காட்சிப் பிழை
மின் விசிறி சுழலும் சத்தம்
காதில் விழ - கண்
விழித்தேன்.
இருட்டின்னும் அகலவில்லை.
அடிவயிறும் அலசியது.
தூங்கி எழுந்தும்
அடங்காத சலிப்பு தேகத்தை விட்டு
ஒழியவில்லை.
அசதி சுமந்த உடலை
உலுக்கி உலுக்கி நகர்த்தி
எழுந்து நின்றேன்.
ஜன்னல் கம்பியை பற்றி ,
நிமிர்ந்து நின்று,
நடையை கூட்டினேன்.
சுருங்கிய இமையோடு,
கழிப்பறை நுழைந்தேன்.
அடிவயிற்றின் அலசல் - அங்கே
அமர்ந்தவுடன் அடங்கிற்று.
அலசல் இல்லாததால் - எதுவும்
அரங்கேறவில்லை.
இடது முழங்கால் வின் வின்னென
வலிக்க தொடங்கியது,
வெகு நேரமானதை உணர்த்தியது.
நடை பயிற்சிப்பின்முயல்வோம் - என்று
முடிவெடுத்து, எழுந்து நிற்கிறேன்
கடற்கரை தென்பட்டது.
மண்ணில் கால் பதித்து,
கரை நோக்கி நடக்கிறேன்.
திடீரென்று சுண்டல் விற்கும் பையனதோன்றி,
பொறி கடலை வாங்கச் சொல்லி
வற்புறுத்துகிறான்.
காலையில் கடற்கரையில்
இதுவரை பொறி கடலை விற்று
யாரையும் கண்டதில்லை.
இருந்தும் வற்புறுத்தலால்
வாங்கிக் கொண்டேன்.
ஒரு காகித கூம்பில்
பொறியை நிரப்பிக் கொடுத்தான்.
சரி வாங்கியதை
உண்ணலாமென கையில் கொட்டினால்,
சுழன்றடித்தது சூறை காற்று.
கையில் விழ இருந்த பொறியும் கடலையும்,
என்னைத் தாண்டி பறந்து
மண்ணில் விழுந்தது.
திரும்பி தரையில் பார்த்தால்,
விழுந்த பொறியெல்லாம்,
உதிர்ந்த சாமந்தி பூக்களாய்
மாறியிருந்தது....
நிமிர்ந்து பார்த்தால்,
ஏதோ ஒரு கூட்டம்
யாருக்கோ தர்ப்பணம் செய்வது
புரிந்தது....
பொறி எங்கே?
கையில் இருந்த காகிதம் கூட காணவில்லை.
நிமிடத்தில்,
காலை சுற்றியிருந்த பூக்களை
அலை வந்து கழுவுச் சென்றபோது - சுரீர்
என்று காலில்
ஏதோ படறியது.
என் அருகில்,
எவளோ ஒருத்தி,
என் காலில் பச்சை குத்திக்
கொண்டிருக்கிறாள்.
என்ன வரைகிறாய் என்றேன்?
இன்னும் ஏதும் முடிவாகவில்லை என்றாள்.
சரி, குத்தியவுடன் தட்டி எழுப்பென்று,
கவுந்து படுத்தேன்.
உடல் இதமாக,
வெது வெது சூடோடு கரைந்து கிடந்தது.
இருவர் என் இரு கால்களையும்
இறுக்கமாக பற்றி,
எண்ணெய் கொண்டு
சுளுக்கெடுக்கிறார்கள்.
வலியும், வேதனையும்
அதிகரித்து பின்பு ஆனந்த மானது.
இதை முறையாய் பத்து நாட்கள்
செய்தால் உடல் உபாதை குறையும்
என்று வலியுறுத்தி மறைந்தனர்.
எழுந்து நின்றாள்,
உடல் இலகுவாக தெரிந்தது...
வரவேற்பறையில்,
கும்பம், கோபுர தலைமேல்
இருந்தாலும், அது வெயிலும்
மழையிலும் வாடியே தீரவேண்டும் -கும்ப ராசி
நேயர்களே என்று குரு பெயர்ச்சி
பலன்கள் தொலைக்காட்சிப்
பெட்டியில் ஓடிக்கொண்டிருந்தது.
என்ன நடக்கிறது என்னைச் சுற்றி?
ஏன் எந்த செயலும்,
என் அனுமதியின்றி அரங்கேறுகிறது?
நான் ஒரு செயலை, என் விருப்பப்படி
நிகழ்த்த முடியாதா ?
நான் பார்க்கும், பழகும்
அத்துணை பேரும் தெளிவாக தெரிகிறார்கள்.
நான் மட்டும் ஏன் குழம்பித் திரிகிறேன்...?
இது வெறும் எண்ண ஓட்டமா?
இல்லை வேறு பலரின் விருப்ப ஓட்டத்தை
என்னை வைத்து ஓடுகிறார்களா ?
எதுவாக இருந்தாலும்
இந்த ஓட்டத்தோடு இன்னும்
எத்தனை நாள் தான் ஓடுவது?
ஓடுவது ஓட்டப்பந்தயம் என்றால்,
ஓடிப் பார்க்கலாம்...
பந்தயம் எதுவென்றும் தெரியவில்லை,
பந்தயம் யாரோடு என்றும் புரியவில்லை...!
சரி இதை எங்கள்
பாரதியிடம் கேட்போமென்று கேட்டதில்....
"போனதெல்லாம் கனவினைபோல்,
புதைந்து அழிந்தே போனதனால்
நானும் ஓர் கனவோ?
இந்த ஞாலமும் பொய்தானோ?
காண்பதெல்லாம் மறையும் என்றால்,
மறைந்ததெல்லாம் காண்பம் அன்றோ?
வீண்படும் பொய்யிலே - நித்தம் விதி
தொடர்ந்திடுமோ ? "