திருலைராயனின் வாள்
அரசர்களை அவர்களுடைய ஆயுதங்களைப் போற்றுவதன் மூலமும் புகழ்வது மரபு. அந்த மரபின்படி திருமலைராயனின் வெற்றி வாளைக் குறித்து இவ்வாறு பாடுகிறார்.
நேரிசை வெண்பா
செற்றலரை வென்ற திருமலைரா யன்கரத்தில்
வெற்றிபுரி யும்வாளே வீரவாள் - மற்றையவாள்
போவாள் வருவாள் புகுவாள் புறப்படுவாள்
ஆவா னிவாளவா ளாம். 8
- கவி காளமேகம்
பொருளுரை:
பகைகொண்டுவந்து எதிர்த்தவர்களை வெற்றிகொண்ட, திருமலைராயன் கரத்தில் விளங்க அந்த வெற்றியைச் செயற்படுத்தும் வாள் ஒன்றே வீரவாள் என்பதற்குப் பொருந்துவதாகும்;
வாள் என்று முடியும் பிறவெல்லாம், போவாள் வருவாள். புகுவாள், புறப்படுவாள், ஆவாள் இவாள் அவாள் என்ற சொற்கள் வாள் என முடிந்தும் எப்படி வாளைக் குறிப்பதாகாதோ, அப்படியே வாள் என வழங்கினும் பயன் அற்றவைகளாம்.
இது, திருமலைராயனின் போராற்றலைக் காட்டுகின்றது. அவன், போர்கள் பலவற்றை நடத்தி வெற்றி பெற்றவன் என்பதும் தெரிகின்றது.