மொழி தெரியலையே

அப்பா, அம்மா இருவருக்கும்
அவ்வப்போது
சின்னச் சின்ன சச்சரவுகள்
நிகழும், முகம் கருக்கும்
அனல் பறக்கும்

அப்போது விருந்தினர்
யாராவது வீட்டுக்கு வந்தால்
அவர்கள் இருவரும்
அன்பு நிறைந்த தம்பதியராய்
காட்டிக் கொள்வார்கள்

அம்மாவின் அதட்டலும்
அப்பாவின் அடங்கலும்
ஆச்சரியம் தரும்,
காலைப் பொழுதில்
காகமொன்று விடாமல்
கத்திக் கொண்டிருந்ததால்

விருந்தாடி யாராவது
வீட்டுக்குக் கட்டாயம்
வருவார்கள் என்று
அம்மா நம்பினார்கள்
அப்பாவுக்கு அரைகுறை மனது

காக்கை சொன்னது போல்
காரைக்கால் மாமா வந்தார்,
காக்கை மொழி அறிந்த
அம்மாவுக்கு ஏனோ
அப்பா மொழி தெரியலையே!

எழுதியவர் : கோ. கணபதி. (19-Jan-20, 3:56 am)
சேர்த்தது : கோ.கணபதி
பார்வை : 61

மேலே