போக்கறு கல்வி மீக்கொள் நகையினார் வாய்ச்சேரா - நீதிநெறி விளக்கம் 24
இன்னிசை வெண்பா
போக்கறு கல்வி புலமிக்கார் பாலன்றி
மீக்கொள் நகையினார் வாய்ச்சேரா - தாக்கணங்கும்
ஆணவாம் பெண்மை யுடைத்தெனினும் பெண்ணலம்
பேடு கொளப்படுவ தில். 24
- நீதிநெறி விளக்கம்
பொருளுரை:
தாக்கி வருத்துகின்ற, ஆண்மக்கள் பெரிதும் விரும்பக் கூடிய ஒரு பெண்ணிடம் பெண்மைத்தன்மை உடையது என்றாலும், அப் பெண்ணிடம் பெறக்கூடிய இன்பம் பேடுகளால் கொள்ளப்படுவதில்லை.
அதுபோல, நீக்குதற்கல்லாத குற்றமற்ற கல்வி, அறிவு மிக்கவரிடத்திலேயே செல்லும்; அதுவல்லாமல், விளையாட்டுத் தன்மையும், வேடிக்கையும் மிகுதியும் உள்ளவர்களிடத்தில் சேராது.
விளக்கம்:
போக்கு - ஒழியத்தக்கது. அது குற்றம். புலம் - அறிவு, அணங்குதல் - வருத்துதல்,
ஆராய்ந்து குற்றத்தை நீக்குவார் புலமிக்கார் ஆதலினால் மிக்கார்க்குப் போக்கறு கல்வி கூறினார்.
விளையாட்டுத்தன்மை உடையவரை நகையினார் என்றனர்.
ஆன்றஅறிவும் அருளும் உடைய பெரியோரெல்லாரும் மிக ஆழ்ந்து ஆராய்ந்து காட்டிய கல்விப் பொருளை அவரைப் போலவே மிக அமைந்த நோக்கமும் ஆழ்ந்த கருத்தும் உடையராய் யாண்டும் நெஞ்சம் செல்லுதலின்றி, பெருந்தன்மையும் பொருந்திக் கற்பாராதலினால், அப்பெருந்தன்மை வாய்க்காமல் விளையாட்டிற் பொழுது கழிக்கும் வீணர்களிடம் அக்கல்விப் பொருள்கள் சேரா என்றார்.
தாக்கும் அணங்கும் பெண்மை - தாக்கி வருத்துகின்ற பெண்மைத் தன்மை
பேடு- இங்கு ஆண் தன்மை இழந்தது. ஆண் தன்மையையிழந்த ஆண்பால் பெண்பாலாகக் கொள்ளப்படும்.
ஆதலால், பெண்பாலெனக் கொள்ளப்படுவது பெண்ணின்பத்தை நுகர ஏலாதது ஆகும்.
கருத்து:
விளையாட்டுத் தன்மையுடையவர்க்குப் படிப்பு வராது.