பல்லாரும் பண்பு படிந்து பயனுடையர் ஆகிவர நண்பு படிக நயந்து - பண்பு, தருமதீபிகை 532

நேரிசை வெண்பா

எல்லார் இயல்பும் எதிரறிந்(து) எவ்வழியும்
நல்லார்வ மோடு நலம்புரிந்து - பல்லாரும்
பண்பு படிந்து பயனுடையர் ஆகிவர
நண்பு படிக நயந்து. 532

- பண்பு, தருமதீபிகை,
- கவிராஜ பண்டிதர் ஜெகவீர பாண்டியனார்

பொருளுரை:

பிறருடைய இயல்புகளை நுணுகி அறிந்து யாண்டும் இதம் புரிந்து எல்லாரும் நல்லவராய்ப் பண்பும் பயனும் படிந்து வர அன்பு சுரந்து நண்பு நிறைந்து வருக என்கிறார் கவிராஜ பண்டிதர்.

உலக நிலைகளை அறிந்தொழுகுவது கலையறிவின் தலையாய பயனாய் நிலவியுள்ளது. தன்னைச் சூழ்ந்துள்ள மக்களுடைய இயல்புகளை நுணுகியுணர்ந்து இதமாய் இணங்கிப் பதமாய் வாழ்ந்து வருகிறவன் அதிசய சாதுரியவானாய் ஆகின்றான்.

கலையறிவினும் அனுபவ அறிவு மனிதனுக்கு இனிய துணையாய்த் தனி மகிமை தருகிறது. நூல்களைப் படித்து வருவதில் கல்வியறிவு வருகிறது; மனிதர்களைப் படித்து வருவதில் அனுபவ அறிவு அமைகிறது. முன்னது கண்ணாடிப் பார்வை; பின்னது கண் பார்வையாம். சொந்தமான தன்பார்வையில் தேர்ச்சி பெற்றவன் எந்த நிலையிலும் உயர்ந்து யாண்டும் ஒளிபெற்று நிற்கிறான்.

தன் அனுபவத்தைக் கொண்டு உலகத்தை அளந்து கொள்ளுகிறவன் உயர்ந்த மேதையாய்ச் சிறந்து விளங்குகிறான். தனக்கும் பிறர்க்கும் நலமும் பலமும் விளைந்து வர அவன் வளர்ந்து வருகிறான்.

உலகம் தெரிந்து ஒழுகாதவன் பலவும் தெரிந்திருந்தாலும் பதராய் இழிகிறான். ஏட்டுப் படிப்பினும் நாட்டுப் படிப்பு நலம் பல புரிகிறது. தன் பாடு கொண்டு பிறர் பாடு கண்டு யாண்டும் பிழைபாடு நேராமல் பெருந்தகவோடு நடந்து வருவதே உயர்ந்த பண்பாடாம்.

பண்பெனப் படுவது பாடறிந்(து) ஒழுகுதல்;
அன்பெனப் படுவது தன்கிளை செறாஅமை' (கலி, 133)

நல்லந்துவனார் என்னும் சங்கப் புலவர் பண்புக்கும், அன்புக்கும் இங்ஙனம் இலக்கணம் விதித்திருக்கிறார். பாடு - உலகப் போக்கு. கால நிலைகளைக் கருதி, உலக இயல்புகளை ஓர்ந்து நண்போடு ஒத்து நடப்பதே வித்தகமான பண்பாடு ஆகும் என்றதனால் இதன் பான்மையும் மேன்மையும் அறியலாகும்.

தன்னுடைய பண்புடைமையினால் தன்னை அடுத்தவரெல்லாரும் நல்லவராய் நலம் பல அடையும்படி ஒருவன் ஒழுகி வர வேண்டும் என்றதனால் ’பல்லாரும் பயன் உடையராகி வர’ என்றது. தன்மையால் நன்மை விளையுமாதலால் அந்த உண்மை உணர வந்தது.

அமைதி, பொறுமை, அன்பு, ஆதரவு முதலிய பண்பாடுகள் ஒருவனிடம் மருவிய பொழுது அவன் உலகத்திற்கு ஓர் இன்ப நிலையமாய் ஒளி செய்து நிற்கிறான். அவனைக் கண்டவரும், கருதினவரும் பெருமகிழ்வுடையராய் உறுதி நலங்களை அடைந்து கொள்கின்றனர்.

இனிய பண்பாடுகளில் இராமன் தலைசிறந் துள்ளமையால் ’குணங்களால் உயர்ந்த வள்ளல் என உலகம் உவந்து புகழ்ந்துள்ளது. தன்னுடைய நீர்மை சீர்மைகளால் இக்கோமகன் மனித சாதி முழுவதற்கும் புனித போதனைகளைச் செய்திருக்கிறான்.

அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
(விளம் மா தேமா அரையடிக்கு)

தீர்வரும் இன்னல் தம்மைச்
..செய்யினும், செய்ய சிந்தைப்
பேரரு ளாளர் தம்தம்
..செய்கையின் பிழைப்ப(து) உண்டோ?
கார்வரை நிறுவி, தன்னைக்
..கனல்எழக் கலக்கக் கண்டும்,
ஆர்கலி, அமரர் உய்ய,
..அமுதுபண்(டு) அளித்த(து) அன்றே? 126

துறவியின் உறவு பூண்ட
..தூயவர் துணைவன் என்னை
உறவுவந்(து) அருளி, மீளா
..அடைக்கலம் உதவி னானே!
அறவினை இறையும் இல்லா,
..அறிவிலா அரக்கன் என்னும்
பிறவியின் பெயர்ந்தேன்; பின்னும்,
..நரகினின் பிழைப்ப தானேன். 127 விபீடணன் அடைக்கலப் படலம், யுத்த காண்டம், இராமாயணம்

தன்பால் அன்பாய்த் தன்னை இராமன் ஆதரித்தருளியதை நினைந்து மகிழ்ந்து விபீடணன் இவ்வண்ணம் உருகி உரையாடியிருக்கிறான். பகைவனுடைய தம்பி என்பதையும் எண்ணாமல் தன்னிடம் கண்ணோட்டம் கொண்டு தண்ணளி புரிந்துள்ளதை எண்ணிக் கண்ணீர் மல்கி அந்தப் புண்ணிய மூர்த்தியை அவன் புகழ்ந்து போற்றியுள்ள நிலைகளை உவந்து நோக்கி நாம் வியந்து நிற்கிறோம். நெடிய மலையை நிறுத்தித் தன்னை நிலைகுலைத்துக் கலங்கினவர்க்கு இனிய அமுதத்தைக் கடல் அளித்தது போல் தனக்குத் துயர் இழைத்தவர்க்கும் கருணைக் கடலான இராமன் இதமளித்தான் என ஏத்தியுள்ளான்.

திருந்திய பண்புடையாளர் யாண்டும் பெருந்தகைமையாய் நடந்து வருதலால் யாவரும் அவரை உவந்து தொழுது உயர்நலம் பெறுகிறார். இனிய நீர்மை தனிமகிமை ஆகிறது என்கிறார் கவிராஜ பண்டிதர்.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (7-Nov-19, 5:44 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 76

மேலே