பேரமைதியின் சொற்கள்

பேரமைதி யின் சொற்கள்
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°

சத்தம் சந்தடி ஏதுமின்றி
சுத்தமாக உதறியபின்
கோணிப்பையைத்
தூகக்கித் தோளில்
போட்டபடி நடக்கிறான்
கோவில் உண்டியலைக்
கன்னமிட
கள்வனொருவன்

மூன்றாம் சாமத்தின்
பேரமைதியைக்
கள்வனின் கால்களிடம்
பறிகொடுத்த பூனை
துறத்திச் சென்ற
எலியை விட்டுவிட்டு
இயலாமையின்
கட்டளையைச் சிரமேற்று
காவல் புரிகிறது
நுழைவாயிலின் மதில்மேல்

காட்சி நுட்பங்களைக்
கவிவடிக்க
வார்த்தைகள் வரவில்லை
கதவடைக்கிறது
கூர்வேல் தாங்கிய
பூனையின்
சாம்பல் கண்கள்

சத்தமின்றி நான்
பேனாவை மூடிய கணம்
திறந்த உண்டியலிலிருந்து
சரிந்து விழுகிறது
பேரமைதியின்
சொற்கள் .

எழுதியவர் : முகிலன் (30-Jan-20, 5:21 pm)
சேர்த்தது : முகிலன்
பார்வை : 171

மேலே