கோடாமல் நீதிமுறை கூறுவோன் வானுலகம் தேடாமல் தந்த திரு - பதவி, தருமதீபிகை 579

நேரிசை வெண்பா

உள்ளம் துலையாய் உறுநிறைகள் நேர்தூக்கிக்
கள்ளம் கரவுகள் கண்டறிந்து - எள்ளளவும்
கோடாமல் நீதிமுறை கூறுவோன் வானுலகம்
தேடாமல் தந்த திரு. 579

- பதவி, தருமதீபிகை,
- கவிராஜ பண்டிதர் ஜெகவீர பாண்டியனார்

பொருளுரை:

உற்ற முறையீடுகளைத் தன்னுடைய உள்ளம் ஆகிய தராசில் வைத்து நிறை தூக்கி நேரே நோக்கிக் கள்ளம், கரவு முதலிய குறைகள் யாதும் இல்லாமல் ஓர்ந்து தெளிந்து நேர்மையாகத் தரும நீதிகளை வழங்குகின்றவன் நாட்டுக்கு உயர்ந்த ஒரு தெய்வத் திரு என்கிறார் கவிராஜ பண்டிதர்.

உலக மக்கள் பலவகை நிலையினர். யாவரும் வாசனை வயத்தராய் ஒழுகி வருகின்றனர். நல்ல நெறிகளில் இயல்பாகவே செல்பவர் நல்லவராய் நிலவுகின்றனர். தீய வழிகளில் திமிர்ந்து திரிபவர் தீயவராய்த் தெரிகின்றனர். பழகி வந்துள்ள வாசனைகளின்படியே பழக்க வழக்கங்கள் படிந்து வருதலால் மாந்தர் அவ்வாறே நடந்து வருகின்றார்.

காமம், குரோதம், அகங்காரம், இடம்பம் முதலிய பொல்லாத இயல்புகள் எல்லாரையும் பிணித்திருத்தலால் யாண்டும் கலகமும், குழப்பமும், அல்லலும், அவலமும் நீண்டு நிற்கின்றன. இவ்வாறான போராட்டங்கள் பொங்கி எழுந்த பொழுது அவற்றை எங்கும் நேர்மையாய் அடக்கியருள அதிகாரிகளை அரசன் நியமித்திருக்கிறான்.

அந்தப் பதவி நியமனங்களுள் நீதித் தலம் தலைமை நிலையில் உயர்ந்திருக்கிறது. புனிதமான அவ்வுயர் பதவியில் அமர்ந்து நீதி நலங்களை நெறிமுறையே புரிபவர் அதிசய மேதைகளாய்த் துதி செய்யப் பெறுகின்றார். நீதிமான் என்னும் பெயர் உயர்ந்த மகிமை யுடையது. சிறந்த நீர்மை தோய்ந்தது.

நீதியின் நிலையமாய் நிலவியிருந்தமையால் இராமனை நீதிமான் என மேலோரும் நூலோரும் உவந்து போற்றியுள்ளனர். இக் காலத்திலுள்ள அதிகாரிகளைப் பார்த்து ’இராம மூர்த்தி’ என்று உபசாரமாய்ச் சொல்லி வருவது நாட்டில் வழக்கமாயுள்ளது. தரும சீலனை உலகம் உரிமையாய்ப் போற்றுகின்றது.

தான் யாதும் வழுவாமல் நெறிமுறையே ஒழுகி வந்கமையினாலேதான் அப்பெருமான் தருமமூர்த்தி எனப் பெருமை மிகப் பெற்றான். பேரின் நினைவு சீரின் விளைவாயுள்ளது.

தன் உள்ளம் திருந்தியுள்ளவனே உலகத்தைத் திருத்த வல்லவனாய் ஒளிபெற்று நிற்கின்றான். அறிவும் ஒழுக்கமும் ஒருங்கே நன்கு மருவிய பொழுது அங்கே அரிய அதிசய ஆற்றல் பெருகி எழுகின்றது. உள்ளம் திருந்தினவன் எதிரே உலகம் எளிதே திருந்தி வருகிறது.

’உள்ளம் துலையா’ என்றது நீதிபதியினுடைய நெஞ்சின் நிலை தெரிய வந்தது.

யாதொரு கோட்டமும் இல்லாமல் எவ்வழியும் செவ்வையாயிருந்து தன்பால் உற்ற வழக்குகளின் குணம் குற்றங்களைக் கூர்ந்து ஓர்ந்து உண்மையை உணர்த்தவுரிய நீதிமான் உள்ளத்திற்குத் துலை உவமையாய் வந்தது. துலை - தராசு. நெறியே நிறுத்து நிறையின் மெய்யான அளவை நேரே காட்டவல்ல நிறைகோல் போல் முறை செய்யும் நீதிமான் இறைவனருளை. எய்தி உயர்கின்றான்.

ஐயம் தீரப் பொருளை உணர்த்தலும்
மெய்ந்நடு நிலையும் மிகுநிறை கோற்கே. - நன்னூல்

நிறைகோலின் இயல்பை இது துலக்கி யுள்ளது.

செங்கோல் செலுத்துபவர் நிறைகோல் போல் நேர்மையாயிருக்க வேண்டும் என்னும் இந்நீர்மை இங்கே கூர்மையாக ஓர்ந்து கொள்ளவுரியது. உள்ளச் செம்மையே நீதிபதிக்கு உயர்ந்த தன்மையாய் ஒளி சுரந்து எழில் புரிந்தருளுகின்றது

உள்ளம் கோடிய அளவில் அந்த மனிதன் புல்லியனாய்ப் பீடிழந்து படுகிறான். அது கோடாதுள்ளவன் மேலோனாயுயர்ந்து மேன்மை மிகப் பெறுகின்றான்.

