எழுத்தாளர் சங்கர நாராயணன் எழுதிய துப்பறியும் கதை

எழுத்தாளர் சங்கர நாராயணன் எழுதிய துப்பறியும் கதை

எழுத்தாளர் சங்கர நாராயணனுக்கு அவரது எழுத்து திறமையின் மீது சந்தேகம் வந்து விட்டது. அன்பு மனைவியின் தங்கை சுமதி ஆசையாய் அவரிடம் ஒரு துப்பறியும் கதை எழுதிக்கொடுங்கள் என்று கேட்டுவிட்டாள். அதற்காக மண்டையை உடைத்துக்கொண்டிருக்கிறார். கதைதான் வரமாட்டேன் என்று அடம் பிடித்துக்கொண்டிருக்கிறது
. மூளையை போட்டு கசக்கியும் வரவில்ல. காதல் கதை எழுதி தர சொல்லியிருந்தால் இந்நேரம் வர்ணனையிலேயே வடித்துக் கொடுத்திருப்பார். துப்பறியும் கதை என்பதால் கற்பனை கொஞ்சம் சண்டித்தனம் செய்கிறது. சுமதி அவருக்கு ஒரு யோசனையும் கொடுத்தாள், அவரது மருமகன், அதாவது அக்காவின் மகன் சரவணனின் கம்பெனியில் உட்கார்ந்து எழுதினால் கற்பனை நன்கு வரும் என்று, கூட சரவணனும் உதவி செய்வார் என்று டிப்ஸ் வேறு கொடுத்தாள்.
அட இந்த ஐடியா நமக்கு தோன்றாமல் போய்விட்டதே, மண்டையில் அடித்துக்கொண்டவர், உடனே சரவணன் கம்பெனிக்கு கிளம்பினார். சரவணன் கம்பெனி வைத்திருக்கிறான் என்றவுடன் வாசகர்கள் பெரிதாக எதிர்பார்க்க கூடாது. நான்கு சக்கர வாகனங்கள் பழுது பார்க்கும் பட்டறையைத்தான் அப்படி சொல்லிக்கொண்டிருக்கிறான் சரவணன்.
இவர் அங்கு சென்ற போது ஒரு காரின் அடியில் படுத்து ஏதோ ரிப்பேர் பார்த்துக் கொண்டிருந்த சரவணன் வெளியே வந்து வாங்க மாமா, ஏதோ துப்பறியும் கதை எழுதப் போறீங்கன்னு சொன்னாங்க, உள்ளே வாங்க, உங்களுக்குன்னு ஒரு இடம் பார்த்து வச்சிருக்கேன், அங்கே உட்கார்ந்து எழுதுங்க, நான் உங்களுக்கு அப்பப்ப உதவி செய்யறேன், என்றவனை வியப்புடன் பார்த்தவர் பரவாயில்லையே நான் எதுக்கு வரப்போறேன்னு சுமதி உங்கிட்ட சொல்லிட்டாளா? கேட்டவர் பெருமையுடன் சரவணனை பார்த்து ரொம்ப தேங்க்ஸ்டா சரவணா, என்று சொல்ல இதுக்கு எதுக்கு மாமா தேங்க்ஸ், சொல்லிவிட்டு அவரை ஒரு சிறிய அறைக்கு கூட்டிச் சென்று பழைய நாற்காலியை காண்பித்து அதில் உட்கார்ந்து எழுத சொல்லிவிட்டு இப்ப வந்துடறேன் சொல்லிவிட்டு பறந்து விட்டான்.
