கம்ப ராமாயணக் கவி அழகும் நயமும் - பாடல் 01 வெம்புலிக் குழாத்து அகப்பட்டது அன்னாள்

நண்பர் காளியப்பன் எசேக்கியல் அவர்கள் என் மேல் நம்பிக்கை வைத்து ‘கம்ப ராமாயணக் கவி அழகும் நயமும்’ என்ற தலைப்பில் உங்கள் மொழிவளத்தில் உரை எழுதி தளத்தில் பதியப்பட வேண்டும் என்பது எனது ஆசை என்று கேட்டுக் கொண்டு சில பாடல்களையும் அனுப்பியுள்ளார். எனவே அவரது எண்ணமும், எனது முயற்சியும் நிறைவேற இறைவனை வேண்டி முதல் பாடலைப் பதிவு செய்கிறேன்.

கம்பராமாயணத்தின் சுந்தர காண்டம், காட்சிப் படலத்தில் அனுமன் அசோக வனத்தை அடைந்து சீதாப் பிராட்டியின் துயர்நிலையைக் காணும் காட்சி:

கலித்துறை
(மா விளம் விளம் விளம் மா)
(விளம் வருமிடத்தில் மாங்காய்ச் சீர் வரலாம்)

துயிலெ னக்கண்கள் இமைத்தலும் முகிழ்த்தலும் துறந்தாள்;
வெயிலி டைத்தந்த விளக்கென ஒளிஇலா மெய்யாள்;
மயிலி யல்குயில் மழலையாள், மானிளம் பேடை
அயிலெ யிற்றுவெம் புலிக்குழாத்(து) அகப்பட்ட தன்னாள். 4 காட்சிப் படலம், சுந்தர காண்டம், இராமாயணம்

பொருளுரை:

உறக்கம் கண்களை விட்டு அகல கண்கள் மூடித் திறப்பதையும், திறந்து மூடுவதையும் துறந்தாள். சூரியனின் வெப்பக் கதிர்களுக்கு முன் ஏற்றி வைத்த விளக்கைப் போல மேனி ஒளி குன்றினாள். மயிலின் மென்மையான சாயலையும் குயிலினிய கொஞ்சு மொழிக் குரலையும் பெற்ற இளம் பெண்மான் போன்ற தன்மையுடைய பிராட்டி, கூரிய பற்களை உடைய கொடிய புலிக்கூட்டத்தில் சிக்கிக் கொண்டது போலத் துயருடன் இருந்தாள்”.

கருத்து: காளியப்பன் எசேக்கியல் • 04-Jan-2014 9:32 pm

ஒளி குன்றித் தோன்றிய சீதையின் நிலையைச் சொல்லக் கம்பர், 'சூரியனின் வெப்பக் கதிர்களுக்கு முன் ஏற்றி வைத்த விளக்கைப் போல மேனி ஒளி குன்றினாள்.' என்றும்; 'மயிலின் மென்மையான சாயலையும் குயிலினிய கொஞ்சு மொழிக் குரலையும் பெற்ற இளம் பெண்மான் போன்ற தன்மையுடைய பிராட்டி, கூரிய பற்களை உடைய கொடிய புலிக்கூட்டத்தில் சிக்கிக் கொண்டது போலத் துயருடன் இருந்தாள்”' என்றும் குறிப்பிட்டுள்ள நயம் பார்த்துணர வேண்டிய ஒன்று. தங்களின் உரை எளிமை அழகு.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (24-Jan-20, 9:49 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 27

சிறந்த கட்டுரைகள்

மேலே