மலரவன் வண்தமிழோர்க்கு ஒவ்வான் - நீதிநெறி விளக்கம் 7
நேரிசை வெண்பா
கலைமகள் வாழ்க்கை முகத்த(து) எனினும்
மலரவன் வண்தமிழோர்க்(கு) ஒவ்வான் - மலரவன்செய்
வெற்றுடம்பு மாய்வனபோல் மாயா புகழ்கொண்டு
மற்றிவர் செய்யும் உடம்பு. 7
- நீதிநெறி விளக்கம்
பொருளுரை:
கலைமகளினுடைய வாழ்க்கை முகத்தினிலே உள்ள நாவினிலிருந்தாலும் மலர் மேலிருக்கும் நான்முகன் வளப்பம் பொருந்திய தமிழ்ப் புலவர்களுக்கு ஒப்பாகான்;
ஏனென்றால், மலரவன் செய்கின்ற புகழில்லாத ஊன் உடம்பு அழிந்து போவன போல, இப்புலவர்கள் செய்கின்ற நூலுடம்புகள் அழியாத புகழைப் பெற்று வாழும்.
முகத்தது - முகத்தில் உள்ள நாவில் உள்ளது, மலரவன் - பிரம்மன், வண்தமிழோர் - தமிழ்ப் புலவர், ஒவ்வான் - ஒப்பாக மாட்டான், மாய்வன - அழிவன, மாயா - அழியா
விளக்கம்:
கலை - கற்றலாற் பெறப்படுவது,
கலைமகள் நான்முகன் நாவிலும் புலவர்கள் நாவிலும் உறைகின்றாளென்பதை `முகத்தது' என்றார்:
வெற்றுடம்பு - பெருமை இல்லாத வெறும் உடம்பு,
மண்நீர் முதலிய பூதங்களால் இயன்றமையின் வெற்றுடம்பு மாய்வன;
புலவர்கள் செய்யும் நூல் பின்னும் புகழப்படுதலின் மாயா என்றார்; நூலை உடம்பென்று கூறினார்;
ஐயாயிரம் ஆண்டுகளுக்கு முன்னேயிருந்த தொல்காப்பியனாரும். இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னேயிருந்த திருவள்ளுவனாரும் அருளிச் செய்த தொல்காப்பியம், திருக்குறள் என்னும் இலக்கண இலக்கிய நூல்களாகிய உடம்புகளின் வாயிலாக அவர்கள் செய்து கொண்ட புகழ் இன்றும் அழியாமல் நின்று நிலவுகின்றமையும்,
ஆனால், மலரவன் செய்த ஊனுடம்புகள், புகழோடு இக்காலத்திற் காணமுடியாதபடி அக்காலங்களிலேயே மறைந்து போனமையுங் கண்டுகொள்க,
கருத்து:
கல்வியே என்றும் அழியாதது.