கைத்தலத்த கருந்தனம் உய்த்து எய்த்துப் பொருள் செய்திடல் - நீதிநெறி விளக்கம் 9

நேரிசை வெண்பா

வருந்தித்தாங் கற்றன ஓம்பாது மற்றும்
பரிந்துசில கற்பான் தொடங்கல் - கருந்தனம்
கைத்தலத்த உய்த்துச் சொரிந்திட் டரிப்பரித்தாங்(கு)
எ'ய்'த்துப் பொருள்செய் திடல். 9

- நீதிநெறி விளக்கம்

பொருளுரை:

மக்களாவார் தாங்கள் வருத்தப்பட்டுக் கற்ற நூற்பொருள்களை மறந்து போகாதவாறு அடிக்கடி நினைத்துப் பாதுகாக்க மாட்டாமல், இன்னும் சில நூல்களை வருந்திக் கற்கத் தொடங்குதல் ஒருவன் தன் கையில் இருப்பதான மிகுந்த பணத்தை வீசி எறிந்து விட்டு எறிந்தயிடத்தில் அரித்துத் தேடி இளைத்துப் பொருள் சேர்ப்பது போலாகும்.

விளக்கம்:

`வருந்தித் தாங் கற்றன' என்றமையால், கற்றலின் அருமை பெறப்பட்டது.

ஓம்புதல் - பாதுகாத்தல்: கருந்தனம் - பெரிய சொத்து, உய்த்து - செலுத்தி, இங்கு வீசுதல்,

அரிப்பரித்தல் - வெயிலில் நின்று மண்ணை அரித்தெடுத்தல். இவ்வரித்த மண் வீடு கட்டுதற்கும் பாண்டம் வனைதற்கும் பயன்படும்.

இனி மண்ணோடு கலந்து கிடக்கும் பொருள்கள் அரித்தெடுக்கப்படுதல் பற்றி அரிப்பெனப்பட்டது எனினுமாம்.

பொருள் செய்திடல் - பொருள்சேகரித்தல். தொடங்கல், செய்திடல் போலாம்.

கருத்து:

கற்றவற்றை மறந்து மேலும் கற்பது பேதைமை.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (20-Nov-19, 10:15 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 40

மேலே