கம்ப ராமாயணக் கவி அழகும் நயமும் - 09 இராவணனுக்கு இராமபிரானின் அருள்

யுத்த காண்டம், முதற்போர் புரி படலத்தில் போர் முடிவில் இராவணன் தன் நால்வகைப் படையை யும் இழந்து தனித்து நிற்க, அவனைப் பார்த்து அருள் புரிந்து இராமபிரான் கூறியதை கவியரசர் இப் பாடலில் சிறப்பாக எடுத்துரைக்கிறார்.

கலித்துறை
(மா விளம் விளம் விளம் மா)

ஆளை யா!உனக்(கு) அமைந்தன மாருதம் அறைந்த
பூளை ஆயின கண்டனை; இன்றுபோய், போர்க்கு
நாளை வா'என நல்கினன் நாகிளங் கமுகின்
வாளை தாவுறு கோசல நாடுடை வள்ளல். 255

- முதற்போர் புரி படலம், யுத்த காண்டம், ராமாயணம்

பொருளுரை:

”அரக்கரை ஆள்கின்ற ஐயா! உனக்குத் துணையாக அமைந்த நால்வகைப் படைகள் அனைத்தும் கடும் புயலால் தாக்கப்பட்ட பூளைப் பூக்களைப் போல சிதைந்து போனதைக் கண்டாய்.

அதனால், இன்று உன் இலங்கை அரண்மனைக்குப் போய், மேலும் போர் புரிய விரும்பினால் நாளைக்கு வருவாயாக என்று மிகவும் இளைய பாக்கு மரத்தின் மீது வாளை மீன்கள் தாவிப் பாயும் நீர்வளம் மிக்க கோசல நாட்டுக்கு உரிய வள்ளலாகிய இராமபிரான் இராவணனுக்கு அருள் புரிந்தான்”.

கவிநயம்:

"காற்றிடைப் பூளை கரந்தென அரந்தையுறக் கடல் அரக்கர் சேனை, கூற்றிடைச் செல்லக் கொடுங் கணை துரந்த கோலவில் இராமன் தன் கோவில்" என ஸ்ரீ பெரியஆழ்வார் திருமொழியில் திருமங்கை யாழ்வார் உவமையாக மொழிந்துள்ளது தம் மனதைக் கவர்ந்ததால், அவர் மொழியைப் பொன் போலப் போற்றி, இராவணனின் நால்வகைப் படைகளின் அழிவிற்கு "மாருதம் அமைந்த பூளையாயின" என்று உவமையாக்கினார் கவியரசர்.

தன் மனைவியை வஞ்சித்து இன்னும் சிறை வைத்துள்ள மாபாதகன் நிராயுதனாகக் கண்முன் நிற்பது அறிந்தும், அவனைக் கொல்லாது, "இன்று போய்ப் போர்க்கு நாளை வா" என நவின்ற அருள் மனம் சான்றோர் பலரின் உள்ளம் கவர்ந்ததாம். இது 'தழிஞ்சி' எனும் புறப்பொருள் துறையாயிற்று.

கோசல நாடுடை வள்ளல் என்று கவியரசர் ஏன் குறிப்பிடுகிறார்? இராமனுக்கு உள்ளது அயோத்தி தானே? சீதை ஒரே பொண்ணு. ஜனகனுக்கு அப்புறம் அந்த நாடு இராமனுக்கு தானே வரும். மிதிலை நாடுடை வள்ளல் என்று சொல்லி இருக்கலாம். அயோத்தியும் சொல்லவில்லை; மிதிலையும் சொல்லவில்லை; கோசல நாடுடை வள்ளல் என்கிறார் கம்பர். கோசல நாடு கைகேயி யின் தந்தையினுடையது. அயோத்தியை பரதனுக்கு கொடுத்தாயிற்று. மிதிலை இன்னும் கையில் வரவில்லை. இலங்கையை விபீஷண னுக்கு தருவதாய் வாக்கு தந்து விட்டான் இராமன்.

ஒரு வேளை இராவணன் மனம் திருந்தி சீதையை சிறை விட்டு, இராமனிடம் சரணாகதி அடைந்தால் அவனுக்கு என்ன தருவது? இலங்கையை தர முடியாது! பரதனிடம் பேசி, கோசல நாட்டை தரலாம் என்று இராமன் நினைத்து இருப்பானோ என்றும், கம்பனின் கவித் திறமையை என்ன என்று சொல்லுவது? என்ற கருத்தும் ஒரு ’ப்ளாக்’கில் வாசித்தேன்.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (5-Feb-20, 1:35 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 46

மேலே