி யிலிங்க மாக
நேயமே நெய்யும் பாலா
..நிறையநீ ரமைய வாட்டிப்
பூசனை யீச னார்க்குப்
..போற்றவிக் காட்டி னோமே. 4
விள்ளத்தான் ஒன்று மாட்டேன்
..விருப்பெனும் வேட்கை யாலே
வள்ளத்தேன் போல நுன்னை
..வாய்மடுத் துண்டி டாமே
உள்ளத்தே நிற்றி யேனும்
..உயிர்ப்புளே வருதி யேனும்
கள்ளத்தே நிற்றி யம்மா
..எங்ஙனங் காணு மாறே. 7 - 076 பொது, நான்காம் திருமுறை, திருநாவுக்கரசர் தேவாரம்
திருநாவுக்காசர் ஈசனைக் கருதியுருகி உரிமையோடு இவ்வாறு பேசியிருக்கிறார். அன்பு கனிந்த அனுபவ மொழிகள் ஆன்ம இன்பங்களை அருளுகின்றன. ‘உள்ளத்தே நிற்றி, உயிர்ப்புளே வருதி’ என்றதில் அவர் செய்து வந்துள்ள தெய்வ பாவனை தெரிய வந்தது. சுவாசத்திலும் ஈசுர வாசனை வீசி வருகிறது.
’ஒக்கலுறு பிள்ளையாய் உள்ளன்பன் ஒட்டி நின்றான்’ இறைவனை உரிமையுடன் அடையும் நெறிகள் பலவுள்ளன. அவற்றுள் பத்தியும் ஞானமும் தலை சிறந்தன. பத்தி உருகி ஒன்றாகிறது; ஞானம் கருதித் தெளிந்து மருவி மகிழ்கிறது. கனிந்த அன்பும், தெளிந்த ஞானமும் விழி தெரிய வந்தன.
ஒரு தாயின் இடுப்பில் இருக்கும் இளங்குழந்தையைப் போல் பக்திமான் கடவுளை ஒட்டி நிற்கிறான்; கையில் பிடித்து நடத்திச் செல்லும் பாலனைப் போல் ஞானவான் நிலவுகிறான். கையை விடின் ஞானி விலகி விடுகிறான்; பத்தன் யாதும் அகலாமல் என்றும் ஒன்றி மகிழ்கிறான் ஞானம் தானாகப் போய்த் தழுவுகிறது; பத்தி வசமாய்ப் பரமன் வருகிறான்.
‘ஒக்கல் உறு பிள்ளை, பக்கல் வரு பாலன்’ என்னும் இவ்வுருவகங்களால் பத்தனும் ஞானியும் பரமனைப் பற்றி நிற்கும் நிலைகளை உய்த்துணர்ந்து கொள்ளலாம். இதயம் உருகின் ஈசன் அங்கே உதயமாகிறான் எம்கிறார் கவிராஜ பண்டிதர்.