துயிலின் சாட்சிக்கையெழுத்து
÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷
அப்படியும் இப்படியுமாய்
கழியும் இந்த இரவுக்குள்
நான் என்னதான் செய்ய?
வாகன ஒலிகள் மீறி கேட்கும்
வாசல்கள் பெருக்கும் சப்தம்
விடிந்திருக்கும்...
உறக்கத்தின் நாபிச்சூடு
நெற்றியில் விழுகிறது.
காக்கைகள் கரைகின்றன.
விடிந்தே இருக்கலாம்.
ஓரக்கண்ணை உயர்த்தி
வலியூட்டும் வெளிச்சம் சிந்திய
கூரையின் ஓட்டை வழியே
குறுகுறுப்புடன்
உற்றுப்பார்க்கும்போது
நின்ற இடத்திலேயே
நின்றுகொண்டு
துயில்கொள்ளும் பரிதி.
விடிந்தேவிட்டது.
சட்டென்று எழுகையில்
அறையும் வல்லிருள்.
கனவென்று தெரிந்ததும்
எத்தனை வெட்கம் வருகிறது
இந்த தூக்கத்திற்கு.