நீறாவாய் நெருப்பாவாய்
"சிவபெருமானைக் குறித்த ஒரு செய்யுள்; அதனிடத்தே நீறாவாய், நெருப்பாவாய், கூறாவாய், கொளுத்துவாய், நட்டமாவாய், நஞ்சமாவாய் என்று அவனைப் பற்றிச் சொல்ல வேண்டும்; பாடுக பார்ப்போம்” என்றார் ஒரு புலவர்.
அப்படியே அரைவினாடியில் அவ்வாறு சொற்கள் பொருள் நயத்துடன் அமைந்து வரப் பாடி, முடிவிலே, அப் பெருமான் அத்தகையவனே எனினும், அன்பரைக் கருணை பாலிக்கும் கருணையாளனும் ஆவான் என்று சொல்லும் வகையினாலே, அவன் தன்னைக் காக்குமாறும் வேண்டுகின்றார் கவிஞர்.
நேரிசை வெண்பா
நீறாவாய் நெற்றி நெருப்பாவாய் அங்கமிரு
கூறாவாய் மேனி கொளுத்துவாய் - மாறாத
நட்டமா வாய்சோறு நஞ்சாவாய் நாயேனை
இட்டமாய்க் காப்பா யினி. 14
- கவி காளமேகம்
பொருளுரை:
நெற்றியினிடத்தே திருநீற்றினை உடையை ஆவாய், திருமேனி நெருப்பு மயமாக அமைந்திருப்பாய், நின் திருமேனி இருகூறாக அமைந்திருப்பாய், எரி நெருப்பாகவே விளங்குவாய், இடையீடில்லாத நடனத்தையும் உடையை ஆவாய், நஞ்சினைத் சோறாகக் கொள்வோனும் ஆவாய், அங்ஙனம் நீ வெம்மையுடனேயே விளங்குபவன் ஆயினும், இனி, நாயினேனையும் விருப்பமுடன் காத்தருள்வாயாக என்று பாடுகிறார் கவி காளமேகம்.