நெடுநுகத்துப் பகல்போல
நடுவு நின்ற நன்னெஞ்சினோர். - பட்டினப் பாலை

எனச் செம்மையான சான்றோர் நீர்மையை உருத்திரங் கண்ணனார் என்னும் சங்கப் புலவர் இங்ஙனம் குறித்திருக்கிறார்.

சமன்செய்து சீர்துாக்கும் கோல்போல் அமைந்தொருபால்
கோடாமை சான்றோர்க்(கு) அணி. 118 நடுவு நிலைமை

மனக் கோட்டமின்றி யாண்டும் நேர்மையாய் நிற்கும் சீர்மையே மேலோர்க்கு அணி என வள்ளுவர் இவ்வாறு வாய் மலர்ந்துள்ளார். இந்த அழகை இழந்திருப்பது அவலட்சணமாகிறது.

உயரிய உயிரணி உள்ளச் செம்மையே; அதனைப் பூண்டு கொள்; அஃதில்லாமல் மணியணிகளை உடலில் தாங்கி வீணே பிலுக்கித் திரிவது நாணத் தக்கதாம். அகத்தின் நேர்மை அற்புத அழகாய் நீதிமானைப் பொற்புறுத்துகிறது. நெறியும் நீதியும் எவ்வழியும் யாண்டும் பெரிய மகிமைகளை அருளுகின்றன.

’கள்ளம் கரவுகள் கண்டு அறிந்து’ நீதிபதி கருதித் தெளிய உரிய உறுதி நிலைகளை இது உணர்த்தியுள்ளது. வழக்கில் நேர்ந்துள்ள வாதி பிரதிவாதிகளுடைய உரைகளை ஊன்றியுணர்ந்து உண்மை தெளிந்து நியாயம் வழங்க வேண்டியது நீதிமானுடைய கடமையாதலால் அதில் மடமை நேராமல் மதியூகியாயிருத்தல் அவசியம். உரிய நியாயம் தவறினால் அது கொடிய அநியாயமாய் முடிந்து, நீதிபதி குடிகேடனாய் நெடிய பழியடைய நேர்கின்றான்.

பொய்யுடை ஒருவன் சொல்வன் மையினால்
மெய்போ லும்மே மெய்போ லும்மே. 1

மெய்யுடை ஒருவன் சொலமாட் டாமையால்
பொய்போ லும்மே பொய்போ லும்மே. 2

இருவர்தம் சொல்லையும் எழுதரம் கேட்டே
இருவரும் பொருந்த உரையார் ஆயின்
மனுமுறை நெறியின் வழக்கிழந் தவர்தாம்
மனமுற மறுகிநின்(று) அழுத கண்ணிர்
முறையுறத் தேவர் மூவர் காக்கினும்
வழிவழி ஈர்வதோர் வாள்ஆ கும்மே. 3 – நறுந்தொகை (வெற்றி வேற்கை)

நீதிபதிகள் உணர்ந்து ஒழுக வேண்டிய போதனைகளை அதி வீரராம பாண்டியன் என்னும் மன்னன் இன்னவாறு போதித்திருக்கிறான். தனக்கு உண்மையான உரிமையை வழக்காளி இழந்துவிடின் அவன் வயிறெரிந்து அழுதுபோவான்; அந்தப் பாவம் தீர்ப்புக் கூறிய அதிகாரியைப் பிடித்து அவனுடைய வழிமுறைக்கும் அழிகேடுகளைச் செய்கின்றது.

நேரிசை வெண்பா

வழக்குடையான் நிற்ப வலியானைக் கூடி
வழக்கை அழிவழக்குச் செய்தோன் - வழக்கிழந்தோன்
சுற்றமும் தானும் தொடர்ந்தழுத கண்ணீரால்
எச்சமறும் என்றால் அறு. - ஒளவையார்

மனக் கோட்டமுடையனாய் வழக்கை வழுப்படுத்தின் அவனது வமிச வழி அழிய நேரும் என ஒளவையார் இவ்வாறு கூறியிருக்கிறார். நியாயத் தீர்ப்பு பழுதுபடின் அதனால் விளையும் அழிவு நிலையை இது விளக்கியது.

உள்ளம் கோடாமல் எள் அளவும் மாறாமல் யாண்டும் நேர்மையாய் நீதிமுறைகளைச் செய்து வருபவன் ஆதிபகவன் அருள் பெற்று அரிய உயர் நிலையில் ஒளிசெய்து மிளிர்கிறான்.

அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
(காய் 4 மா தேமா)

நீதிபதி யாயுலகில் நிலையுயர்ந்த பதவியினில்
..நேர்ந்த மர்ந்தோன்
வாதிகளின் முறைகளையும் வழக்குகளின் நிலைகளையும்
..வகையாய் ஓர்ந்து
தீதுபதி யாதவகை எவ்வழியும் செவ்வையாய்த்
..தெளிந்து நோக்கி
ஓதிவரு முறைபுரியின் உயர்நீதி பதியாகி
..ஒளிர்வா னன்றே. – கவிராஜ பண்டிதர்

மருவிய பெயருக்கு மாசு நேராதவாறு தேசு புரிந்து ஒழுகிவரின் ஈசன் அருளை அவன் இனிதே அடைந்து கொள்ளுகிறான்.

தலைமையான பதவியைத் தனக்குத் தந்திருக்கிற தரும தேவகையின் உள்ளம் உவந்து கொள்ள உரிமையோடு நீதி முறைகளைச் செய்கின்ற அந்த நீதிபதி எவ்வழியும் தரும தேவதையின் திருவருளை மருவி மகிழ்கின்றான் என்கிறார் கவிராஜ பண்டிதர்.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (30-Jan-20, 4:03 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 66

மேலே