367 அகட்டில் பல்லுணவு அடைப்போன் அழிவன் – பேருண்டி 6
அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
(விளம் மா தேமா அரையடிக்கு)
(விளம் வருமிடத்தில் மாங்காய்ச்சீர் வரலாம்)
புட்களும் விலங்கு மொவ்வோ
ரிரையையே புசிக்கும் மாந்தர்
உட்கலி லாதி யாவும்
உண்பரன் றியுஞ்சற் றேனும்
வெட்கமில் லாத கட்டின்
மிகமிக அடைப்பர் உப்பார்
மட்கல மெனவன் னார்மெய்
மட்கலாம் வட்க லாமால். 6
- பேருண்டி
மாயூரம் வேதநாயகம் பிள்ளை பாடல்
பொருளுரை:
பறவைகளும் விலங்குகளும் ஒவ்வொரு வகையான இரையையே தின்னும். மக்கள் சிறிதும் அஞ்சுதலின்றிக் காய்கனிகள் முதல் மிருகங்களின் புலால் உணவினையும் கண்டது எல்லாம் உண்பார்கள்.
அதுமட்டுமல்லாமல், சிறிதும் நாணமில்லாது வயிற்றில் மிகுதியாகத் திணிப்பர். உப்பு நிறைந்த மண் பாண்டத்தைப் போல, அவர்கள் உடம்பு ஒளி மழுங்கி அழிவார்கள்” என்று பலவிதமான உணவுகளை மிகுதியாக வயிற்றில் அடைப்பவர்கள் ஆயுள் குறைந்து அழிவார்கள் என்று இப்பாடலாசிரியர் கூறுகிறார்.
அகடு – வயிறு, புள் - பறவை. உட்கல் - அஞ்சுதல். வட்கல் - அழிவெய்தல். மட்கல் - ஒளி மழுங்கல்