விடியல் எப்போது

அந்தக் கண்ணாடித்
தொட்டியின் கலங்கலான
நீர்ச் சுனைக்குள்
வண்ணமிகு மீன்குஞ்சுகள்
சுற்றிச் சுற்றி நீந்தின
கண்ணாடிக் கூண்டுக்குள்
கைதியாக்கப் பட்டு
செயற்கைச் சூழலுக்குள்
சிறை வைக்கப்பட்ட
விடயம் புரியாமல்
சுதந்திரக் காற்றைச்
சுதந்திரமாய் சுவாசிக்கும்
எசமானர்கள்
மீன் குஞ்சுகளுக்கு
இரையிட்டு இரக்கங் காட்டினர்
பாசம் பொழிந்தனர்
நீர்ப் பரப்பின்
மேல் மிதந்த
இரைத் துண்டுகளை
லாவகமாய் தாவிப் பிடித்து
ருசித்து விழுங்கி
திருப்தி கொண்டு நீந்திய
மீன் குஞ்சுகளுக்குத் தெரியாது
அவை ஆயுள் கைதிகளென்று.
செய்யாத குற்றத்திற்காய்
சிறைப் பட்ட
மீன்களுக்கு நீதி வழங்க
நீதிமன்றங்களுமில்லை
வழக்குத் தொடுக்க
வழக்கறிஞர்களுமில்லை.
விடுதலைக்காய் மீன் குஞ்சுகள்..
பொழுது போக்கிற்காய்
அதன் எசமானர்கள்
விடியல் எப்போது?