ஆசிரியர் டைரி 4

எந்தக் குழந்தையும் நல்ல குழந்தைதான் மண்ணில் பிறக்கையிலே
அவர் நல்லவர் ஆவதும் தீயவர் ஆவதும் வளரும் சூழலிலே......

வருடம் பிறந்த அடுத்த நாளே எனக்கு எங்கள் பகுதி H1 காவல் நிலையத்தில் இருந்து அழைப்பு .....

ஹலோ! அமுதா மேடம்மா...?

ஆமாங்க! வணக்கம்! நீங்க யார் பேசுறது...?

மேடம்! நான் H1 போலிஸ் ஸ்டேஷன் கான்ஸ்டபுல் பேசுறேன்.... உங்க ஸ்கூல்ல படிச்ச சத்தீஷ் (பெயர் மாற்றம் செய்துள்ளேன்) பிறந்த தேதி வேணும்....

ஏன் அவன் ஆதார் அட்டை ஓட்டர் ஐடில பிறந்த தேதி இருக்குமே....?

இரெண்டும் இல்லனு சொல்றான் மேடம்... ஸ்கூல் அட்மிஷன் ரெக்கார்டுல இருக்கும்ல....?

ஆமா! இருக்கும்... பட் அதுக்கு என்ன இப்ப அவசியம்.....?

மேடம்! பையன் ஒரு தெஃப்டு கேஸ்ல மாட்டிக்கிட்டான்...... அவன நாளைக்கு கோர்ட்ல ப்ரடுயூஸ் பண்ணனும்.... பிறந்த தேதி இருந்தா அவன இன்னைக்கு ராத்திரி சிறுவர் ஜெயில்ல வைக்றதா...புழல்க்கு கொண்டு போறதானு முடிவு பண்ணனும்.... இன்ஸ்பெக்டர் அவசரமா வாங்கிட்டு வர சொன்னாரு.... கொஞ்சம் ஹெல்ப் பண்ணுங்க மேடம்.....

மனம் எனக்கு அப்படியே கனத்துப் போய்விட்டது.... எனக்கோ உடல்நிலையும் சரியில்லை.... இரண்டு மாதத்திற்கு முன்பு தான் இவன் அண்ணன் பற்றிய விவரங்களை காவல் நிலையத்திற்குக் கொடுத்தேன்..... அவனும் ஒரு திருட்டில் கைதாகியிருந்தான்..... வந்த கான்ஸ்டபுல்.....உங்கள் மாணவனிடம் பேசுகிறீர்களா என்றார்.... அவர் கைப்பேசியில் அவனிடம் பேசினேன்....
முதலில் அவனிடம் நான் யார் பேசுகிறேன் என்று தெரிகிறதா என்றுக் கேட்டேன் .... தெரியுது...நீங்க அமுதா மிஸ் தானே என்றான்.... அவன் பிஞ்சுக் குரல்கூட மாறவில்லை.... எனக்கு கண்கலங்கிவிட்டது..... உனக்கு ஏண்டா இந்த வேல.... படிக்கும்போது எவ்ளோ அட்வைஸ் பண்ணேன்.... படிப்பத் தொடரச் சொல்லி எத்தன முறை உன்னத் தேடி வீட்டுக்கு ஆள் அனுப்பினேன்.... அவன் அழுகுரல் கேட்டது.... என்னால் என் கண்ணீரை கட்டுப்படுத்த முடியவில்லை.... அந்த கான்ஸ்டபுல் முன்பே அழுதுவிட்டேன்....
மேடம்! “அவன் வயசுக்கு இப்ப சிறுவர் ஜெயிலுக்கு தான் அனுப்புவோம்.... அங்க அவனுக்கு பாடம் நடத்துவாங்க, சிறு தொழில் சொல்லித்தருவாங்க..... ஒரு நல்ல மனிதனா வெளிய வருவான் கவலப்படாதிங்க” என்று எனக்கு ஆறுதல் கூறினார்...

இருந்தாலும் மனம் கேட்கவில்லை.... அவனிடம் மீண்டும் பேச வேண்டும் என்று தோன்றியது.... அதை குறிப்பால் உணர்ந்த கான்ஸ்டபுல்.... காவல் நிலையம் சென்றவுடன் அவனிடம் பேச அவர் கைபேசியில் என்னை அழைத்தார்..... மீண்டும் அவனிடம் அறிவுரைக் கூறினேன்... அவனும் அழுது கொண்டே நல்ல மனிதனாய் திருந்தி திரும்பி வருவேன் என்று வாக்குக் கொடுத்தான்.....

தாயார் மனநோயாளி .... தந்தை ரிக்க்ஷா ஓட்டுபவர்.... வரும் வருமானம் முழுதையும் குடித்தே தீர்ப்பவர்..... இரண்டு சிறுவர்களும் என்ன செய்வார்கள் ...?
தினமும் எங்கள் ஆசிரியர்கள் தான் வலுக்கட்டாயமாய் அவர்களை பள்ளிக்கு அழைத்து வருவார்கள்.... கை ,கால் ,முகம் கூட பள்ளியில் தான் வந்து கழுவுவார்கள்.... மாற்றுவுடையாக பழைய சீருடைகளை எடுத்துக் கொடுப்போம்..... காலை சிற்றுண்டி சிலநேரம் நானும் சிலநேரம் அவர்கள் வகுப்பாசிரியர்களும் வாங்கித் தருவார்கள்.... அதில் அண்ணனுக்கு பார்வை குறைபாடு ஏற்பட்டு அவன் வகுப்பு ஆசிரியரே மருத்துவ ஆலோசனப் பெற்று அவனுக்குக் கண்ணாடியும் வாங்கிக் கொடுத்தார்.... பள்ளியை பொறுத்தவரை அவன் கல்விக் கட்டணம் கட்ட வேண்டிய அவசியமில்லை......
இருந்தும் பள்ளி படிக்கும்போதே இரவில் பசிக்கு
உணவு வாங்க சின்ன சின்ன திருட்டில் சகோதரர்கள் இருவரும் ஈடுபட்டு அகப்பட்டுள்ளனர்.... என் கவனத்திற்கு வந்தபோது அப்போதே அவர்களுக்கு பலமுறை அறிவுரை கூறியுள்ளேன்.... இருவரில் ஒருவன் மிகவும் புத்திசாலி.... பெற்றோரின் அன்பு அரவணைப்பு பாதுகாப்பு இல்லாத சூழல்.... இருவரும் பள்ளிப் படிப்பை பாதியிலேயே விட்டுச் சென்றனர்.... சரியான நிரந்தர விலாசம் இல்லாததால் அவர்களை தேடிக் கண்டுபிடிக்க இயலவில்லை.....
பல நாட்களுக்குப் பிறகு அன்றுதான் அவன் குரலைக் கேட்டேன்........மனம் ஏனோ இன்னும் கலக்கத்திலிருந்து மீளவில்லை.... நல்லவனாகத் திரும்பி வருவான் என்ற நம்பிக்கையில் நான்.....

எழுதியவர் : வை.அமுதா (5-Feb-20, 6:45 am)
பார்வை : 114

மேலே