வெகுண்டார்முன் எல்லாம் தோன்றாக் கெடும் – நான்மணிக்கடிகை 8

இன்னிசை வெண்பா

கற்றார்முன் தோன்றா கழிவிரக்கங் காதலித்தொன்(று)
உற்றார்முன் தோன்றா உறாமுதல் தெற்றென
அல்ல புரிந்தார்க்(கு) அறந்தோன்றா எல்லாம்
வெகுண்டார்முன் தோன்றாக் கெடும். 8

- நான்மணிக்கடிகை.

பொருளுரை:

இழந்த பொருள்களுக்கு இரங்குதல் கற்றுணர்ந்த பெரியோரிடம் தோன்றாது;

ஊக்கங்கொண்டு ஒரு நன்முயற்சியைத் தொடங்கி ஆற்றுபவரிடம் விரைவிற் கிட்டாமையாலாகிய முயற்சித் துன்பம் தோன்றாது;

தெளிவாய்த் தீயவை செய்தார்க்கு நல்லவை தோன்றமாட்டாது;

எல்லா நன்மைகளும் சினந்து கொள்வாரிடத்தில் தோன்றாவாய்க் கெட்டொழியும்.

கருத்து:

கழிந்துவிட்ட பொருள்களைப் பற்றிய துன்பம் கற்றுத் தெளிந்தாரிடத்தும், முயற்சித் துன்பம் ஊக்கமுடையாரிடத்தும், அறத்தின் உண்மைகள் தீயவை செய்வாரிடத்தும், எல்லா நன்மைகளுஞ் சினந்தாரிடத்துந் தோன்றாது.

விளக்கம்:

அவரவர் உளப் போக்குக்கு அவ்வவை எதிர்மாறாய் நிற்றலின், ‘தோன்றா' வெனப்பட்டது.

முதல் - ஒரு செயலை முடித்தற்கு ஏதுவாய் முதலில் நிகழும் முயற்சிப் பெருமையை யுணர்த்திற்று.

‘தெற்றென' வென்றது, அறிந்துந் தீயவை புரிந்தா ரென்றற்கு.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (19-Nov-19, 4:30 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 28

சிறந்த கட்டுரைகள்

மேலே