திருவரங்கத்துக் கதவுகள்
திருவரங்கத்துக் கோபாலன் எப்போதும் படுக்கையிலேயே இருக்கின்றான்...
வறட்சியின் வெக்கை அவன் அறைதனைப் போய்ச் சேரவே இல்லை...
பணமுதலைகள் அன்பளித்த குளிரூட்டிகள் வழிமறித்ததோ என்னவோ!
அவன் விழிகளின் கதவுகள் திறக்கப்படவே இல்லை...
கோகுலத்துக் கோவிந்தன் எப்போதும் மயக்கத்திலேயே இருக்கின்றான்...
வயிறுகளின் பசிக்குரல் அவன் செவிகளை எட்டவே இல்லை...
கோதையர்களின் சிரிப்பிசையில் மூழ்கிவிட்டானோ என்னவோ!
ஏழைகளின் இரைச்சல்கள் கேட்கவே இல்லை...
திருப்பாற்கடலில் திருமால் எப்போதும் பள்ளிகொண்டே இருக்கின்றான்...
அதனால்தானோ என்னவோ! பூவுலகில் இளமலர்களின் நசுக்கல்கள் அவன் கண்களில் காட்சிப்படவே இல்லை...
பாரதம் கண்ட கிருஷ்ணன் எப்போதும் பாஞ்சாலியின் மானத்தை மட்டுமே காத்துக்கொண்டு இருக்கின்றான்...
ஆடைகள் கழைந்தும் அழுகுரல் கேட்டும் அவன் கரங்கள் நீட்டப்படவே இல்லை...
சிறைவாசம் நுகரா மிருகங்கள் மங்கையர்களின் மாராப்பு வாசம் நுகர்ந்தது போதும்... ஈன்றவளின் கண்களில் ஈரம் இறந்து போகட்டும்...