துயிலின்றித் தவிப்பவர் யாவர் – நான்மணிக்கடிகை 7

இன்னிசை வெண்பா

கள்வமென் பார்க்குத் துயிலில்லை காதலிமாட்(டு)
உள்ளம்வைப் பார்க்குந் துயிலில்லை ஒண்பொருள்
செய்வமென் பார்க்குந் துயிலில்லை அப்பொருள்
காப்பவர்க்கும் இல்லை துயில்! 7

- நான்மணிக்கடிகை

பொருளுரை:

திருடி வாழ்வோம் என்ற எண்ணம் கொண்டு பிறர் அயர்ந்திருக்கும் நேரம் பார்ப்பவர்,

காதலியிடத்தில் விருப்பம் வைத்திருப்பவர்,

சிறந்த செல்வப்பொருளை பெருக்குவோமென்று கருதி உழைப்பவர்,

தேடிச் சேர்த்த அப்பொருளைக் களவு போய்விடாமலும் பிறவழிகளிலும் இழந்து விடாதபடி பாதுகாப்பவர் ஆகியோர் தூக்கம் இல்லாமல் அவதிப்படுவர்.

கருத்து:

திருடர்க்கும், தலைவியிடம் விருப்புற்ற தலைமகனுக்கும், பொருள் தேடுவார்க்கும், அப்பொருளைப் பாதுகாப்பார்க்கும் தூக்கம் இராது.

விளக்கம்:

உள்ளம் – மன விருப்பம். பொருள் - தன்மையுடையார்க்கு ஏனையோரிடையில் விளக்கந் தரலின் ஒண்பொருள் எனப்பட்டது,

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (19-Nov-19, 4:27 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 44

மேலே