மாபறவை புல்லுரு அஞ்சுவ போல் அஞ்சன்மின் - நீதிநெறி விளக்கம் 23
நேரிசை வெண்பா
கற்பன ஊழற்றார் கல்விக் கழகத்தாங்
கொற்கமின் றூத்தைவாய் அங்காத்தல் - மற்றுத்தம்
வல்லுரு அஞ்சன்மின் என்பவே மாபறவை
புல்லுரு அஞ்சுவ போல். 23
- நீதிநெறி விளக்கம்
பொருளுரை: கற்கப்படுவனவற்றிற்கான நல்வினை இல்லாதவர்கள் கல்வி பயிலும் இடத்தில் (அஃதாவது புலவர்களின் அவையில்) அடக்கம் இல்லாமல் அழுக்குப் பிடித்த தம் வாயைத் திறந்து பேசுவது விலங்குகளும் பறவைகளும் புல்லினாற் செய்யப்பட்ட பொய் உருவத்துக்கு அஞ்சுவதுபோல தம்முடைய வலிமையான உருவத்துக்கு அஞ்சாதிருங்கள் என்று சொல்வனவேயாம்.
விளக்கம்:
கற்பன - கற்கப்படுவன. அவை, நூற்கருத்துக்கள். ஒற்கம் - அடக்கம்,
ஊத்தை வாய் அங்காத்தல், வல் உரு என்றார், கல்லாதார் பேசுதலின் இழிவு தோற்றுதற்கு.
அங்காத்தல் என்பதன் குறிப்புக் கண்டு அதற்குக் கற்றாரொருவர் பேசும் பொழுது அவைக்கண் இடைஇடையே வாய்திறந்து பேசுதல் என்றும் பொருள்கூறுப.
புல்லுரு என்பது, கம்பு தினை முதலியன விளைந்து கதிர் முற்றிய கொல்லைகளில் விலங்குகளும் பறவைகளும் ‘யாரோ ஒரு காவற்காரன் கையிற் கொம்பு வைத்திருக்கின்றான்’ என்று நினைத்து அஞ்சும்படியாக, அக்கொல்லைக்காரர்கள் புல்லினாற் செய்துவைக்கும் உருவம்.
விலங்குகளும் பறவைகளும் அவ்வுருவத்தின் உண்மையை அறிந்துகொண்டால், எப்படி அவை அஞ்சாது செல்லுமோ அதுபோலக் கல்லாதவர்கள் தங்கள் வாய் திறந்து பேசுவதனால் தங்கள் பாற் கல்வி நலமில்லை யென்பவைக் காட்டிக் கொள்ளுகின்றார்களாதலின், மற்றவர்களும் இவர்களுக்கு அஞ்சாமல் நடப்பார்கள் என்க.
ஆகவே, கல்லாதவர்கள் பேசுவது, தம்மிடத்திற் கல்வியில்லை என்பதைக் காட்டி எதிரிலிருப்பவர்களை அச்சப்படாதிருங்கள் என்று கூறுவது போலிருக்கின்றது என்றார்.
முதலியன எனப்பட்டவை, கற்றது போற் காட்டிக் கொள்ளும் உடற்புனைவு முதலியவற்றை.
கருத்து:
தெரிந்தவர்கள் முன்பு, தாமும் தெரிந்தவர்கள் போலப் பேசலாகாது.