அம்மாவும் அப்பாவும் உயிருடன் இருக்கிறார்கள்

கவிதைக்கு முன் சில வரிகள் !
பல வருடங்களுக்கு முன் எப்பொழுதோ படித்த ஒரு செய்தி !
நடிகர் திலகம் சிவாஜி கணேசனுடன் ஒரு பேட்டி அவரிடம் நிருபர் அவரது குடும்பத்தை பற்றி பேசிக்கொண்டிருக்கிறார். அப்பொழுது அவர் சொன்னார் நான் இப்பொழுது தனியாள் என்றார். நிருபருக்கு ஆச்சர்யம் அது எப்படி உங்களது குடும்பம் பெரியதல்லவா, மனைவி மக்கள் அனைவரும் இருக்கும்போது எப்படி தனியாள் என்கிறீர்கள்.
அவர் சொன்னார் இவர்கள் அனைவரும் என்னால் உருவானவர்கள். என்னை உருவாக்கிய என் தாய், தந்தை, தம்பி, சுற்றம் அனைவரும் மறைந்து போனபின் நான் தனியாள்தானே.
இது எப்பொழுது படித்தது என்று ஞாபகமில்லை. ஆனால் இவரது வார்த்தைகள்
இன்றும் மனதில் பதிந்திருக்கிறது.



அம்மாவும் அப்பாவும் உயிருடன் இருக்கிறார்கள்

வயது அறுபது
நெருங்குகிறது
மீசையில் வெண்மையும்
தலையில் மைதானமும்

நீண்ட நாள் நகர
வாழ்க்கை
ஏதேச்சையாய் ஒரு
திருமண அழைப்பிதழ்
சொந்த ஊரில்

கலந்து கொண்டவன்
ஓரமாய் ஒரு நாற்காலியில்
சட்டென்று ஒரு
பெண் கொஞ்சம்
என்னை விட இளையவள்
என் கைகளை
பிடித்து நீ
கமலா பெரியம்மா பையன்!
ராமநாதன்தானே
அம்மா பெயர் !
நீண்ட நாள் ஆயிற்று
அவள் மறைந்து
என்
மனதை விட்டும்.

இன்று மீண்டும் அவள்
பெயர் உச்சரிக்கப்படுகிறது
ஆம் மெல்ல தலையசைக்க
யாரோ ஒருவரை அழைக்கிறாள்
அத்தை இது யார்
தெரிகிறதா?
நம்ம கமலா
பெரியம்மா பையன் !
ஆர்வமாய் அறிமுகப்படுத்துகிறாள்
எலே ! உங்கம்மாவும் நானும்
அந்த காலத்துல ஒண்ணா
விளையாண்டமில்லா, அவ
அப்பன் பேச்சை மீறாத புள்ளை
அதாண்டா உங்க தாத்தன் !
அந்த காலத்துல…..

உங்கப்பன் கூட
பெரிய ஆளுடா
உரிமையுடன் மூதாட்டி

அம்மா நீயும்
அப்பாவும்
சொந்தங்களின் மனதில்
வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறீர்கள்
எனை விட்டு மறைந்து
பல வருடங்கள் ஆனாலும் !

எழுதியவர் : தாமோதரன்.ஸ்ரீ (29-Jan-20, 9:47 am)
சேர்த்தது : தாமோதரன்ஸ்ரீ
பார்வை : 74

மேலே