கண்ணோடி அன்பு புரிவான் இன்பம் உறுவான் இவண் - நாகரிகம், தருமதீபிகை 523
நேரிசை வெண்பா
கண்ணோ(டு) இருந்தாலும் கண்ணோட்டம் இல்லானேல்
மண்ணோடு கல்மரமே மானுமவன் - கண்ணோடி
அன்பு புரிவான் அமரர் தொழுதேத்த
இன்பம் உறுவான் இவண். 523
- நாகரிகம், தருமதீபிகை,
- கவிராஜ பண்டிதர் ஜெகவீர பாண்டியனார்
பொருளுரை:
கண்ணுடையராயிருந்தாலும் கண்ணோட்டம் இல்லையெனின் அவர் மண், கல், மரம் என இழிந்து படுவர்; கண்ணோடி யாவரிடமும் அன்பு புரிபவர் தேவரும் தொழுதேத்த ஈண்டு இன்பம் அடைவர் என்கிறார் கவிராஜ பண்டிதர்.
குண நலங்களால் மனிதன் உயர்நிலைகளை அடைந்து கொள்கிறான். பண்பு, பரிபக்குவம் என்பன மேலோர்களுடைய நீர்மைகளாய் மேவியுள்ளன. உள்ளம் கனிந்துருகின் அந்த மனிதனிடம் பேரின்ப வெள்ளம் பெருகி வருகின்றது.
கண்ணோட்டம் என்னும் சொல் கருணைப் பண்புடையதாதலால் அது புண்ணிய நீர்மையாய்ப் பொலிந்து திகழ்கின்றது. பிற உயிர்கள் துயருறுவதைக் கண்டால் உடனே உளமுருகி உதவி புரிய நேர்வதே கண்ணோட்டமாம். கண் ஓடி இரங்குவது கண்ணோட்டம் என வந்தது.
இந்தப் புண்ணிய நீர்மையுடையதே உண்மையான கண் ஆகும், இத்தன்மை இல்லையானால் அது புன்மையான ஒரு புண் என்று இகழ்ந்து தள்ளப்படும்.
கண்ணிற்(கு) அணிகலம் கண்ணோட்டம்; அஃதின்றேல்
புண்என்(று) உணரப் படும். 575 கண்ணோட்டம்
காணும் கண்ணுக்கு ஒரு பூண் அணிந்து கருணைக் காட்சியை வள்ளுவர் இவ்வண்ணம் காட்டியிருக்கிறார். காது, கழுத்து, கை கால், விரல் முதலிய அவயவங்களில் அணிகலங்களை அழகுக்காக அணிந்து திரியும் மானிடர்க்கு இங்கே ஒரு புண்ணிய அணிகலனைக் கண் எதிரே காட்டி எண்ணியுணரச் செய்துள்ள திறம் இன்ப மிகச் செய்கிறது.
எவனுடைய கண் இரங்கி யருளுகின்றதோ அவனே நல்ல கண்ணுடையவன்; அல்லாத கண் பொல்லாத குருடே என்னாமல் புண் என்று சொன்னது அதன்மேல் உள்ள வெறுப்பையும் அருவருப்பையும் வெளிப்படுத்தியது.
கருணை புரியாத கண் கொடுமையாய்ப் பழி பாவங்களை விளைத்துத் தன்னையுடையானுக்கு இருமையும் துன்பம் தருகின்றது; கருணை புரியும் கண் இனிமையாய்ப் புகழ் புண்ணியங்களைச் செய்து என்றும் இன்பம் அருளுகின்றது.
கருதிக் கண்ட பின்பே உள்ளம் உருகியுதவுமாதலால் கண்ணோட்டமும், கருணையும் வித்தும், விளைவும் போல் ஒத்துள்ளது.
அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
(காய் 4 / மா தேமா)
பண்ணுக்கு வாம்பரித்தேர் ஆதவனும் பணிந்துபசு
..பதியை நோக்கி,
மண்ணுக்குத் தவம்புரியுந் தனஞ்சயற்குக் கோடையினும்
..மதியம் போன்றான்,
எண்ணுக்கு வரும்புவனம் யாவினுக்குங் கண்ணாவான்
..இவனே யன்றோ,
கண்ணுக்குப் புனைமணிப்பூண் கண்ணோட்டம் என்பதெல்லாங்
..கருணை யன்றோ.. 43 அருச்சுனன் தவநிலைச் சருக்கம், இரண்டாம் பாகம், பாரதம்
அருச்சுனன் சிவபெருமானை நோக்கி வெயிலிடை நின்று அரிய தவம் புரிந்தான். வேனில் காலத்திலும் வெயில் வெப்பமின்றிச் சீதள மதிபோல் ஆதவன் குளிர்ந்திருந்தான்; உலகுக்கெல்லாம் அவன் கண்ணாயுள்ள உண்மையை அன்று புரிந்த கண்ணோட்டத்தினால் நன்று காட்டியருளினான் என்னும் இது இங்கே நின்று கண்டு நெடிது மகிழவுரியது.
கண்ணோட்டம் என்பது எவ்வழியும் இரங்கி இதம் புரியும் இனிய நீர்மை என்பது தெளிவாய் நின்றது. ஆன்ற சான்றோர் இயல்பாய் இது தோன்றியுள்ளது.
உடலுறுப்புக்களில் கண் மிகவும் சிறந்தது. உயிர் வாழ்வு அதன் வழியே உலாவி ஒளி வீசி வருகிறது. அத்தகைய கண்ணும் தயை இல்லையானால் இழிபுண்ணாய் இகழப்படுகிறது. ஆகவே கண்ணோட்டத்தின் மேன்மையும் அதனையுடையவரது மகிமையும் உணரலாகும்.
நேரிசை வெண்பா
கண்ணுக் கணிகலம் கண்ணோட்டம் காமுற்ற
பெண்ணுக் கணிகலம் நாணுடைமை - நண்ணும்
மறுமைக் கணிகலம் கல்வியிம் மூன்றும்
குறியுடையோர் கண்ணே யுள. 52 திரிகடுகம்
நல்லாதனார் என்னும் சங்கப் புலவர் இங்ஙனம் கூறியுள்ளார்.
உயர்கதியடையவுரிய அரிய பெரியாரிடம் அருமையாக மருவியிருத்தற்குரிய தயையை எல்லாரிடமும் எளிதே காண இயலாது. நல்லார் சிலரிடமே அது உரிமையாயுளது.
மக்கள் எல்லாரும் தந்நலமே கருதித் தம் சுகமே எங்கும் நாடி வருதலால் பிறர்க்கு இரங்கியருளுவதில் பின்னமடைந்துள்ளனர். இந்தப் புல்லிய தடையைக் கடந்து மேலேறிய போதுதான் அவர் மேலான பெரியோராகின்றனர்.
‘தாட்சணியம் தனநாசம்’ என்பது பழமொழி. பொருள் முதலியவற்றைப் பொருட்படுத்தாமல் துணிந்து அருள் புரியும் தியாகிகளே அரிய கண்ணோட்டம் பேணும் பெரிய நாகரிகராய்ப் பெருகி நிற்கின்றனர்.
தன்னலம் துறந்து பிறர்நலத்தைப் பேண வேண்டுமாயின் அந்த உள்ளம் எவ்வளவு உன்னத நிலையை அடைந்திருக்க வேண்டும்?
“உலக மக்களுடைய நலத்துக்காகவும், சுகத்துக்காகவும் உங்கள் உயிர் வாழ்க்கை யிருக்கட்டும்' எனத் தன்னுடைய சீடர்களை நோக்கிப் புத்தர் பெருமான் இப்படிப் போதித்திருக்கிறார். இந்த உத்தமருடைய உள்ளக் கருணை எத்தகைய நிலையது? கண்ணோடியருளும் நாகரிகம் இந்தப் புண்ணியமூர்த்தியிடம் புகலடைந்துள்ளது.
