மருத்துவ வெண்பா – தான்றிக்காய் – பாடல் 47

வைத்திய வித்வன்மணி சி.கண்ணுசாமி பிள்ளை இயற்றிய சித்தவைத்திய பதார்த்த குண விளக்கம் (1956) என்ற புத்தகத்திலிருந்து சில மருத்துவ சம்பந்தமான நேரிசை வெண்பாக் களையும், அவைகளின் பொருளும் குணமும் புத்தகத்தில் உள்ளபடி வெண்பாக்களின் நயத்திற்காகத் தருகிறேன்.

இதில் குறிப்பிடும் நோய்களைப்பற்றியும், மருந்துகளையும் தகுதியுள்ள சித்த மருத்துவர் களைக் கேட்ட பின்பே உபயோகிக்க வேண்டும்.

நேரிசை வெண்பா

சிலந்திவிடங் காமியப்புண் சீழான மேகங்
கலந்திவரும் வாதபித்தங் காலோ - டலர்ந்துடலில்
ஊன்றிக்காய் வெப்பம் உதிரபித் துங்கரக்குந்
தான்றிக்காய் கையிலெடுத் தால். 1

ஆணிப்பொன் மேனிக் கழகும் ஒளிவுமிகுங்
கோணிக்கொள் வாதபித்தக் கொள்கைபோந் – தாணிக்காய்
கொண்டவர்க்கு மேகமறுங் கூறா வனற்றணியுங்
கண்டவர்க்கு வாதம்போங் காண். 2

குணம்:

தான்றிக் காயால் சிலந்தி விசம், ஆண்குறிக் கிரந்தி, சீழ்பிரமேகம், திரிதோடசுரம், ரத்த பித்தம், வாத பித்த தொந்தம், பித்தநீர், உட்சூடு, வாத கோபம் ஆகியவை போகும். இன்னும் இதனால் அழகும்,ஒளியும் உண்டாகும்.

உபயோகிக்கும் முறை: கொட்டை நீக்கிப் பொன்மேனியாக வறுத்து இடித்த சூரணத்தை 10 – 15 குன்றியெடை சர்க்கரை சேர்த்துத் தினம் 2 வேளை 5 நாள் கொடுக்க இரைப்பைக்குப் பலத்தைக் கொடுக்கும். மலமிளக்கியாகும். பித்தத் தலைவலி, சுரம், ரத்த மூலம், சீத பேதி இவைகளை நீக்கும்.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (23-Dec-19, 3:58 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 102

மேலே