தேவன் வந்தார்
அன்பே வேதம்,
அன்பே ஆனந்தம்,
அன்பே சத்தியம்,
அன்பே நித்தியம் என்று
ஆர்பரிக்க நம் தேவன் வந்தார்!
ஆன்றோர்கள் யாவரும் மகிழ்ந்திட
அரக்கர்கள் உள்ளம் நடுங்கிட
அண்ட சராசரங்கள் வாழ்த்திட
அருட்பெருஞ் ஜோதியாய்
ஆண்டவரின் தூதராய் தேவன் வந்தார்!
இன்னல்கள் யாவும் கலைந்திட
இன்பம் எங்கும் நிறைந்திட, மன
இருள்தனை மாய்த்திட என்றும்
இனியதொரு காலை புலர்ந்திட,
இளஞ்சூரியனாய் தேவன் வந்தார்!
தன்னிலை மறந்து
தள்ளாடும் நெஞ்சமதை
தடியால் அடித்தால் துடிக்குமென்று
தன்னையே தியாகம் செய்ய, கருணை
தாயாய் நம் தேவன் வந்தார்!
நல்லவரெல்லாம் நலம் பெற்றிட
நன்செய் நிலமும் செலுத்திட
நட்ட விதைகள் நற்பலன் கொடுத்திட
நானிலமது பெரும்பேறு பெற்றிட,
நற்றுணையாய் தேவன் வந்தார்!
பட்டுப்போன மனிதநேயத்தை
பட்டயம் தீட்டி ஒளிர்விக்க,
பரம்பொருளின் தூதுவனாய்
பசு மாட்டு தொழுவந்தனில்,
பச்சிளங்குழந்தையாய் நம் தேவன் வந்தார்!
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
