366 அற்றதறிந்து அளவூண் கொள்ளுதல் ஆக்கம் – பேருண்டி 5
அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
(விளம் மா தேமா அரையடிக்கு)
(விளம் வருமிடத்தில் மாங்காய்ச்சீர் வரலாம்)
மாந்தன மழிந்து தக்க
..மலசலங் கழிந்தூண் ஆவல்
சார்ந்தபின் னுணுஞ்சிற் றுண்டி
..சபலமாம் மீதூண் உண்டு
சோர்ந்திட அதைத்தான் தாங்கிச்
..சுமக்குதல் தன்னைத் தூக்க
நேர்ந்தமா வினைத்தான் தூக்கி
..நெஞ்சம்புண் ணாதல் போலும். 5
- பேருண்டி
மாயூரம் வேதநாயகம் பிள்ளை பாடல்
பொருளுரை:
”உண்ட ஊண் செரித்து மலமும் சிறுநீரும் தகுந்தபடி வெளிப்பட்டு, உண்ண வேட்கை உண்டாகி அதன் பின் உண்ணும் அளவான சாப்பாடு நற்பயனைத் தரும்.
அளவுக்கு மிஞ்சிப் பெருமளவு உணவு உண்டு, உடல் தளர்ந்து அவ்வூணைத் தான் தாங்கிச் சுமப்பது, தன்னைச் சுமக்க வேண்டிய குதிரையைத் தான் சுமந்து மனம் வருந்துவதைப் போன்றதாகும்” என வேண்டியது வேண்டாதது அறிந்து அளவாக உண்பது உடலுக்கு பலம் தரும் என்கிறார் இப்பாடலாசிரியர்.
மாந்துதல் - உண்டல். ஆவல் - வேட்கை.
சிற்றுண்டி - அளவூண். சபலம் - நற்பயன்.
மா - குதிரை. ஆக்கம் - பலம்