முதுமொழிக் காஞ்சி 88
குறள் வெண்செந்துறை
ஆர்கலி யுலகத்து மக்கட் கெல்லாம்
அகம்வறி யோனண்ண னல்கூர்ந் தன்று. 8
- நல்கூர்ந்த பத்து, முதுமொழிக் காஞ்சி
பொருளுரை:
நிறைந்த ஓசையுடைய கடல் சூழ்ந்த உலகத்தில் வாழும் மக்களுக்கெல்லாம் சொல்வது என்னவென்றால், மனத்தில் நன்மையில்லாத வறியோனொருவனைச் சென்று அணுகுதல் வறுமையுறும்.
வறியவன் வள்ளல் போல் வழங்கவில்லையே என அவனை எவரும் பழித்துரையார்.
பதவுரை:
அகம் வறியோன் - மனத்தில் நன்மையாதொன்றும் இல்லாதவனை,
நண்ணல் - சென்றடைதல், நல்கூர்ந்தன்று - வறுமையுடையதாம்.
அகம் வறியோன் - மனத்தில் ஒன்றுமில்லாதவன் – அன்பு, அருள் முதலிய நன்மை யாதொன்று மின்றிச் சூனியமான மனத்தையுடையவன் - அறிவில்லாதவன்.
நண்ணல் - அணுகுதல்.
'அகமறியோன்' என்ற பாடத்துக்கு, தன்மனத்தின் இயல்பை அறியாதவன் என்பது பொருள்.