அந்த இடமும் அந்த பழைய நாற்காலியையும் பார்த்த சங்கர நாராயணனுக்கு அதுவே ஒரு மர்ம பிரதேசமாக தோன்றியது. அப்படியோ நாற்காலி கீழே விழுந்து விடுமோ என்று பயந்து உட்கார்ந்தவர், நாற்காலி அவர் உட்கார்ந்ததை ஏற்றுக்கொண்டவுடன் ‘அப்பாடி’ என்று பெருமூச்சு விட்டு தான் கையோடு கொண்டு வந்திருந்த பேப்பர் பேனாவை எடுத்த உடன் தான் தெரிந்தது,, எங்கு வைத்து எழுதுவது என விழித்தார். பக்கத்தில் இருந்த பழைய ஸ்டூல் ஒன்றை இழுத்து எதிரில் வைத்துக் கொண்டு பேப்பரை ஸ்டூலின் மீது வைக்க சுத்தத்தையே பார்த்திராத அந்த ஸ்டூல் தன்னுடைய அழுக்கையெல்லாம் அந்த பேப்பரின் பின்புறம் தேய்த்து தன் தாபத்தை தீர்த்து கொண்டது.. பின்புறம் அழுக்கானதை யோசிக்காத நம் எழுத்தாளர் எழுத ஆரம்பிக்கும் முன் போடும் “ஓம்” என்னும் எழுத்தை எழுதி அடுத்த வரிக்காக யோசிக்க ஆரம்பிக்க…
“மாமா” குரல் கேட்டு திரும்பி பார்த்தார். எதிரில் சுமதியும் சரவணனும் நின்று கொண்டிருந்தார்கள். வாங்க என்று அவர்களை கூப்பிட அவர்கள் இருவரும் அவரருகே வந்து எது வரைக்கும் வந்திருக்கீங்க? என்று கேட்க இப்பத்தான் ஆரம்பிச்சிருக்கேன் இவர் சொல்ல “மாமா” இப்படி ஆரம்பிக்கலாமே? என்று சுமதி ஒரு யோசனை சொன்னாள். அது நல்லாயிருக்காதே என்று சரவணன் இழுக்க, அவர்கள் இருவருக்கும் ஒரு வாக்குவாதம் ஆரம்பித்தது. அதன் பின் அவர்கள் இருவருமே இவரை ஒரு பொருட்டாக நினைக்காமல் பேசிக்கொண்டே இருந்து, ஒரு கட்டத்தில் அவரிடம் விடைபெறாமலே வெளியே சென்று விட்டனர்.
இவர் அவர்கள் வாயை பார்த்து கொண்டிருந்து விட்டு வெளியே போனவுடன் “தேமே” என்று மீண்டும் எழுத ஆரம்பித்தார். இப்படியாக அவரின் துப்பறியும் கதை மெதுவாக உருவாக ஆரம்பிக்க அதற்குள் ஒரு தடங்கல், சரவணன் உள்ளே வந்து மாமா அத்தை உங்களை வீட்டுக்கு கூப்பிடறாங்க என்று சொல்லி அவரை கிளப்பி விட்டான்.
இப்படியாக அவரின் கதை உருப்பெற நான்கைந்து நாட்கள் ஓடி விட்டன. தினமும் “சரவணனின் கம்பெனிக்கு” செல்ல, அவனே வீட்டிற்கு வந்து அவரை கூட்டிச்சென்று, அந்த அறையில் உட்கார வைத்து விட்டு செல்வான். இடையிடையே சுமதி அங்கு வந்து அவருக்கு சில உதவிகள் செய்வாள். கதை முற்றுப் பெற இன்னும் ஒரு சில நாட்களே தேவை என்ற சூழ்நிலையில் உன்னுடைய உதவிக்கு நன்றி என்று சரவணனிடம் சொல்லிவிட்டு வீட்டிற்கு கிளம்பினார்.
