விவசாயி

=============
வட்டிக்குக் கடன்வாங்கி வயலை வெட்டி
வளருமென நம்பிநிதம் வாய்க்கால் தானும்
வெட்டிநீரை வார்த்துவிடும் விவசா யத்தில்
வேர்பிடிக்க விதைத்துவிட்ட வித்தும் சற்றே
எட்டியந்த வானத்தை எழிலாய் பார்க்க
ஏர்பிடித்த உழவனுளம் இன்பம் பூக்கத்
தொட்டதனை அகழ்ந்தெடுத்து தூரந் தூரம்
தோதாக நட்டுவிட்டுத் தூங்கா திருப்பான்.
***
கட்டியவளு மொருதுணியைக் கசக்கிக் கட்டிக்
கண்ணீரை சிந்துகின்ற கவலை போக்கி
ஒட்டுப்போட் டச்சட்டை ஒன்றை மாற்றி
உருப்படியாய் புதிதுவாங்கி உடுத்து தற்கும்
கட்டிவைக்கும் மனக்கோட்டை கோபு ரத்தைக்
கரைத்துவிட வேண்டுமென்று கரிய மேகம்
கொட்டியழித் தொழிக்கின்றக் கொடுமை கண்டு
குமுறுகின்ற விவசாயி குறுகிப் போவான்
**
மெய்யன் நடராஜ்

எழுதியவர் : மெய்யன் நடராஜ் (25-Dec-19, 1:47 am)
பார்வை : 182

மேலே