தமிழ் மொழியும் அதில் சமஸ்க்கிருதத்தின் கலப்பும்
நம் தமிழ் மொழியில் எண்ணற்ற பிறமொழி சொற்கள் கலந்திருக்கின்றன . நாம் அன்றாடம் நடைமுறையில் பயன் படுத்துகின்ற எல்லா சொற்களும் தமிழ் சொற்கள் அல்ல என்பதை முதலில் தெரிந்து கொள்ளுங்கள் .அதன் பிறகு எப்படி பேசுவது என்பதை அறிந்துகொள்ளுங்கள் .
எந்த மொழியில் பேசினாலும் வேறெந்த மொழியும் கலக்காமல் பேசுவதுதான் சிறப்பு மற்றும் நாம் அந்த மொழிக்கு செய்யும் உயரிய செயல் ஆக இருக்க முடியும் .
நம்முடைய கவன குறைவாலும் பிற மொழியினரின் கலப்பாலும் நம் தமிழ் மொழியில் எத்தனையோ பிறமொழி சொற்கள் கலந்து காணப்படுகின்றன .அவற்றிடையே சம்ஸ்கிருதம் எனப்படும் வடமொழி சொற்களும் பரவலாக கலந்துதான் இருக்கின்றன . தற்காலத்தில் ஆங்கில சொற்களையும் கலந்துதான் பேசி எழுதி வருகின்றோம் .
தமிழ் மொழியை தென்மொழி என்றும் சம்ஸ்கிருத மொழியை வடமொழி என்றும் அழைக்கிறோம் .இதையே வடசொல் என்றும் கூறுகிறோம் .ஒரு மொழியில் பிற மொழி சொற்களை கலந்து பேசுவது பிழை ஆகும் . மொழி தெரியாத போதோ அல்லது வேறு வழியே இல்லாத போதோ புதிதாய் நுழைந்த ஒரு பெயர்ச்சொல்லை அரிதாக பயன் படுத்தலாம் . ஆனால் அதற்கடுத்த பயன்பாடுகளில் அந்த பிற மொழி சொல்லுக்குரிய தமிழ் சொல்லை தேடி பயன்படுத்தவேண்டும் அல்லது ஆக்கிக்கொள்ளவேண்டும் . வேற்றுமொழிச் சொற்களை தொடர்ந்து பயன்படுத்த கூடாது .
நாம் பேசுகின்ற பேச்சு தமிழில் எண்ணற்ற வட சொற்களை பயன்படுத்துகின்றோம் . அவற்றுக்கு மாற்றான தமிழ் சொல்லை அறிந்தால் வட சொல்லை தவிர்க்க முடியும் . அழகான தமிழி சொல்லை காதுகுளிர கேட்கமுடியும் மற்றும் நம் அடுத்த தலை முறைக்கு கொண்டுசேர்க்க முடியும் . இதன் மூலம் நம் குழந்தைகள் நல்ல தமிழை கேட்டு வளர்வர் என்பதில் ஐயம் இல்லை .
அதிகம் இது வடசொல் . தமிழ் சொல் மிகுதி என்பது
அதிகம் என்ற வடசொல்லின் மூலம் வந்ததே அதிகரித்தது என்ற வினைச்சொல் . இதற்க்கு மிகுந்தது என்ற தமிழ் வினைச்சொல்லை பயன்படுத்த வேண்டும் .
சம்பவம் இது வடசொல் நிகழ்வு என்பதே சரியாய் தமிழ்ச்சொல் .
சம்பவித்தது என்று வட வினைச்சொல்லாக்கி பயன்படுத்துகிறோம் . இது தவறு .
சரியான தமிழ் வினைசொல் நிகழ்ந்தது என்பதே .
பிரகாசம் ,பூஜை ,ஜொலிப்பு போன்ற சொற்கள் வட சொற்கள் . இதற்க்கு நாம் பயன்படுத்த வேண்டிய தமிழ் சொற்கள் மின்னுதல், வழிபடுதல் , ஒளிர்தல் என்பன .
பிரகாசித்தது ,பூஜித்தான் , ஜொலித்தது என்ற வடமொழி வழி தமிழக்கப்பட்ட வினைச்சொல்லுக்கு சரியான தமிழ் வினை சொற்கள் , மின்னியது , வழிபட்டான் , ஒளிர்ந்தது என்பதே .
இப்படி ஒருமொழியில் பிறமொழி சொற்களை கலப்பது இரண்டு மொழிகளுக்கும் கேடாக அமையும் .தூய தமிழ் சொற்களையும் வட மொழிச்சொற்களையும் அறிந்துகொண்டு சரியாக பயன்படுத்தும்பொழுது தொடர்புடைய இரண்டு மொழிகளின் தூய தன்மைகெடாமல் இருப்பதோடு அவற்றின் உண்மையான ஒலி மற்றும் உச்சரிப்புகளை கேட்டு இன்பம் துய்க்கமுடியும் . அதுமட்டும் இல்லாமல் நம்முடைய அடுத்த தலை முறைக்கும் நல்ல மொழியை கொடுத்துச்சென்ற அல்லது எடுத்து செல்கிற நல்ல பணியை செய்கின்றோம் .இப்படி செய்வதன் மூலம் தமிழின் உண்மை தன்மை மற்றும் தொன்மை தன்மை அப்படியே முன் எடுத்து செல்ல முடியும் என்பதில் எந்த ஐயமும் இல்லை .
நன்றி கவிஞர் மகுடேசுவரன்