வீட்டின் வாசப்படியில் முகத்தில் எண்ணையில் வெடிக்கும் கடுகைப் போல முகத்தை வைத்துக்கொண்டு அவர் மனைவி நின்றுகொண்டிருந்தாள். அருகில் அவளின் அப்பாவும் (மாமனார்) அதே முகபாவத்துடன் அவரை கடித்து குதறும் முகத்துடன் நின்று கொண்டிருந்தார். இவருக்கு ஒன்றும் புரியவில்லை, எதற்காக இருவரும் என்னை முறைத்துக்கொண்டிருக்கிறீர்கள்? விளங்காது அவர்களை பார்க்க உங்களுக்கு எதுக்கு இந்த மாதிரி வேலை எல்லாம்? கேட்ட மனைவிக்கு எந்த மாதிரி வேலையெல்லாம்? இவர் திருப்பி கேட்டார்.
ம்..கதை எழுதறேன், வெங்காயம் எழுதறேன், அப்படீன்னு உங்க மருமகன் வொர்க்க்ஷாப்ல போய் உட்கார்ந்துட்டு கூட எந் தங்கச்சிய வேற சேர்த்துகிட்டு, நல்லா திட்டம் போட்டுத்தான் உங்க குடும்பத்து ஆளுங்க வேலை செய்யறீங்க? அவருக்கு ஒன்றும் புரியவில்லை என்ன சொல்றே? சுமதி ஒரு கதை கேட்டான்னுதானே இவ்வளவு கஷ்டப்படறேன்.
நல்லா கதை எழுதி கிழிச்சீங்க, உங்களுக்கு என்னை கொடுக்கறதுக்கே எங்கப்பாவுக்கு விருப்பமில்லை, சும்மா கதை எழுதிகிட்டு உட்கார்ந்திருக்கறவனுக்கு எல்லாம் பொண்ணை கொடுத்திட்டோமுன்னு வருத்தப்பட்டிட்டு இருக்காரு. இதுல என் தங்கச்சிய உங்க மருமகனுக்கு கொடுக்கறதுக்கு நீங்களும் உங்க குடும்பத்து ஆளுங்களும் திட்டம் போட்டு வேலை செஞ்சுட்டீங்க, குரலில் கார நெடி அடிக்க பேசினாள்.
அப்பொழுதும் நம் எழுத்தாளருக்கு புரியாமல் “ங்கே” என்று விழித்தார். உங்க மர மண்டைக்கு எதுதான் புரியும் ஒரு இடி இடித்துவிட்டு சரவணனின் அம்மா அப்பா எங்க வீட்டுக்கு போய் சுமதிய பொண்ணு கேட்ட்துமில்லாம, அவங்க இரண்டு பேருக்கும் சம்மதமா இருக்கும் போல இருக்கு, அதுக்கு அவங்க மாமா கூட ஒத்துகிட்டாரு, அப்படீன்னு உங்களையும் சேர்த்து சொல்லியிருக்காங்க. அதனால எங்கப்பா உங்க மேலே கோபமா வந்திருக்காரு.
உங்களுக்கு பொண்ணை கொடுத்த்துக்கே கவலைப்பட்டுட்டு இருக்கேன், இதுல இந்த ஆளு அவன் மருமகனுக்கு வேற என் குடும்பத்துல இருந்து பொண்ணு கேட்கறானே, அப்படீன்னு கோபப்டறாரு. நான்தான் சொன்னேன் என் வீட்டுக்கார்ரரு அந்தளவுக்கு விவரமான ஆளு இல்லேன்னு அது சரிதான்னு இப்ப முழிக்கற முழிய பார்த்தா தெரியுதே “குரலில் கொஞ்சம் பெருமை”
இப்பொழுதுதான் நம் எழுத்தாளருக்கு மெதுவாக புரிய ஆரம்பித்தது, தன்னை துப்பறியும் கதை எழுதச்சொல்லி இவர்கள் காதல் கதை எழுதிக்கொண்டிருந்திருக்கிறார்கள்.

எழுதியவர் : தாமோதரன்.ஸ்ரீ (18-Jan-20, 1:31 pm)
சேர்த்தது : தாமோதரன்ஸ்ரீ
பார்வை : 261

மேலே