சீவதயை தேவ இதயமாய்த் தேசு புரிகிறது. தண்ணளி இல்லாதவர் புண்ணிய ஒளி குன்றிப் புலையுறுகின்றனர்.
கண்ணோட்டம் இல்லானேல் மண், கல், மரம்,
ஆறறிவுடைய உயர்ந்த மனிதப் பிறவியில் பிறந்திருந்தாலும் சீவதயை இல்லையாயின் அவன் மண்ணே கல்லே மரமே என எண்ணி இகழப்படுவான் என்றதனால் அவனது இளிநிலை வெளியே தெளிவாகின்றது.
மண்ணோ(டு) இயைந்த மரத்தனையர் கண்ணோ(டு)
இயைந்துகண் ணோடா தவர். 576 கண்ணோட்டம்
என்றது பொய்யாமொழி.
கண்ணோட்டமாகிய இனிய தன்மை இல்லாமையால் மனிதன் இன்னா நிலையனாயினான். ஆகவே இழிவும் பழியும் எவ்வழியும் ஏறின.
நேரிசை வெண்பா
ஒன்று நரம்பென்கோ? ஒன்றாத என்பென்கோ?
இன்றசை தானென்கோ? யாதென்கோ - மென்தொடையாழ்
பண்ணாட்டும் இன்சொற் பணைத்தோளாய்! சேர்ந்தவர்.பால்
கண்ணோட்டம் இல்லாத கண். – பாரதம்
அடுத்தவர்மேல் இரங்கியருளாத கண்ணை எலும்பு, நரம்பு, தசை என இவ்வாறு பெருந்தேவனார் இகழ்ந்து கூறியுள்ளார். கண்ணோட்டம் இல்லாத மனிதரை நேரே இகழாமல் கண்ணை இகழ்ந்தது கண்ணோட்டத்தாலாம். உயிருள்ளவர் ஆதலால் உள்ளம் வருந்துவர் என்று இரங்கி வசைகளைக் கண்மேல் ஏற்றிக் கண்ணோடிப் போனார் எனக் கொள்ள வேண்டும்.
நேரிசை வெண்பா
தெற்றப் பகைவர் இடர்ப்பாடு கண்டக்கால்
மற்றுங்கண் ணோடுவர் மேன்மக்கள் - தெற்ற
நவைக்கப் படுந்தன்மைத் தாயினும் சான்றோர்
அவைப்படின் சாவாது பாம்பு. 313 பழமொழி நானூறு
பகைவரிடமும் கண்ணோடியருளுவர் மேன்மக்கள் என முன்றுறையரையனார் இங்ஙனம் மொழிந்திருக்கிறார் எதிரி இடருற்ற போது இரங்கியருள்வது அரிய தகைமையாதலால் அது பெரிய கண்ணோட்டம் ஆயது.
நேரிசை வெண்பா
கண்வனப்புக் கண்ணோட்டங் கால்வனப்புச் செல்லாமை
எண்வனப் பித்துணையா மென்றுரைத்தல்-பண்வனப்புக்
கேட்டார்நன் றென்றல் கிளர்வேந்தன் றன்னாடு
வாட்டானன் றென்றல் வனப்பு. 8 சிறுபஞ்சமூலம்
காரியாசான் என்னும் சங்கப் புலவர் இங்ஙனம் கூறியிருக்கிறார். உறுதி நலங்கள் கருதி உணரவுரியன.
ஐந்து அழகுகளைச் சொல்ல வந்தவர் முன்னதாகக் கண் வனப்புக் கண்ணோட்டம் என்றார். இந்த அழகை இழந்து விடாமல் விழைந்து பேணி விழுமிய நிலையில் வாழ வேண்டும் என்கிறார் கவிராஜ பண்டிதர்.