அருள்காட்டி நின்ற அருஞ்சொல் திரிந்து மருள்காட்டி நிற்கும் மரபு - நாகரிகம், தருமதீபிகை 522

நேரிசை வெண்பா

அருள்காட்டி நின்ற அருஞ்சொல் திரிந்து
மருள்காட்டி நின்ற மரபால் - இருள்காட்டி
நின்றார் எவரும் நெடுந்தீமை யேநிமிர்ந்து
சென்றார் துயர்மேற் செல. 522

- நாகரிகம், தருமதீபிகை,
- கவிராஜ பண்டிதர் ஜெகவீர பாண்டியனார்

பொருளுரை:

அருள்நிலையைக் குறித்து நின்ற நாகரிகம் என்னும் அரிய சொல் மருள் நிலையில் மாறி வந்தமையால் மனிதர் இருள்நிலையில் இழிந்து திரிந்து நெடிய தீமைகளில் நிமிர்ந்து கொடிய துயரங்களில் உழலுகின்றனர் என்கிறார் கவிராஜ பண்டிதர்.

கால வேற்றுமையால் யாவும் மாறுபடுகினறன. அவ்வகையான மாறுபாடுகளால் பலபுரட்சிகள் நேர்ந்து விடுகின்றன. நல்ல பண்பாடுகளில் வழங்கி வந்த வார்த்தைகள் பொல்லாத புண்பாடுகளில் திரிந்து வர நேர்ந்தது மிகுந்த காலப் புரட்சியாய் விரிந்து நிற்கிறது.

நண்பு நலம் கனிந்து இரங்கி இதம் புரியும் இனிய நீர்மையே நாகரிகம் எனத் தனிமகிமை பெற்றிருந்தது. இக் காலத்தில் இச் சொல் அத்தகைய உயர்ந்த காட்சியை உணர்த்தாமல் அயலே மயலாய் இழிந்துள்ளது.

’மருள் காட்டி நின்ற மரபால் இருள் காட்டி நின்றார்’ என்ற சொற்றொடர் பண்டு அருள் காட்டி நின்ற சொல் இன்று மருள் காட்டியுள்ளமையால் மக்கள் வாழ்வு இருள் காட்டியுள்ளன என இது பொருள் காட்டியுள்ளது.

அன்புரிமையுடன் எவ்வுயிர்க்கும் இரங்கியருளும் செவ்விய நீரரே நாகரிகர் என முன்னம் நின்றார். இன்று நாகரிகர் என்றால் யாரைக் கருதுகின்றனர்? தலை மயிரை நன்றாக வெட்டித் திருத்திச் சட்டை தரித்து ஓர் தொப்பி மாட்டிக் காலுறை பூட்டிக் கையில் வெண்சுருட்டும் வாயில் புகையுமாய் வெளிவருவோரே நாகரிகர் என மோகம் அடைந்துள்ளனர்.

முன்பு உயிர்மேல் ஊன்றியிருந்த நாகரிகம் பின்பு மயிர்மேல் மாறவே போலி வேடங்களே நாகரிகம் என்று பெருமோகம் கொண்டு வெளியே யாவரும் ஏகமாய்த் திரிய நேர்ந்தனர்.

அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
(காய் 4 / மா தேமா)

தன்வாயில் ஒருசுருட்டு தலைமயிரில் பலசுருட்டு
..தருக்கு நோக்கம்
என்வாயில் உள்ளதையும் எனதகத்தில் இருப்பதையும்
..எதிரே நோக்கிப்
பொன்வாயில் சொரியுமெனப் புகல்கின்ற மொழியினராய்ப்
..பொங்கி வாழ்வார்
முன்வாயில் திறந்துள்ளே முழுவதையும் காட்டுகின்ற
முதல்வர் தாமே.

தங்களுடைய செயல் இயல்கள் யாவும் உயர்ந்த நாகரிகங்கள் என்று நினைந்து கொண்டு நெஞ்சம் திமிர்ந்து நெடிது திரிந்து கடிது களித்து வருவாரது நிலைகளை இது சிறிது விளக்கியுள்ளது. நாடு அடைந்துள்ள கேட்டு நிலைகளைப் பாட்டில் ஓரளவு காட்டினாலும் காட்சிகளைக் கண்ணூன்றி ஓர்ந்து கொள்ள வேண்டும். நாகரிகம் எனக் கருதி மயங்கி இக்காலத்தில் நம்மக்கள் செய்து வருகிற அநாகரிகங்கள் அதிசய வினோதங்களாய் உள்ளன.

சிறந்த பண்பாடுடன் செறிந்திருந்த இந்நாட்டு நாகரிகத்தை மறந்துவிட்டு, அயல்நாட்டு மினுக்கில் மயல்நாட்டி நின்றமையால் நல்ல தன்மைகள் சிதைந்து போயின; பொல்லாத புன்மைகள் புகுந்து கொண்டன. சிறுமைகள் பெருமைகளாய்ப் பெருகி நின்றன.

இழிந்த பழக்கங்களை உயர்ந்த வாழ்க்கைத் தரங்களாக நினைந்து கொண்டு பலர் மகிழ்ந்து வாழ்ந்து வருகின்றனர். சிறந்த நாகரிகர் என்று தங்களை எண்ணிக் கொள்பவர் நாகரிகம் என்னும் இந்த அருமைத் தமிழ்ப் பதத்தின் உரிமைப் பொருளைச் சிறிது ஊன்றி உணர வேண்டும். அருளுடைய பெரியார்க்கு உரியதை மருளுடைய வெறியார் விழைவது பெரிதும் இழிவாகின்றது.

மோக மயக்கில் முழுகியுளார் தம்மையுயர்
நாகரிகர் என்றல் நகை.

கண்ணோடி அருள்புரியும் புண்ணிய நீர்மையே நாகரிகம்; அந்த அருமைப் பண்புடையவரே நாகரிகர் என்னும் பெருமைக்கு உரியராவர். உள்ளம் திருந்து; ஒத்த மக்களுக்கு உதவி செய், எல்லா மகிமைகளும் உன் எதிர் வந்து நிற்கும் என்கிறார் கவிராஜ பண்டிதர்.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (7-Nov-19, 5:25 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 36

மேலே